MAP

தொழுநோயாளரை நலமாக்கும் இயேசு தொழுநோயாளரை நலமாக்கும் இயேசு  

தடம் தந்த தகைமை - மற்ற ஒன்பது பேர் எங்கே?

நற்பண்புகளும், நற்செயல்களும் யாரிடம் நிறைந்திருந்தாலும் நலம்பட எடுத்துப் பாராட்டும் நிறைமனம் நமக்கும் தேவை. பாராட்ட விரும்பாதவர்கள் மறைமுகமாகப் பழிவாங்குகிறார்கள்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இயேசு : (சமாரியரிடம்) பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது. (லூக் 17:17&19)

தேவைக்குக் கடவுளைத் தேடி வந்து, தேவை முடிந்தபின் அவரைத் தேடா மனநிலை மனிதர் பலருக்குள் உண்டு. இந்த உணர்வே தொழுநோயாளர் வழியாக வெளியானது. அவர் ஒரு சமாரியர். யூதரின் பகைக் குழுமத்தைச் சார்ந்தவர். இயேசு ஒரு யூதர் எனத் தெரிந்தும் தயங்காமல் திரும்பி வந்து நன்றி சொல்ல வந்தார். அது அவர் தன்னுள் கொண்டிருந்த நல்லுணர்வாம் நன்றித்தனத்தின் நிறைவேற்றல்.

இனப்பகை எனக் கருதியவரையும் இழிவாக நடத்தாமல் இரக்கத்தைப் பொழிந்த இயேசுவின் செயல் எல்லை கடந்த அன்பின் முதிர்ச்சி. நன்றி சொல்ல வந்தவரை வாழ்த்திப் பாராட்டி, உடனிருந்தவர்களுக்கு நற்பாடம் கற்பிக்கும் சிற்பியாக இயேசு அங்கே துலங்குகின்றார். நற்பண்புகளும், நற்செயல்களும் யாரிடம் நிறைந்திருந்தாலும் நலம்பட எடுத்துப் பாராட்டும் நிறைமனம் நமக்கும் தேவை. பாராட்ட விரும்பாதவர்கள் மறைமுகமாகப் பழிவாங்குகிறார்கள். நன்றியுணர்வு நோயைக் குணமாக்கும் ஆற்றல் மிக்கது.

இறைவா! தினம் தினம் உம்மிடமிருந்து பெறும் நன்மைகளுக்கு ஈடாகக் கொடுக்க எதுவும் இல்லை. எனினும் நான் பெற்ற வாழ்வை நன்றியின் பரிசாக்குவதில் மகிழ்கிறேன்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூன் 2025, 12:09