சொந்த நாட்டிலேயே புலம்பெயர்ந்தோராகும் மியான்மார் மக்கள்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
இவ்வாண்டு மார்ச் 28 அன்று, மியான்மாரின் Sagaing-Mandalay பகுதியல் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 5000 பேர் உயிரிழந்ததையடுத்து போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாக இராணுவ அரசு பலமுறை உறுதியளித்திருந்த போதிலும் வான்வழித்தாக்குதல் தொடர்ந்து இடப்பெற்றதின் காரணமாக 471 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய ஒன்றிய அரசு (NUG) குற்றம் சாட்டியுள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியான்மார் தேசிய ஒன்றிய அரசின் அறிக்கையின்படி, இந்தத் தாக்குதல்களில் 931 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என்றும், இதில் 183 பேர் குழந்தைகள், 212 பேர் பெரியவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தத் தாக்குதல்களில் கொத்துக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், ஜூன் 9, திங்களன்று, தாய்லாந்து எல்லை அருகிலுள்ள கரேன் மாநிலத்தின் காக்கரெய்க் பகுதியில் உள்ள பைங்யட் என்ற கிராமத்தில் நடந்த தாக்குதலில் 6 முதல் 8 வயதுடைய மூன்று பள்ளிக்குழந்தைகள், மற்றும் இருவர் உயிரிழந்ததாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மார், கொத்துக் குண்டுகளைத் தடை செய்யும் பன்னாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவது, மனிதாபிமான சட்டங்களை மீறுவது போன்ற போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பில்லாத மியான்மார் மக்கள், எங்கே தஞ்சம் தேடுவது எனத் தெரியாமல் தவிக்கிறார்கள் என்று மந்தாலே உயர்மறைமாவட்ட முதன்மைகுரு அருள்பணியாளர் Peter Sein Hlaing Oo அவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக மேலும் அச்செய்தி நிறுவனம் உரைக்கிறது.
மியான்மாரின் இராணுவ ஆட்சியில் ஏறக்குறைய 35 இலட்சம் மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தோராக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் அருள்பணியாளர் Peter Sein அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்