மத்தியப்பிரதேசத்தில் கிறிஸ்தவர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல்!
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
கடந்த ஜூன் 22- ஆம் தேதி, திங்கள்கிழமை இரவு புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள நேபா நகர் என்ற கிராமத்தில் ஏறத்தாழ 150 இந்துத்துவவாதிகள் ஒரு மத போதகரின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை மூன்று கிறிஸ்தவர்களுடன் சேர்த்து தாக்கியதாக அங்குள்ள போதகர் கோகாரியா சோலங்கி அவர்கள் யூக்கான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், மத்தியப்பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஏழை தலித் கிறிஸ்தவர்களைத் தாக்கி அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று, ஓர் இந்து தெய்தவத்தை வணங்கும்படி கட்டாயப்படுத்திய வலதுசாரி இந்துத்துவவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போதகர் சோலங்கி அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவை ஓர் இந்து ஆதிக்க நாடாக மாற்ற முயற்சிக்கும் இந்து குழுக்களால் கிறிஸ்தவர்கள் மீது பொய்யான மதமாற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது வழக்கமாக இருப்பதாகவும் போதகர் சோலங்கி மற்றும் பிற கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவித்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
நிகழ்ந்த இந்தச் சம்பவத்திற்கு விரைவில் நீதி வழங்கப்படாவிட்டால், பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தப்போவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்கத் தவறிய உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுகபோவதாகவும் போதகர் சோலங்கி அவர்கள் கூறியதாகவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
இதற்கிடையில் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, காவல்துறை அதிகாரிகள் வெளிப்படையாக இந்துத்துவவாதிகளை ஆதரிகின்றனர் என்றும், இச்சம்பவம் கொடூரமான மற்றும் இதயத்தை உடைக்கும் ஒரு செயல் என்றும் இதை நேரில் பார்த்த கிறிஸ்தவர் ஒருவர் கூறியுள்ளதையும் அச்செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தலைநகர் போபாலை தளமாகக் கொண்ட கத்தோலிக்கத் தலைவரான டேனியல் ஜான், அவர்கள், இந்தத் தாக்குதல் மத்தியப்பிரதேசத்தில், குறிப்பாக, அண்மைய காலமாக, கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான திட்டமிட்ட இந்துத்துவவாதிகளின் தாக்குதல்கள் என்றும், இம்மாநிலத்தில் இந்து சார்புடைய பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சி செய்கிறது என்றும் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.
மேலும் ஜான் அவர்கள், கிறிஸ்தவர்களை குறிவைத்துத் தாக்கும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மதச் சுதந்திரத்தை நிலைநிறுத்தவும் அவர் மாநில அரசை வலியுறுத்தினார் என்றும், கிறிஸ்தவர்களும் இந்துக்களைப் போலவே இந்நாட்டின் குடிமக்கள் என்றும், தெரிவித்ததையும் எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்