மனிதகுலம் மீண்டும் ஒளியின் பாதைகளில் நடக்கத் தொடங்கும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
புனித பூமியில் நடைபெற்று வரும் போரால் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் ஒளியானது பறிக்கப்படுகின்றது என்றும், இத்தகைய வன்முறைச்சூழலை நாம் நிறுத்த வேண்டும், துன்புறுவோர்களையும் குற்றவாளிகள் அல்லாதவர்களையும் கடவுள் காப்பாற்றட்டும் என்றும் கூறினார் அருள்பணி ஃபல்தாஸ்
அண்மையில் அவசர சிகிச்சை தேவைப்படும் காசாவைச் சேர்ந்த குழந்தைகள் குழு இத்தாலிக்கு வந்ததை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு எடுத்துரைத்தார் எருசலேம் புனித பூமியின் காவலராகிய பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் இப்ராஹிம் ஃபல்தாஸ்.
காசாவில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடம் தேவை என்று வலியுறுத்திய ஃபல்தாஸ் அவர்கள், மனிதகுலம் மீண்டும் ஒளியின் பாதைகளில் நடக்கத் தொடங்கும் என்று நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து செபிப்போம் என்றும் கூறினார்.
அண்மையில் 17 பாலஸ்தீன குழந்தைகளையும் 53 குடும்ப உறுப்பினர்களையும் காசா பகுதியிலிருந்து இத்தாலிக்கு மாற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று எடுத்துரைத்த அருள்பணி ஃபல்தாஸ் அவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காசாவிலிருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இத்தாலியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கும் பல மனிதாபிமான செயல்பாடுகளின் உதவியாளராக இருந்து வருகிறார்.
2023 நவம்பர் மாதம் காசாவின் குழந்தைகளுக்கு எப்படி உதவுவது என்று சிந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தாகவும், அதன்பின் உரோமில் உள்ள பம்பினோ ஜெசு மருத்துவமனைக்குச் சென்று அவர்களிடம் அக்குழந்தைகளுக்கு உதவக் கேட்டுக்கொண்டதாகவும் பகிர்ந்துகொண்டார்.
அன்று முதல், இத்தாலிய அரசானது குழந்தைகளின் நோய்கள் மற்றும் நலவாழ்வுத் தேவைகளுக்கான சிறப்பு மருத்துவமனை வசதிகளை அடையாளம் காண்பதற்கும், குறிப்பாகத் தோல் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதற்கு உதவி வருவதாகவும் தெரிவித்தார் அருள்பணி ஃபல்தாஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்