MAP

கர்தினால் Dominique Mathieu கர்தினால் Dominique Mathieu  

ஈரானில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க பிரார்த்தனை

போர் ஒரு தீர்வல்ல, மாறாக இரண்டு தரப்பினரும் போர்நிறுத்தத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - கர்தினால் டோமினிக் ஜோசப் மேத்தியூ.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

இஸ்ராயேலுக்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள மோதல்களால், இடம்பெயர்ந்தவர்கள், காயமடைந்தவர்கள், உயிரிழப்பவர்கள் ஆகியோருடன் தான் நேரடி தொடர்பில் இருப்பதாகவும், இரு நாடுகளிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  வத்திக்கான் செய்திக்கு தெரிவித்துள்ளார் தெஹ்ரான்-இஸ்பஹான் பகுதியின் பேராயர் மற்றும் கர்தினால் டோமினிக் ஜோசப் மேத்தியூ.

ஈரானில் தான் தங்கியுள்ள நகரின் 11வது மாவட்டத்தில், தற்போதுள்ள தோற்றம் மாயை போலிருக்கிறது, இப்பொழுதுதான் இணையத்தள இணைப்பு மீண்டும் வேலை செய்கிறது என்றும், சூரியன் பிரகாசிக்கிறது, பறவைகள் பாடுகின்றன மற்றும் காலநிலை இனிமையாக உள்ளது என்றும் கூறியுள்ளார் கர்தினால் மேத்யூ.

இவை அனைத்தும் வெறுமனே தோற்றம் போன்று காட்சியளிக்கின்றன, காரணம், இங்கு தங்க பாதுகாப்பான இடம் இல்லை, ஏவுகணைகள் வருவதை முன்னறிவிக்கும் மணி எழுப்பும் ஒலிகளும்  இல்லை என்று வத்திக்கான் ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார். கர்தினால் மேத்தியூ.

இரு நாடுகளுக்கும் இடையே நேரடி எல்லைகள் இல்லை எனவும், மோதல்கள் எல்லாம் வான்வழியில் நிகழ்கிறது எனவும், எடுத்துரைத்துள்ள கர்தினால் மேத்யூ அவர்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மோதும் நிலைமை உள்ளதால் இது ஒரு சமச்சீரற்ற  போராக, மற்ற நாடுகளின் வான்வழிகளைத் திட்டமிட்டு மீறுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிலர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர், மற்றவர்களோ நாட்டின் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், தற்போது சில தூதரகங்கள், இந்த வார இறுதிவரை காத்திருந்து, முழுமையான வெளியேற்றத்தைப் பற்றி சிந்திக்க உள்ளன என்றும் கூறியுள்ளார் கர்தினால்.

போர் ஒரு தீர்வல்ல, மாறாக இரண்டு தரப்பினரும் போர்நிறுத்தத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இதற்காக நாங்கள்  செபிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ள கர்தினால்  மேத்யூ அவர்கள், இந்நாட்களில் பலர் தன்னிடத்தில் வெளிப்படுத்திய ஒற்றுமையையும் ஆதரவையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தார்.

இயேசுவின் இரத்தத்தைச் சிந்துவதன் வழியாக உலகைக் காப்பாற்றிய கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்று குறிப்பிடுள்ள கர்தினால் அவர்கள், எங்களுக்காக செபிக்கும் எல்லோருக்கும் இதயத்தின் ஆழத்தில் இருந்து  நன்றிகள் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜூன் 2025, 12:24