இந்துத்துவ அடிப்படைவாதிகளிடமிருந்து காக்க கிறிஸ்தவர்கள் கோரிக்கை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்திய நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவ அடிப்படைவாத குழுக்களால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் வேளை, அவற்றை முடிவுக்குக் கொண்டுவருமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கிறிஸ்தவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாகக் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
Rashtriya Christian Morcha என்ற பெயரில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து ஜூன் 9, இத்திங்களன்று, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்ட ஆட்சியரிடம் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அனுப்பவேண்டிய தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையொன்றை வழங்கியதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
50 பேர் கொண்ட குழுவை தலைமையேற்று வழிநடத்திய அதுல் ஜோசப் அவர்கள், மாவட்ட உயர் அதிகாரி அவர்கள் மனுவை பரிசீலனைக்கு அனுப்புவதாக உறுதியளித்ததாகக் கூறினார் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களையும், பொய்யான மதமாற்ற வழக்குகளையும் எதிர்கொண்டு வருவதால், இம்மனுவை அனுப்பவேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்பட்டது என்று உரைத்ததாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் எடுத்துக்காட்டியுள்ளது.
இந்தியாவின் 140 கோடி மக்களில் 2.3 விழுக்காட்டைக் கொண்ட கிறிஸ்தவர்கள், நாட்டின் அரசியலமைப்பு காட்டும் விழுமியங்கள் மற்றும் மதச்சார்பற்ற மற்றும் மக்களாட்சிக் கொள்கைகளை எப்போதும் கடைபிடித்து வருவதாக அந்த நான்கு பக்க தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அச்செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டுகின்றது.
இந்நிலையிலும் கூட, வலதுசாரி இந்து குழுக்கள் தொடர்ந்து தங்களைக் குறிவைத்து தாக்கி வருவதாகவும், பல மாநிலங்களில், வழக்கமான இறைவேண்டல் கூட்டத்தை நடத்துவது கூட மிகவும் சிரமமாக இருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலித் மற்றும் பூர்வக்குடியைச் சேர்ந்த கிறிஸ்தவர்களின் அவல நிலையை மேலும் எடுத்துக்காட்டி, அவர்கள் பாகுபாடு காட்டப்பட்டு, அதிகரித்து வரும் விரோதங்களையும் வன்முறையையும் தாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று தீர்மானங்கள் அடங்கிய இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு.
கிறிஸ்தவர்கள் தங்கள் மதச் சுதந்திரத்தைக் கடைபிடிக்கவும், பின்பற்றவும், பரப்புரை செய்யவும் தங்கள் அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்கவும் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல் சம்பவங்களிலும் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு உத்தரவிடவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்களை அகற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்யவும் அவ்வறிக்கையில் அவர்கள் முர்முவை வலியுறுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்