திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – நிர்வாகத்தினருக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவையில் யூபிலி ஆண்டு என்னும் தொடரில் இதுவரை எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டிற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஆணைமடலில் உள்ள கருத்துக்கள் குறித்து அறிந்துகொண்டோம். ஆணைமடலில் உள்ள அனைத்து எண்களும் நிறைவடைந்த நிலையில் இவ்வாரம் அதாவது ஜூன் 21, சனிக்கிழமை வத்திக்கானில் சிறப்பிக்கப்பட உள்ள நிர்வாகத்தினருக்கான யூபிலி பற்றி இன்றைய நம் திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 என்னும் தொடரில் காணலாம்.
ஜூன் 21, சனி மற்றும் 22, ஞாயிறு ஆகிய நாள்களில் வத்திக்கானில், ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கான யூபிலியானது நடைபெற உள்ளது. ஜூன் 21, சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 8. 30 மணியளவில் காம்பிடோலியோ என்னும் இடத்தில் ஜூலியோ சீசரே என்னும் அறையில், (“Ecological Debt”) சுற்றுச்சூழல் கடன் என்ற தலைப்பில் கூட்டமானது நடைபெற உள்ளது. PIER FERDINANDO CASINI என்னும் ஐக்கிய உள்பாராளுமன்றத்தலைவர் உரையுடன் ஆரம்பமாகும் இக்கூட்டத்தில், உரோம் நகர மேயர் ரொபெர்தோ குவல்தியேரி, லாட்சியோ நகர மேயர் பிரன்செஸ்கோ ரோக்கா ஆகியோர் பங்கேற்கும் நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர்களை வரவேற்க இருக்கின்றனர்.
அதன்பின் இத்தாலிய (செனட்டர்) அதிகார அவை அங்கத்தினர் மாரியோ மோன்தீ மற்றும் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் ஆகியோர் உரையாற்ற இருக்கின்றனர். எதிர்நோக்கின் கூட்டிசை என்ற தலைப்பில் மாலையில் நடைபெறும் இன்னிசைக் கச்சேரியுடன் முதல் நாள் நிகழ்வானது நிறைவு பெறுகின்றது. இரண்டாம் நாள் ஜூன் 22, ஞாயிறு திருத்தந்தையின் நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின் மாலையில் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் நடைபெறும் இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலியில் பங்கேற்கின்றனர்.
திருப்பலி நிறைவில் தூய மேரி மேஜர் பெருங்கோவில் நோக்கி இறைமக்களுடன் நற்கருணைப் பவனியில் பங்கேற்று திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் நற்கருணை ஆசீரினையும் பெறுகின்றனர்.
ஜூன் 21, 22, (சனி ஞாயிறு) ஆகிய நாள்களில் நடைபெறும் ஆட்சியாளர்களுக்கான யூபிலியைத் தொடர்ந்து இவ்வாரத்தில் வேறுபல யூபிலிகளும் நடைபெற உள்ளன. ஜூன் 23, 24 (திங்கள் செவ்வாய்) ஆகிய நாள்களில் அருள்பணித்துவ மாணவர்களுக்கான யூபிலியும், 25 புதன் ஆயர்களுக்கான யூபிலியும் வத்திக்கானில் நடைபெற இருக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்