வேலை மற்றும் நிலங்களை இழக்கும் பெத்லகேம் மக்கள்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்
பாலஸ்தீனிய மேற்கு கரையில் உள்ள பெத்லகேமில் வாழும் மக்களின் வேலையின்மை 31 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எருசலேமில் உள்ள CNEWA எனப்படும் பாப்பிறை பணியகத்தின் மாநில இயக்குநர் திரு ஜோசப் ஹாஸ்பவுன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் காசாவில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பாலஸ்தீனிய மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளின் நிலை தொடர்ந்து மோசமாகி வருவதுடன், அந்நகரம் நாளொன்றிற்கு ஏறக்குறைய 2.5 மில்லியன் டாலர் மதிப்பிலான சுற்றுலா வருமானத்தை இழந்து வருகிறது என்றும் ஹாஸ்பவுன் கூறியுள்ளார்.
அங்கு இடம்பெற்றுவரும் போர் காரணமாக பெத்லகேமின் பல கடைகள், உணவகங்கள், மற்றும் கலாச்சார நிறுவனங்கள் மூடப்பட்டு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், வேலைவாய்ப்பைத் தேடி பெத்லகேமின் அதிகமான குடும்பங்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
CNEWA எனப்படும் பாப்பிறை பணியகம், தற்காலிக வேலை வாய்ப்பு மற்றும் நலவாழ்வு பராமரிப்பு உதவிகளை, அதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது என்றும், மேலும் இவ்வமைப்பு அரசுச் சாரா நிறுவனங்களுடன் இணைந்து, டார் அல்-கலிமா மற்றும் பெத்லகேம் பல்கலைக் கழக மாணவர்களுக்கும் உதவித்தொகைகள் வழங்கி வருவதாகவும் ஹாஸ்பவுன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய முக்கிய தேவையாக, புனித பூமியின் கைவினைப் பொருட்களின் கூட்டுறவுச் சங்கம் என்ற வர்த்தக அமைப்புக்கு ஒலிவ மரங்களை வாங்க உதவ வேண்டும் என்றும், இதன் மூலம் அதன் கலைஞர்கள் உலகளாவிய வணிகத்திற்காக கைவினைப் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் ஹாஸ்பவுன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்