கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் முன்னேற்றம்
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
கொரியப் போர் நடந்ததன் ஆண்டு நினைவாக ஜூன் 22 ஞாயிற்றுக்கிழமை அன்று கொரிய திருஅவையால் நடத்தப்பட்ட கொரிய மக்களின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான செப வழிபாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகள் மியோங்டாங் பேராலயத்தில் கூடியிருந்தனர்.
மறைந்த கர்தினால் ஸ்டீபன் கிம் சௌ-ஹ்வானால் 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நல்லிணக்கக் குழுவின் 30வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், மியோங்டாங் பேராலயத்தில் உள்ள ஆன்மீக மையத்தில் ஒரு கருத்தரங்குடன் செபவழிபாடும் நடத்தப்பட்டது.
இந்த வழிபாட்டின் போது மறையுரை வழங்கிய சியோல் பேராயர் பீட்டர் சுங் சூன்-தைக் அவர்கள், கொரியாவில் வடக்கு, தெற்கு என 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும், தொடர்ந்த பதற்றம் மற்றும் மோதலுக்கு மத்தியில் வெறுப்பும் பகைமையும் வளர்ந்து வருகின்றன எனவும், 'நீங்கள் அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்' என்று இயேசு சொன்னது போல, கிறிஸ்தவர்களாகிய நாம் அமைதி நோக்கிய முதல் படியை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். மேலும், நல்லிணக்கக் குழுவின் துணைத் தலைவரான அருட்தந்தை சூ-யோங் ஜங் கூறுகையில், கொரிய நாடுகளுக்கு இடையேயான பதட்டநிலைகளுக்கு மத்தியில் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்கப்படுத்துவதாகவும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உறுதியுடன், தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிகள் இருந்தபோதிலும், கொரிய தீபகற்பத்தில் பிரிவினையைக் கடந்து அமைதியை வளர்க்க நற்செய்தியில் வேரூன்றிய இந்தக் குழு, பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு போன்ற இடங்களில் நடந்து வரும் போர்களின் மத்தியில், நல்லிணக்கத்திற்கான அடித்தளத்தை அமைப்பதில் கொரியா ஒரு முன்மாதிரியாக இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதாகவும், சியோலில் 2027ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலக இளைஞர் தினத்திற்கு முன்னதாக, அமைதியை வலியுறுத்தி முன்னேற்றுவதற்கான உறுதியான முயற்சிகள் மற்றும் உரையாடல்களை இளைஞர்கள் வழிநடத்தி செல்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்