காலநிலை நெருக்கடி குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆசியாவில் பெரும்பான்மையான மக்கள் காலநிலை நெருக்கடியைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று தான் உணர்வதாகவும், ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் (FABC) ஒரு பகுதியாக இருக்கும் மனித மேம்பாட்டு அலுவலகம், மக்களை மேலும் விழிப்புணர்வடையச் செய்வது முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் ஆயர் Allwyn D’Silva
ஜூன் 27, வெள்ளிக்கிழமை வெரித்தாஸ் வானொலி நிகழ்விற்கு வழங்கிய நேர்காணலின் போது இவ்வாறு எடுத்துரைத்துள்ளார் மும்பை உயர் மறைமாவட்ட முன்னாள் துணை ஆயர் Allwyn D’Silva அவர்கள், ஆசிய கண்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு காலநிலை நெருக்கடி குறித்து நன்கு தெரியாது என்ற தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் நலன் குறித்த கருத்துக்களை அடிக்கடி வலியுறுத்துவதால் பசுமை ஆயர் (green bishop) என்று தனது உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நண்பர்களால் அழைக்கப்படும் ஆயர் டி'சில்வா அவர்கள், காலநிலை நெருக்கடி குறித்த விழிப்புணர்வை எல்லா நிலையில் இருப்பவர்களிடத்திலும் ஏற்படுத்தும் வண்ணம், ஆயர்கள், பெண்கள் மற்றும் வணிகத்துறையினருக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காலநிலை நெருக்கடி குறித்து மக்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கான சிலுவைப் போரில் குருத்துவ மாணவர்களது உருவாக்குநர்களின் ஈடுபாடும், அதை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியமும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார் ஆயர் டி'சில்வா.
ஆசியாவில் உள்ள தலத்திருஅவை மட்டுமல்லாது முழு ஆசியாவும் இந்த கால நிலை நெருக்கடி குறித்த பிரச்சனையை அறிந்துகொள்ள வைப்பதே தான் முதலில் முயற்சிக்கும் செயல் என்று எடுத்துரைத்துள்ள ஆயர் டி'சில்வா அவர்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க தற்போது அலுவலகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இயற்கையைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் மனித வளர்ச்சிக்கான வத்திக்கானின் அர்ப்பணிப்பு என்று கூறியுள்ள ஆயர் டி'சில்வா அவர்கள், மும்பையில், இயற்கையைப் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் மக்கள் தங்கள் பங்கைச் செய்ய தலத்திருஅவை மக்களை ஊக்குவிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "இறைவா உமக்கே புகழ்" என்ற சுற்றுமடல் ஆழமான தாக்கத்தை தன்னுள் ஏற்படுத்தியது என்றும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தொடர்ந்து பணியாற்ற தன்னைத் தூண்டியது என்றும் பகிர்ந்துகொண்டுள்ளார் ஆயர் டி'சில்வா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்