பாகிஸ்தானில் நெருக்கடியான சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள்!
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
பாகிஸ்தானில் நெருக்கடியான காலங்களில் மக்கள் வாழ்கின்றார்கள், அங்கு பொருளாதாரம் கடினமான சூழ்நிலையில் உள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள், வேலையின்மையினால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் அருள்தந்தை ஆசிப் ஜான் கோகர்.
மே 31, சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி மறைமாவட்டத்தின் தலைமை பொறுப்பாளர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள திருத்தந்தையின் மறைபரப்புப் பணிகளுக்கான (PMS) தேசிய இயக்குநரும், மறைமாவட்ட முதன்மை குருவுமான அருள்தந்தை ஆசிப் ஜான் கோகர், யூபிலி ஆண்டை முன்னிட்டு ஃபீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
யூபிலியின் உணர்வை முழுமையாக ஏற்றுக்கொள்ள மக்கள் முயற்சிப்பதுடன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கையின் திருப்பயணிகளாக அதாவது, தங்கள் இதயங்களில் இயேசு கிறிஸ்துவை சுமந்துகொண்டு நடக்கிறார்கள் என்று பகிர்ந்துள்ளார் அருள்தந்தை ஆசிப் ஜான் கோகர்.
தனது மறையுரையில் நீதி, அமைதி, உண்மை ஆகிய மூன்று வார்த்தைகளை அழுத்தமாக கோடிட்டு காட்டும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மறையுரைகளை பாகிஸ்தானிய விசுவாசிகள் உற்று கவனிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார் அருள்தந்தை கோகர்.
திருத்தந்தையின் மறையுரையானது நற்செய்தியின் வழியில் இதயத்தை ஊடுருவிச் செல்ல மக்களை ஊக்குவிப்பதாகவும் அவரது வார்த்தைகளும், மறையுரையும் இக்கட்டான சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்தந்தை கோகர்.
அமைதி, உண்மை முற்றும் நீதியை குறித்து விளக்கமளித்துள்ள அருள்தந்தை கோகர் அவர்கள், பாகிஸ்தானின் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு புதிய நம்பிக்கையைத் தரும் முயற்சிகளில், இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி மறைமாவட்டத்தில் உள்ள குஜராத்தில் தூய ஜெபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டுவதும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்