MAP

கென்யாவில் பணித்தளங்களை மூடும் பெனடிக்டைன் அருள்சகோதரிகள்

நைரோபி பகுதி பணியாற்றுவதற்கு பாதுகாப்பானதாக மாறும் வரை, பெனடிக்டைன் சபை அருள்சகோதரிகளின் மறைபரப்பு நிலையங்களை காலவரையின்றி மூடுவதற்கான முடிவை எடுத்துள்ளோம் - அருள்சகோதரி ரோசா பாஸ்கல் OSB.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

நைரோபியின் கெரியோ பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் அனைத்துப் பணித்தளங்களையும்   பெனடிக்டைன் மறைபரப்பு சபை அருள்சகோதரிகள் மடுகிறார்கள் எனவும், அந்தப் பகுதியில் தினமும் நிகழும் தொடர்ச்சியான வன்முறைச் செயல்களால் காலவரையின்றி மூடுவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது ஃபீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம்.

ஜூன் 2, திங்கள்கிழமை அன்று பெனடிக்டைன் சபை அருள்சகோதரிகளின் தலைமை அருள்சகோதரி ரோசா பாஸ்கல் (OSB) அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட்ட உரையில், தூய மத்தியாஸ் முலும்பா ஆலயப் பங்குத்தந்தையான அருள்பணி அலாய் பெட் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நைரோபி பகுதியில் அமைதியாக பணிகளைச் செய்வதற்க்கான உறுதியற்ற சூழல்கள் நிலவுவதால் இது இறைபணியை மட்டுமில்லால் அருள்சகோதரிகளை  மனஉளைச்சலுக்கும், உளவியல் அதிர்ச்சிக்கும் ஆளாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி ரோசா பாஸ்கல் OSB.

எனவே, அப்பகுதி பணியாற்றுவதற்கு பாதுகாப்பானதாக மாறும் வரை, தங்கள் மறைபரப்பு  நிலையங்களை காலவரையின்றி மூடுவதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை, தங்களோடு பணிசெய்யும் அருள்சகோதரிகள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தங்கள் பணியைப் பார்வையிடுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுளாதாகவும் குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி ரோசா பாஸ்கல் OSB.

எனவே அமைதிக்கான நீடித்த தீர்வு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை அரசு இப்பகுதியில் உறுதிசெய்ய வலியுறுத்துவதாகவும், மூடப்பட்ட  பணிகளில் செசோங்கோச் மறைப்பணி மருத்துவமனையும் அடங்கும் என்றும் ஃபீதேஸ் செய்தி நிறுவனம்  கூறுகிறது.

மேலும் அப்பகுதியை விட்டு  பணியாளர்கள் வெளியேறுவதால் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ள தங்களால் இயலவில்லை என்று அச்சபை சகோதரிகள் தெரிவித்துள்ளதாக அச்செய்தி நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூன் 2025, 10:49