MAP

இறைவனுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி  (AFP or licensors)

பேராயர் கசிமீர் ஞானாதிக்கம் அவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கசிமீர் ஞானாதிக்கம் அவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஜூன் 14ஆம் தேதி அவ்வுயர் மறைமாவட்டத்தில் சிறப்பிக்கப்படுகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கசிமீர் ஞானாதிக்கம் அவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஜூன் 14ஆம் தேதி அவ்வுயர் மறைமாவட்டத்தில் சிறப்பிக்கப்படுகின்றது.

தற்போதைய சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி, உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஒன்றிணைந்து ஏற்பாடுச் செய்துள்ள இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் சனிக்கிழமையன்று உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி  அவர்கள் நூற்றாண்டுக் கொண்டாட்டத் திருப்பலியை நிறைவேற்றுவதுடன், திருப்பலிக்குப்பின், முன்னாள் பேராயர் கசிமீர் ஞானாதிக்கம் அவர்களின் வாழ்வு மற்றும் மேய்ப்புப்பணி குறித்த நினைவு புத்தகம் ஒன்று வெளியிடப்படும்.

அதன்பின் முன்னாள் பேராயரின் கல்லறை ஆசீர்வதிக்கப்படுவதைத் தொடர்ந்து, அப்பேராயரின் வாழ்வு, சான்று நடவடிக்கைகள், அர்ப்பணத்துடன் கூடிய ஆயர் பணிகள் ஆகியவைகளுக்கு நன்றி நவிலும் விதமாக மதிய உணவு விருந்து இடம்பெறும்.

1925ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி பிறந்த முன்னாள் பேராயர் கசிமீர் ஞானாதிக்கம் அவர்கள், 1957ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி இயேசு சபையில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

1985ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் தேதி மதுரை பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டு பொறுப்பேற்ற இவர்,1987ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி சென்னை மயிலை பேராயராக நியமிக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தன் 68ஆம் வயதில் இறைபதம் சேர்ந்தார் பேராயர் கசிமீர் ஞானாதிக்கம்.

1925ஆம் ஆண்டு பிறந்த இவரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கிறது, இவர் இறுதியாகப் பணியாற்றிய சென்னை மயிலை உயர்மறைமாவட்டம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஜூன் 2025, 15:34