இரஷ்ய தாக்குதல்களில் கீவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேராலயம் சேதம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜூன் 10, இச்செவ்வாயன்று, உக்ரைனின் கீவ் மற்றும் ஒடேசா மீது இரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய மோசமானத் தாக்குதலில் ஏழு பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்றும், இந்தத் தாக்குதலில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமான, ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கியேவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித சோபியா பேராலயம் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
மேலும் இந்தத் தாக்குதலின்போது, ஏறத்தாழ 315-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன என்றும், இது 2022-இல் போர் தொடங்கியதிலிருந்து தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும் என்றும், உக்ரைன் அரசுத் தலைவர் வலோதிமிர் ஜெலென்ஸ்கி கூறியதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தித் தொகுப்பு.
பல்வேறு கலாச்சார மற்றும் மதத் தலைவர்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், உலகப் புகழ்பெற்ற மதத் தளங்களுடன் முக்கித்துவம் வாய்ந்த இந்தப் பேராலயத்தையும் ஒப்பிட்டுள்ளனர் என்றும், போர் தொடங்கியதிலிருந்து 670 வழிபாட்டுத்தலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 60 அருள்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மதத் தலங்கள் பரவலாக அழிக்கப்பட்ட்டுள்ளதாகவும் உக்ரேனிய வழிபாட்டுத்தலங்கள் அமைப்பு தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்திக் குறிப்பு.
ஜூன் 1, ஞாயிறன்று, இரஷ்ய விமானத் தளங்கள் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அங்கு மனிதாபிமான முயற்சிகள் தொடர்கின்றன என்றும் கூறும் அச்செய்தி, CNEWA போன்ற குழுக்கள் $3.5 மில்லியனுக்கும் அதிகமான உதவியை வழங்குகின்றன என்றும், பல்வேறு இத்தருணத்தில், மதத் தலைவர்கள் பலரும் அனைத்துலக நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர் மற்றும் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்காக இறைவேண்டல் செய்து வருகின்றனர் என்றும் உரைக்கிறது அச்செய்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்