தடம் தந்த தகைமை - அவரே என்னை அனுப்பினார்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை. அவரே என்னை அனுப்பினார், (யோவா 8:42) என்றுரைத்தார் இயேசு.
உண்மையைத் துணிந்து சொன்னவர் இயேசு. இதைச் சொன்னால் ஆபத்து, இதை இப்படிச் சொன்னால் தப்பிக்கலாம் என்ற வித்தைகள் துளியும் இல்லாதவர். யூதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த தவறான பார்வைகளைத் தவறென உணர்த்திட முனைந்தார். அதனை ஏற்கும் மனநிலை இல்லாமல் இயேசுவை எதிர்க்கவும், கொல்லவும் துணிந்தனர். அவர் வழியாக வானகத் தந்தை செயலாற்றுகின்றார் என்பதையும் நம்பிட மறுத்தனர். நம்பிக்கை அற்றவர்க்கு எல்லாமே தூரம்தான்.
இந்தியப் பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பணியாற்றுகையில் குடும்பக் கட்டுப்பாட்டு மையத் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். காரணம் கேட்டபோது ‘எனக்குத் தகுதியில்லை. நானே 6 குழந்தைகளுக்குத் தந்தை’ எனச் சொல்லிப் புன்னகைத்தார். நமக்கு நாமே உண்மையுள்ளவராக இருத்தல் அவசியம். அதைச் செய்யாமல் அடுத்தவரிடம் உண்மையைத் தேடுதலே எங்கும் விரவிக்கிடக்கின்ற ஆபத்து. உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதன்பொருட்டும் உண்மையை இழத்தலாகாது.
இறைவா! உயிரே போனாலும் நன்மை நிறைந்த உண்மையில் நிலைக்கும் உறுதியான உணர்வைத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்