MAP

குழந்தைகளுடன் இயேசு குழந்தைகளுடன் இயேசு 

தடம் தந்த தகைமை - சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்

குழந்தைகளின் முக்கியத்துவம், முன்னேற்றம், மகிழ்ச்சி, சுதந்திரம், போட்டியின்மை, ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றோடு அவர்கள் வழிகாட்டப்பட வேண்டியவர்கள், கரிசனைக்குரியவர்கள் என்ற கண்ணோட்டங்கள் இயேசுவில் வெளிப்பட்டன.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில்

இறையாட்சி இத்தகையோர்க்கே உரியது, (மாற் 10:14) என்றார் இயேசு.

இன்று குழந்தைகளை இறையன்பிற்கு ஒப்பிட்டுச் சொல்கின்றோம். ஆனால் அன்று 12 வயதுவரை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை. போர்கள், புரட்சிகள், நாடு கடத்தல்கள்,அடிமைத்தனம், இயற்கைச் சீற்றம், பஞ்சம், ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏறக்குறைய 16 வயதிற்குள் 60விழுக்காட்டு குழந்தைகள் இறந்து கொண்டிருந்தனர் என அன்றைய ஆய்வறிக்கைகள் அதிர்ச்சித் தகவல் தருகின்றன. எனவே இயேசுவின் ஆசி பெற்றால் நலமாய் வாழ்வர் என்ற நம்பிக்கையில் குழந்தைகளைப் பெற்றோர் அழைத்து வந்தனர். குழந்தைகளுக்கான வளர்ச்சியில் தடையிடுவோரை இயேசு பொறுத்துக்கொள்ளவில்லை. சீடர்களிடம் கடுஞ்சினத்தை வெளிப்படுத்துகின்றார். அவரது கோபத்தில் குழந்தைகளின் முக்கியத்துவம், முன்னேற்றம், மகிழ்ச்சி, சுதந்திரம், போட்டியின்மை, ஆளுமை வளர்ச்சி

ஆகியவற்றோடு அவர்கள் வழிகாட்டப்பட வேண்டியவர்கள், கரிசனைக்குரியவர்கள் என்ற கண்ணோட்டங்கள் கண்ணாடியாயின. இறையாட்சிப் பாதையில் எப்படிப்பட்ட சமூகம் உருவாக விரும்புகின்றோமோ அப்படி குழந்தைகளை உருவாக்குவது நம் பெருங்கடமை. குழந்தைகளிடம் மணலளவு அன்பைக் காட்டினால் மலையளவு அன்பைக் கொட்டுவார்கள்.

இறைவா! கண்டுகொள்ளப்படாத குழந்தைகளைக் கொண்டாடி உம் பாசம் பகிரும் வரம் தாரும்

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஜூன் 2025, 12:57