நேர்காணல் – இளைஞர் பணிக்கான பயிற்சிப் பட்டறை அனுபவம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
துணிவு மிக்கவர்கள், துள்ளல் மனம் கொண்டவர்கள் இளைஞர்கள், ஆற்றல் மிக்கவர்கள் அறிவுப்பூர்வமாக செயல்படுபவர்கள் அவர்கள். ஒவ்வொரு இளைஞரும் வீர்ர். உடையாத பாறை போன்ற உள்ளம் கொண்டவர். இத்தகைய இளைஞர்களின் சக்தி அதிகமாக உள்ள நாடு இந்தியா. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு. நமது கத்தோலிக்க இளைஞர்களை, இயேசுவின் பார்வையில் உருவாக்கும் பணியை முதன்மையான பணியாகக் கொண்டது நமது தமிழ்நாடுக் கத்தோலிக்கத் தலத்திருஅவை. இளைஞராம் இயேசுவின் வழியில் புதிய சமூகம் படைக்க அயராது பணியாற்றிக்கொண்டிருக்கும் சிறப்பான தலத்திருஅவை. அவ்வகையில் தமிழ்நாடுக் கத்தோலிக்க இளைஞர்களை இயேசுவின் வழியில், உருவில் வளர்க்கும் வண்ணம் அண்மையில் நாகர்கோவிலில் நடைபெற்ற 12 நாள்கள் பயிற்சி பாசறை பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்சகோதரி சேசு பாக்கியம். புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்சகோதரி சேசு பாக்கியம் அவர்கள், தமிழ்நாடு ஆயர் பேரவைக் கத்தோலிக்க இளைஞர்கள் பயிற்சிப்பட்டறை பற்றியக் கருத்துக்களை நம்மிடத்தில் பகிர்ந்துகொள்ள உள்ளார். சகோதரி அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இளைஞர் பணிக்கானப் பயிற்சிப் பட்டறை
தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு நடத்திய “Pedagogy Pro – Youth Ministry” எனும் தலைப்பிலான 10 நாள் தங்குப்பயிற்சி கோட்டாறு மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அருள் வாழ்வு இல்லத்தில் மே 19 முதல் மே 30 வரை சிறப்பாக நடைபெற்றது. இப்பயிற்சி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்காக பணியாற்றும் வழிகாட்டிகள், அருட்சகோதரிகள் மற்றும் செயல்படுகிற இளைஞர்களை இளைஞர் பணிக்காக உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
பறை இசையுடன் பாரம்பரியத்தை சுடர்விட்டு பயிற்சி தொடங்கியது.
பயிற்சியின் நோக்கங்கள்:
· தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு கொள்கைகளின் அடிப்படையில் வழிகாட்டிகள் மற்றும் மாணவர், இளைஞர் இயக்கங்களை உருவாக்குவதற்கான அடித்தள பயிற்சிகளை வழங்குதல்.
· அருட்சகோதரிகள் மற்றும் அருட் பணியாளர்களை இளைஞர் பணிக்கான திறமையான வழிகாட்டிகளாக உருவாக்குதல்.
· சமூக பொறுப்புணர்வும் அருள்வாழ்வு அடிப்படையும் கொண்ட இளம் தலைவர்களை உருவாக்குதல்.
· தமிழ்நாட்டின் பள்ளி/கல்லூரிகளில் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்களை உருவாக்கி செயல் படுத்துதல்.
· இளைஞர் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்துதல்.
· இன்றைய சமூக சவால்களை எதிர்கொள்ள இளைஞர் பணி செய்பவர்களைகளை தயார் செய்தல்.
· திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய "Christus Vivit" (கிறிஸ்து வாழ்கிறார்) திருத்தூது ஊக்க உரையின் அடிப்படையில் இளைஞர் பணியாற்றுதல்.
பயிற்சியின் கருத்தாளர்கள்:
இப்பயிற்சியில் பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்:
பணி. ஜோசப் சந்தோஷ் (இளைஞர் பணியில் முனைவர் பட்டம்) – இன்றைய இளைஞர்களின் தன்மை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வகுப்பு.
முனைவர். லியோ பிரைட் – இளைஞர் வழிகாட்டிகளுக்கான தனிப்பட்ட பண்புகள்.
பணி. மார்ட்டின் யோசு – தமிழ்நாட்டில் இளைஞர் இயக்கத்தின் வரலாறு.
பணி. ஜெனித் (Madha TV தொழில்நுட்பத் துறை பொது மேலாளர்) – செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இளைஞர் பணியில் அதன் பயன்பாடு.
பணி. நெல்சன் மற்றும் குழுவினர் – போதை பழக்கம், மீட்புப் பணி குறித்த செயல்முறை விளக்கம்.
பணி. சவரிமுத்து – அடிப்படை உரிமைகள் மற்றும் புத்தக வாசித்தலின் முக்கியத்துவம்.
பணி. சைமன் – சமூக ஊடகங்கள் மற்றும் அவற்றை ஒழுங்காக கையாளும் வழிகள்.
திரு. ஜான் பீட்டர் – சமூக பகுப்பாய்வு.
மேதகு ஆயர் நசரேன் சூசை, தமிழ்நாடு இளைஞர் பணிக்குழு தலைவர், திருத்தந்தையின் “கிறிஸ்து வாழ்கிறார்” திருத்தூது உரையை விளக்கி கிறிஸ்து வாழ்கிறார் ஒளியில் இளைஞர் பணி என்பதைப் பற்றிய புரிதலை வளர்த்தார்.
பணி. எடிசன், தமிழ்நாடு இளைஞர் பணிக்குழு செயலர், இயக்கக் கொள்கைகளையும், கூட்டங்கள் நடத்தும் முறைகளையும் செயல்முறை விளக்கமாக அறிமுகப்படுத்தினார்.
பயிற்சியின் முக்கிய அம்சமாக, பங்கேற்பாளர்கள் அருகிலுள்ள பங்குத் தளங்களுக்கு சென்று இளைஞர் இயக்கங்களை சந்தித்து கள அனுபவம் பெற்றனர்.
ஆரல்வாய்மொழியில் புனித தேவசகாயம் அவர்களின் சிறை, கொல்லப்பட்ட இடம், ஆலயம் ஆகிய இடங்களை பார்வையிட்டு, இளைஞர் பணி தமிழ் கத்தோலிக்க பாரம்பரியத்துடன் இணைந்துள்ளதை அனுபவித்தனர்.
ஒவ்வொரு நாளும் திருப்பலியுடன் துவங்கிய பயிற்சியில் மாலை நேரங்களில் நாட்டுப்புற கலைகள், பாடல்கள், விளையாட்டுகள், குழுச் செயல்பாடுகள் நடைபெற்றன.
மே 29 அன்று கலை இரவு நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்கள் நாட்டுப்புற கலைகளை அரங்கேற்றினர்.
மே 30 அன்று ஆயர் நசரேன் சூசை திருப்பலியையும், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவையும் தலைமை தாங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்