அருளாளராக உயர்த்தப்பட உள்ள Floribert Bwana Chui
மெரினா ராஜ் – வத்திக்கான்
தெருவோரக் குழந்தைகளுக்கானப் பணியினை ஆற்றி சன் எஜிதியோ குழுமத்தின் முதல் அருளாளராக Floribert Bwana Chui அவர்கள் திகழ இருக்கின்றார் என்றும், தொண்டுப்பணிகள் ஆற்றி ஒவ்வொரு நபரின் மதிப்புள்ள வாழ்க்கையின் பிம்பத்தை உருவாக்க விரும்பியவர் அவர் என்றும் கூறினார் கோமா சன் எஜிதியோ குழுமத்தின் பொறுப்பாளர் Aline Minani
ஜூன் 15 ஞாயிறனறு உரோம் புனித பவுல் பெருங்கோவிலில் அருளாளராக உயர்த்தப்பட உள்ள Floribert Bwana Chui அவர்கள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு எடுத்துரைத்தார் காங்கோ ஜனநாயகக் குடியரசின் கோமாவில் உள்ள சன் எஜிதியோ குழுமத்தின் பொறுப்பாளர் Aline Minani.
தெருவோரக் குழந்தைகளுக்கானப் பணியில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொண்ட ஃபுளோரிபெர்ட் அவர்கள், வீடற்ற இளையோர், கல்வி கற்க முடியாத சிறார், ஆகியோரின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய தன்னை அர்ப்பணித்தவர் என்றும் எடுத்துரைத்தார் மினானி.
ஸ்வாஹிலி மொழியில் மைபோபோ என்று அழைக்கப்படும் ஃபுளோரிபட் அவர்கள் ஒருமுறை புகாவு துறைமுகத்தில் ஒரு படகில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது தனியாக விடப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு ஆதரவளித்து, அச்சிறுவனை அவனது பெற்றோர்களிடம் ஒப்படைக்க அயராது உழைத்த நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார் மினானி.
ஜோனதன் என்ற அந்த பத்து வயதுச் சிறுவன் தற்போது வளர்ந்து இளைஞனாக இருக்கும் நிலையில் ஃபுளோரிபெர்ட் அவர்களிடமிருந்து தான் பெற்ற இரக்கத்தையும் அன்பையும் நினைவுகூர்ந்து "தெருக்களில் இருந்து தன்னைக் காப்பாற்ற கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு வானதூதர்” என்று அவரைப் புகழ்ந்ததாகவும் தெரிவித்தார் மினானி.
அமைதி, ஒற்றுமை மற்றும் ஒன்றிப்பு கொண்ட மனிதராகத் திகழ்தவர் புளோரிபர்ட் ப்வானா சூய் என்றும், 'எல்லாரும் ஒரே மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் காங்கோவை தான் கனவு காண்பதாக அவர் எடுத்துரைத்ததாகவும் கூறிய மினானி அவர்கள், சமூகத்திலும் அதற்கு வெளியேயும், அவர் தன்னைச் சுற்றி மகிழ்ச்சியை மட்டுமேக் காண விரும்பினார் என்றும் கூறினார்.
சன் எஜிதியோ குழுமத்தால் ஏழைச்சிறார்களுக்கு உணவு வழங்கும் நேரத்தில் குழந்தைகளோடு குழந்தையாக அவரும் இருப்பார் என்று தெரிவித்த மினானி அவர்கள், உணவு பரிமாறும்போது "யார் பணியாற்றுகின்றார்கள், யார் பணியினைப் பெறுகின்றார்கள்” என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு அவரின் பணி இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
நேர்மையாக வாழ்ந்தவர், இலஞ்சம் கொடுக்க மறுத்தவர், பொது நலனுக்கு ஊறு விளைவிக்கும் மக்களைத் தடுத்தவர், வன்முறையாளர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு தனது 26 வயதில் கொல்லப்பட்டவர் என்றும், ஃப்ளோரிபர்ட் ப்வானா சூயின் அருளாளர் பட்டம் பெற இருப்பது, முழு காங்கோ ஜனநாயகக் குடியரசிற்கும் மகிழ்ச்சியின் தருணமாக இருக்கும் என்றும், காங்கோ மக்களை ஒன்றிணைத்து அவர்களின் நாட்டின் தலைவிதியைப் பற்றி சிந்திக்க வைக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார் மினானி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்