தாய்லாந்தில் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட வணிக நிர்வாகக் கூட்டம்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஜூன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாய்லாந்தில் உள்ள பான் பூ வான் என்னும் மேய்ப்புப் பணி மையத்தில், கிறிஸ்தவ விழுமியங்களை தொழில் மேலாண்மையுடன் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள, கத்தோலிக்க வணிக மேம்பாட்டுத் திட்டத்தின் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக, தாய்லாந்து மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கத் தொழிலதிபர்கள் ஒன்று கூடியதாக செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டம், 38 நாடுகளைச் சேர்ந்த, 45,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், உலகளாவிய வர்த்தகத்தில் நம்பிக்கைச் சார்ந்த தலைமையை ஊக்குவிக்கிறது என்றும், அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
தாய்லாந்தின் கத்தோலிக்க வணிக நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்கள் எனப்படும் இந்த அமைப்பு, வணிகத்தை ஆன்மிகத்துடனும், ஒழுக்க நெறிமுறைகளுடனும் வழிநடத்தும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், மேற்கொண்டுவரும் தொழிலை கடவுளின் அழைப்பாகப் புரிந்து கொள்ளவும் வலியுறுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ள இச்செய்தித் தொகுப்பு, பிலிப்பீன்சில் இந்த முயற்சி ஏற்கனவே 20,000 கிறிஸ்தவ வணிகர்கள் மற்றும் நிபுணர்களின் சகோதரத்துவம் சங்கத்தின் உறுப்பினர்களைச் சென்றடைந்துள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள நிறுவனங்களை நிர்வகிக்கும் கத்தோலிக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்றும், பாங்காக் பேராயர் பிரான்சிஸ் சேவியர் விரா ஆர்பொன்ட்ரத்தனா மற்றும் ஆசிய ஆயர்கள் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் அருள்தந்தை வில்லியம் லாரூஸ் இருவரும் கலந்து கொண்டு நம்பிக்கை மற்றும் வணிகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பிற்கு தலத் திருஅவை வழங்கிவரும் ஆதரவைச் சுட்டிக்காட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக கிறிஸ்தவ வணிக நிர்வாகிகள் சங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தக் கூட்டம், தாய்லாந்தின் கத்தோலிக்க வணிக நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்கள் சங்கம் மற்றும் பிலிப்பீன்சின் கிறிஸ்தவ வணிக மற்றும் தொழில் முனைவோரின் சகோதரத்துவ கூட்டமைப்பால், இணைந்து நடத்தப்பட்டது என்றும் அச்செய்திக் குறிப்பு உரைக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்