MAP

இறைவேண்டல் செய்யும் பெண் இறைவேண்டல் செய்யும் பெண்   (AFP or licensors)

இறைவேண்டல் கூட்டங்களை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!

மத வழிபாடுகளை நடத்துவது சட்டத்தை மீறுவதல்ல, தனிநபர் ஒவ்வொருவரின் நம்பிக்கைக்கேற்ப மதம் சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கும், இறைவேண்டல் கூட்டங்களை நடத்துவதற்கும் இந்திய அரசியலமைப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

இந்தியாவின் மக்கள்தொகை அதிகமாக உள்ள மாநிலமான உத்திரபிரதேசத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதிகரித்துவரும் நிலையில், அவர்கள் இறைவேண்டல் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை கிறிஸ்தவர்கள் வரவேற்றுள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூன் 20 அன்று இறைவேண்டல் கூட்டங்களை நடத்துவது தொடர்பாக, கிறிஸ்தவர்கள் அளித்த மனுக்களை பரிசீலனை செய்து உள்ளூர் காவல்துறையின் கருத்தை பெற்ற பிறகு சட்டத்தின் படி முடிவு  செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் அச்செய்தி நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும் மத வழிபாடுகளை நடத்துவது சட்டத்தை மீறுவதல்ல என்றும், தனிநபர் ஒவ்வொருவரின் நம்பிக்கைக்கேற்ப மதம் சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கும், இறைவேண்டல் கூட்டங்களை நடத்துவதற்கும் இந்திய அரசியலமைப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்ததோடு, இவ்வாறான செயல்முறைகள் பொது ஒழுங்கை பாதிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டதையும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இறைவேண்டல் கூட்டங்களை நடத்த உள்ளூர் காவல் துறை அனுமதி மறுத்ததால் உயர்நீதி மன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டது என்று மனுதாரர்களில் ஒருவரான போதகர் சுரேஷ் குமார் தெரிவித்ததையும் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.

காவல்துறையினர் எந்தவொரு விசாரணையுமின்றி இறைவேண்டல் கூட்டங்களை நடத்துபவர்களையும், விசுவாசிகளையும் கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கமான ஒன்றாகவே உள்ளது என்றும் தனது வருத்தத்தை அச்செய்தி நிறுவனத்திடம் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மதமாற்றம், சமயச் சீர்குலைவு போன்றவற்றை காரணங்களாகக் காட்டி இறைவேண்டல் கூட்டங்களை நடத்த அனுமதி மறுக்கிறார்கள் என்றும், இவ்வாறான குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றும், அம்மாநிலத்தில்  அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் போதகர் ஜாய் மேத்யூ அவர்கள் கூறியதையும் எடுத்துரைத்துள்ளது அந்நிறுவனம்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் உத்திரபிரதேச மாநிலத்தில் 2021-ஆம் ஆண்டு மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிராக 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், ஆனால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் கூட மதமாற்றம் நடந்தது என உறுதிசெய்யப்படவில்லை என்றும் போதகர் மேத்யூ கூறியதாகவும் இச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஜூன் 2025, 14:31