பப்புவாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த கிறிஸ்தவர்கள் அழைப்பு!
சுஜிதா சுடர்விழி -வத்திக்கான்
இந்தோனேசியாவில் உள்ள பப்புவா நகரில் இராணுவ நடவடிக்கைகளையும் கிளர்ச்சிப் படைகளுடனான தொடர்ச்சியான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருமாறும், விசுவாசிகளைக் கொல்லும் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கிறிஸ்தவத் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
மே 31, சனிக்கிழமையன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்தும் குழுவின் நடுவர் பென்னி கியே வெளியிட்ட அறிக்கையொன்றில், மே மாதம் இரண்டாவது வாரத்தில் கிளர்ச்சியாளர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர் என்றும், இதில் இறந்த 18 பேரும் கிளர்ச்சியாளர்கள் என்று இராணுவம் கூறியது என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் “எங்கள் மக்களின் வீடுகளுக்கு முன்பாகவும், தேவாலயங்களுக்கு முன்பாகவும், தோட்டங்களிலும், பப்புவா நிலம் முழுவதிலும், அதிலுள்ள பிற வன்முறை பகுதிகளிலும், கொல்லப்பட்டு அழிக்கப்பட்டு வரும் எங்கள் மக்களுக்காக நாங்கள் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்” என்று பென்னி கியே கூறியதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கிறது.
பப்புவாவில் அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் ஆயுத வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மனித உரிமைகள் நலத்துறையின் அமைச்சர் உடனடியாக மாற்றுக் கொள்கைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இந்தோனேசியாவில் 1960-களில் டச்சு காலனித்துவ ஆட்சியின் முடிவுக்குப் பிறகு, கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழும் பப்புவாவை இணைத்ததிலிருந்து வன்முறை மற்றும் இறப்புகளால் பப்புவா மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இராணுவத்திற்கும் சுதந்திர ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஆயுத வன்முறை கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று இடம்பெயர செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்