MAP

ஜெருசலேம் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் ஆன்டன்அஸ்ஃபர். ஜெருசலேம் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் ஆன்டன்அஸ்ஃபர்.  (Caritas Jérusalem )

காசாவில் மனிதாபினான உதவிகளை வழங்கிவரும் காரித்தாஸ் அமைப்பு

ஜெருசலேமின் காரித்தாஸ் அமைப்பு : வெறுங்காலுடன் குழந்தைகள் குப்பைத் தொட்டிகளில் உணவைத் தேடுவதும், கொசுக்கள் நோய்களைப் பரப்புவதும், உணவுகள் வழங்கப்படும் நிகழ்வுகள் இரத்த வெள்ளமாக மாறுவதும் இதயத்தை உடைக்கின்றன.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகும்,  மிகவும்  ஆபத்தான சூழ்நிலையில்  ஜெருசலேமின் காரித்தாஸ் அமைப்பு, எல்லாவற்றையும்  இழந்துத் துன்புறும் காஸாவின் மக்களுக்கு, உயிர்காக்கும் மனிதாபிமானப்  பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது என்று   அதன் இயக்குனர் ஆன்டன் அஸ்ஃபர் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில், ஜெருசலேம் காரித்தாஸ் 122 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை 10 மருத்துவ பிரிவுகளில் நியமித்துள்ளது என்றும், அவர்கள் அன்றாட  குண்டுவீச்சுகளுக்கு  இடையே, ஒவ்வொரு நாளும் மரணங்களைச் சந்தித்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர் என்றும் அஸ்ஃபர்  தெரிவித்துள்ளார்.

மேலும், காஸாவின் இந்த மோசமான சூழலில் உணவு, குடிநீர் மற்றும் மருந்துப்பொருட்களின் பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அக்குழுவினரிடம் இருந்த கையிருப்புகளும் தீர்ந்து விட்டதாகவும் கவலை  தெரிவித்துள்ளார் அஸ்ஃபர்.  

வெறுங்காலுடன் குழந்தைகள் குப்பைத் தொட்டிகளில் உணவைத் தேடுவதும், கொசுக்கள் நோய்களைப் பரப்புவதும், உணவுகள் வழங்கப்படும் நிகழ்வுகள் இரத்த வெள்ளமாக மாறுவதும் இதயத்தை உடைக்கும் காட்சிகள் என்றும்  ஜெருசலேம் காரித்தாஸின் இயக்குனர்  விவரித்துள்ளார்.

இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான குண்டுவீச்சுகளால், காசாவின்  திருக்குடும்ப பங்கில் உள்ள கிறிஸ்தவர்கள் மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்கொள்கின்றனர் என்றும், காரித்தாஸின் பணியாளர்களைத் ஆபத்திற்கு உட்படுத்த விரும்பாமல் தொடர்ந்து காஸாவின் நிலையை மதிப்பீடு செய்து வருவதாகவும் இயக்குனர் அஸ்ஃபர்  தெரிவித்துள்ளார்.

வேளாண்மை, கல்வி மற்றும்  பொருளாதாரம்  முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், புனித பூமிக்கான திருப்பயணங்கள்  நிறுத்தப்பட்டதாலும்   பெத்லகேம்  போன்ற நகரங்கள் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார் அஸ்ஃபர்.

மேலும், 2,00,000 தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என்றும், விவசாயத்தில்  ஈடுபட வருவோருக்கு விதைகள் மற்றும் சிறு வணிகத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சித்து வருவதாகவும் அஸ்ஃபர்   கூறியுள்ளார்.

ஜெருசலேமின் காரித்தாஸ் அமைப்பு, ஜெனின், நூர் ஷம்ஸ், மற்றும் துல்கரேம் முகாம்களில் வாழும் 40,000 உள்ளூர் அகதிகளுக்கும் உதவி வருகிறது என்றும், போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து சமூகத்தில் நம்பிக்கையை மீண்டும் விதைக்க முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குனர் அஸ்ஃபர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஜூன் 2025, 16:07