MAP

அரசரின் கனவுக்கு விளக்கமளிக்கும் தாவீது அரசரின் கனவுக்கு விளக்கமளிக்கும் தாவீது  

தடம் தந்த தகைமை : அரசரின் கனவுக்கு தானியேலின் விளக்கம்!

இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ரசரே! இதுவே நீர் கண்ட கனவு; அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம். அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார். உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார். எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது. உமக்குப்பின் உமது அரசைவிட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்; அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும்.பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்; அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும். மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களி மண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்ததுபோல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும்.

இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்; ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காததுபோல், அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்கமாட்டார்கள். அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும். மனிதக்கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூன் 2025, 11:44