MAP

தங்கள் உரிமைகளை வலியுறுத்திப் போராடும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்திப் போராடும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

பாகிஸ்தானில் கிறிஸ்தவப் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு தாக்குதல்!

பாகிஸ்தானில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டியும், குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியும் அந்நாட்டு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார் பிரான்சிஸ்கன் துறவு சபையைச் சேர்ந்த அருள்தந்தை இலாசர் அஸ்லாம்.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

பாகிஸ்தானின் பிரான்சிஸ்கன் துறவு சபையைச் சேர்ந்த அருள்தந்தை இலாசர் அஸ்லாம் அவர்கள் நடத்திய விசாரணை ஒன்றில், அந்நாட்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் பிற பாலியல் வன்முறைகளுக்கு ஆளான கிறிஸ்தவப் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அவலநிலையை வெளிப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை தயாரித்து ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்புக்கு அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளது ICN செய்தி நிறுவனம்.

இவ்வறிக்கையில், 20 வயது நிறைந்த அஸ்மா என்பவர்  இவ்வாண்டு  மே மாதம்  3-ஆம் தேதி  சனிக்கிழமையன்று தனக்குத் தெரிந்த ஒரு நபரால் வாகனத்தில்  ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு , அங்கு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இந்தப் பாலியல் வன்கொடுமை  காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டதோடு, எதிர்காலத்தில் தங்களின் ஆசைக்கு மீண்டும் இணங்க மறுத்தால் அந்தக் காணொளியை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாக அச்செய்தி நிறுவனம் உரைத்துள்ளது.

மேலும் இதேயாண்டு  பிப்ரவரி 14-ஆம்  தேதி வெள்ளிக்கிழமையன்று,  துப்புரவுப் பணியாளராகப் வேலைசெய்து வந்த வீட்டில் இலாகூரைச் சேர்ந்த 17 வயது சாமியா என்ற இளம் பெண் இறந்து கிடப்பதை அவரது அன்னை கண்டதாகவும், ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக  அவ்வீட்டின்  உரிமையாளர் கூறியதாகவும், அதேவேளையில், மருத்துவ விசாரணையில் சாமியா கொலை செய்யப்படுவதற்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அவ்வறிக்கையில்  தெரியவந்ததுள்ளது  என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில் அருள்தந்தையின் அறிக்கையில் சுமைலா எனும் மற்றொரு பெண்ணின் பாலியல் வன்முறை  தாக்குதல் சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அதில் இதேயாண்டு  மார்ச் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, சுமைலா என்பவர்  தனது கணவருடன் பயணித்துக் கொண்டிருந்த போது, மூன்று ஆயுதமேந்திய நபர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இந்தத் தம்பதியர் கிறிஸ்தவர்கள் என்பதை கொள்ளையர்கள் அறிந்ததும், சுமைலாவை அவருடைய கணவரின் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்து, அவரை கடுமையாகத் துன்புறுத்தினர் எனவும் குறிப்பிட்டுள்ளது .

மேலும் பாதிக்கப்பட்டுள்ள  குடும்பத்தினருக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டி அந்நாட்டு அரசைக் கேட்டுக்கொண்டதாகவும், அதேவேளையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவ்வறிக்கையில் தந்தை அஸ்லம் அவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தித் தொகுப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜூன் 2025, 15:02