திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களுக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஜூன் 23, திங்கள்கிழமை முதல் 27 வெள்ளிக்கிழமை வரை திருஅவையில் திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களுக்கான யூபிலியானது கொண்டாடப்படுகின்றது. ஜூன் 23, திங்கள்கிழமை மாலை உரோமில் உள்ள தூய பவுல் பெருங்கோவிலில் திருத்தொண்டர்களை வரவேற்றல், இசைக்கச்சேரி, போன்றவை பேரருள்திரு Frisina அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஜூன் 24, செவ்வாய்க்கிழமை தூய பேதுரு பெருங்கோவிலில் திருத்தொண்டர்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை அவர்கள், குருத்துவப்பயிற்சி பெறும் மாணவர்கள் வெளியிடங்களுக்குச் சென்று பணிபுரியும் மறைப்பணித் திருஅவையின் பணியாளர்களாகவும், மீட்கும் இறைவார்த்தையை அறிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் மேலும், திருப்பயணிகளாக மட்டுமல்லாது, நம்பிக்கையின் சான்றுகளாகவும் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று வாழ்த்தினார்.
ஆயர்களுக்கான யூபிலியை. முன்னிட்டு ஜூன் 24, செவ்வாய் மாலை 6 மணியளவில் ஒவ்வொரு ஆயரும் உரோமில் உள்ள ஒவ்வொரு தலத்திருஅவை ஆலயங்களில் வெவ்வேறு மொழிகளில் திருப்பலியினை நிறைவேற்றினர். ஜூன் 25, புதன்கிழமை தூய பேதுரு பெருங்கோவில் புனிதக்கதவு வழியாக கோவிலுக்குள் நுழைந்து திருப்பலியில் பங்கேற்ற ஆயர்கள், பிற்பகல் 12.30 மணியளவில் நடைபெற்ற திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் வழங்கிய மறைக்கல்வி உரையில் பங்கேற்றனர்.
அருள்பணியாளர்களுக்கான திருப்பலியை முன்னிட்டு ஜூன் 25, புதனன்று மாலை உரோமின் பல்வேறு தலத்திருஅவைகளில் ஆயர்கள் நிறைவேற்றும் திருப்பலியில் பங்கேற்கும் அருள்பணியாளர்கள், ஜூன் 26, வியாழனன்று காலை அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Lazzaro You அவர்கள் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் பங்கேற்கின்றனர். அதன் பின் உரோமில் உள்ள பிற மூன்று பெருங்கோவில்களின் புனிதக்கதவு வழியாக திருப்பயணிகளாக நுழையும் அருள்பணியாளர்கள், மாலையில் தூய பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் ரீனோ பிசிகெல்லா அவர்கள் நிறைவேற்றும் இயேசுவின் திருஇருதயப் பெருவிழா முன்தயாரிப்புத் திருப்பலியில் பங்கேற்கின்றனர். ஜூன் 27, வெள்ளிக்கிழமை இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவை முன்னிட்டு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில் பங்கேற்று அருள்பணியாளர்களுக்கான யூபிலியை சிறப்பிக்கின்றனர்.
ஜூலை 28, 29, ஆகிய நாள்களில் மின்னனு வழியாக நற்செய்தியை அறிவிக்கும் கத்தோலிக்க மறைப்பணியாளர்களுக்கான யூபிலியானது திருஅவையில் கொண்டாடப்படுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்