தடம் தந்த தகைமை – உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
பத்துத் தொழுநோயாளர்கள் இயேசுவை நோக்கி, ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும், என கேட்க, இயேசுவோ, நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் என்றார். (லூக் 17:12&14)
எங்கும் சட்டம், எதிலும் சட்டம் என்பதே யூத நடைமுறையாய் இருந்தது. அதிலும் குறிப்பாக தொழுநோயாளர் பற்றியச் சட்டங்களை லேவியர் 13, 14 அலகுகள் மிகக் கடுமையாகக் குறிப்பிடுகின்றன.
இப்பகுதியில் வரும் 10 தொழுநோயாளர்கள் 4 பண்புகளைப் பாங்குற வெளிப்படுத்துகின்றனர். 1. இயேசுவின் மீதான நம்பிக்கை 2. சட்ட மதிப்பினால் தூரமாக நின்று வேண்டல் 3. இயேசுவின் இரக்கத்திற்காக இறைஞ்சுதல் ; 4. இயேசுவின் வார்த்தைக்குப் பணிதல்.
ஊருக்குப் புறம்பானவர்கள் தம்மை நம்பி, நாடி வந்துவிட்டார்கள். தன்னால் முடியும், தானே நலம் கொடுக்கலாம். எனினும் சட்ட மதிப்பு மனநிலை கொண்ட அவர்களுக்காகத் தாமும் சட்டத்தை மதித்து, குருக்களிடம் காண்பிக்கப் பணிக்கின்றார் இயேசு. இது லேவி 14:2-3னை நிறைவு செய்யும் மனப்பாங்கு. இறுக்கமான சட்டத்தையும் இரக்கமாய் அணுகுகின்றார். இயேசுவின் இந்த அணுகுமுறை நம்மைச் சமூக, திருஅவை, நாட்டின் சட்டங்களை மதித்து வாழ வழிகாட்டுகிறது. ஒரு மென்மையான கட்டளையில் மேன்மையான சக்தி மறைக்கப் பட்டுள்ளது.
இறைவா! எவரையும் மதிப்போடும் மாண்போடும் அணுகும் பரந்த மனம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்