MAP

வெள்ளத்தால் சூழ்ந்துள்ள மியான்மார் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்துள்ள மியான்மார் பகுதி   (AFP or licensors)

வடக்கு மியான்மார் வெள்ளத்தால் மோசமான மனிதாபிமான நிலைமை!

ஏறக்குறைய ஒரு வாரமாக நீடித்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளம், வடக்கு மியான்மரை, குறிப்பாக சாகாயிங் பகுதி மற்றும் கச்சின் மாநிலத்தைத் தாக்கியுள்ளது.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

மியான்மார் நாட்டிலுள்ள யாங்கோன் பகுதியில் ஏறக்குறைய ஒரு வாரமாக நீடித்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளம், வடக்கு மியான்மரை, குறிப்பாக சாகாயிங் பகுதி மற்றும் கச்சின் மாநிலத்தைத் தாக்கியுள்ளது என்றும், இந்நிலை நான்கு ஆண்டுகால உள்நாட்டு போரினால் போராடிக் கொண்டிருந்த பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது ஃபீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம்.

ஜூன் 2, திங்கள்கிழமை அன்று வெளியிட்ட செய்திகளில் இவ்வாறு தெரிவித்துள்ள ஃபீதேஸ் செய்தி நிறுவனம், இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின்  நிலைமை மோசமாக உள்ளதாகவும், கச்சின் மாநிலத்தின் மேல் பகுதி, மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள், சிசாவ் நகரில் உள்ள அகதிகள் முகாம்கள் போன்றவை நீரில் மூழ்கியுள்ளன, மாலிகா போன்ற பல ஆறுகள் நிரம்பி வழிவதாகவும் கூறியுள்ளது.

பொதுவாக, ஜூன் மற்றும் ஜூலை மாத இறுதியில், மழைக்காலத்தின் நடுப்பகுதியில் மட்டுமே ஆறுகள் பெருக்கெடுக்கும் நிலையில், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே மழை பெய்து நாடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

போர், நிலஅதிர்வு, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளால் விவசாயிகளும், ஆயிரக்கணக்கான மக்களும் புலம்பெயர்ந்தோர் ஆகியுள்ளனர் என்றும், மனிதாபிமான உதவி அதிகரித்து வந்தாலும் மக்களின் தேவையும் அவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள்  அதிகரித்து வருகிறது என்றும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரின் புதிய அறிக்கையானது, இராணுவ வன்முறை மற்றும் பொருளாதாரத்தின் சரிவால் மியான்மாரில் மனித உரிமை நெருக்கடியும், அடிப்படை உதவியும் அதிகரித்து வருவதை உறுதிப்படுத்துகிறது என்றும் அச்செய்தி நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.

கடந்த மார்ச் 28, வெள்ளிக்கிழமை அன்று சாகாயிங் பகுதியில், ஏற்பட்ட நிலநடுக்கமானது, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமாக்கி, ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த நிலையில் தற்போது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூன் 2025, 12:27