MAP

இந்தோனேசியாவில் பாதிக்கப்பட்டுள்ள  இயற்கைவளம் இந்தோனேசியாவில் பாதிக்கப்பட்டுள்ள இயற்கைவளம்   (AFP or licensors)

இயற்கையைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இந்தோனேசிய கப்புச்சின் துறவிகள்!

இந்தோனேசிய அரசால் உலகளாவியச் சுற்றுலாத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள தோபா ஏரி, 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை வெடிப்பின் காரணமாக உருவானது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

அதிகப்படியான நிலப் பயன்பாடு மற்றும் மரங்கள் வெட்டப்படுவதால் தோபா ஏரியின் நீர்மட்டம் குறைந்து அதன் சமநிலை பாதிக்கப்படுகிறது என்றும், ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி பூர்வகுடி மக்களின் உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாநிலத்தில் உள்ள கப்புச்சின் துறவிகள் வலியுறுத்துவதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

தோபா ஏரியைப் பாதுகாக்கும் உள்ளூர் மக்களின் போராட்டத்தை ஆதரிப்பதோடு பயங்கரமான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் நில உரிமை தொடர்பான மோதல்கள் அனைத்தும் இயற்கை சுரண்டல்களின் விளைவாகும் என்று ஜூன் 3, செவ்வாய் அன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் கப்புச்சின் சபையினுடைய மேதான் மாநிலத்தின் நீதி, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைப்பின் தலைவர் அருள்பணியாளர் ஹிலாரியஸ் கேமிட் அவர்கள் தெரிவித்துள்ளதாக அச்செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

தோபா ஏரிக்கு அருகில் உள்ள 1,84,486  ஹெக்டேர் நிலத்தைப் பயன்படுத்த 1983-ஆம் ஆண்டு மரக்கூழ் நிறுவனத்தித்திற்கு அளித்த உரிமங்களை நிறுத்தி வைக்குமாறு பூர்வகுடி மக்களால் போராட்டங்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளதாக அச்செய்தி நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும், பல தலைமுறைகளாக இயற்கையைப் பாதுகாத்து வரும் பூர்வகுடி மக்களின் கோரிக்கைகளை முழுமையாக ஆதரிப்பதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பதன் பெயரில் குற்றவியல் வழக்குகள் மூலம் அம்மக்களை அச்சுறுத்துவதை அரசு நிறுத்த வேண்டும் என்றும் அருள்பணியாளர் கேமிட் கூறியதாக அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசிய அரசால் உலகளாவியச் சுற்றுலாத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஏரி, 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை வெடிப்பின் காரணமாக உருவானது என்றும், 30 கிலோ மீட்டர் அகலமும்,1000 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இது என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜூன் 2025, 13:18