இயற்கைப் பேரிடர் காலத்தில் உதவும் கத்தோலிக்க பள்ளிகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதற்கும், இயற்கைப் பேரழிவு மேலாண்மைக்கு நம்மைத் தயார்செய்வதற்கும் ஏற்ற ஓர் அடிப்படை இடம் கத்தோலிக்க பள்ளிகள் என்றும் கூறினார் பேராயர் Ettore Balestrero.
ஜூன் 2, திங்கள் கிழமை முதல் 6, வெள்ளிக்கிழமை வரை, சுவிட்சர்லாந்தில் “உலகளாவிய தளத்தில் பேரிடர் அபாயக் குறைப்புக்கள் - தற்போதைய பாதுகாப்பான பள்ளிகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற எட்டாவது வட்ட மேசை மாநாட்டில் இவ்வாறு எடுத்துரைத்தார் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அனைத்துலக அமைப்புகளுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Ettore Balestrero.
பிலிப்பீன்ஸில் உள்ள கத்தோலிக்க கல்வி சங்கத்தின் பணிகள், பேரிடர் காலத்தில் பிறருக்கு உதவ முன்வரும் அவர்களின் அர்ப்பணிப்பு பற்றிய கருத்துக்களை எடுத்துக்காட்டிய பேராயர் Balestrero அவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி சமூகம் முழுவதற்கும் கட்டாய பேரிடர் தயாரிப்பு திட்டங்களை பிலிப்பீன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் பகிர்ந்துகொண்டார்.
பள்ளிகள், பொறுப்புக்களின் தோட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கல்வியை மேம்படுத்தும் இடம் என்றும், கடவுளால் ஒப்படைக்கப்பட்டு மனிதர்களின் பராமரிப்பில் இருக்கும் இயற்கையில் நேரடியான மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் வழியாக பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வியை மேம்படுத்த முடியும் என்றும் கூறினார் பேராயர் Balestrero.
இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்படும் மக்கள் அடைக்கலம் தேடும் இடமாக பள்ளிகள் விளங்குகின்றன என்றும், மக்கள் தங்களுக்கான ஆதரவையும் பொருளாதார வளங்களைப் பெறும் இடமாகவும் அவை திகழ்கின்றன என்றும் எடுத்துரைத்தார் பேராயர் Balestrero.
கத்தோலிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் பேரிடர் காலத்தில் ஒரு முக்கியமான மற்றும் ஈடுசெய்ய முடியாத பங்கை வகிக்கின்றன என்று வலியுறுத்திய பேராயர் Balestrero அவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளி குறித்து எடுத்துரைத்த பேராயர் Balestrero அவர்கள், அக்டோபரில் ஏற்பட்ட ஹெலன் சூறாவளிக்குப் பிறகு, வடக்கு கரோலினாவில் உள்ள இம்மாகுலேட் கத்தோலிக்க பள்ளியானது 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் இடமாக பயன்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
பொருள் தேவைகளுக்கு மேலதிகமாக, கத்தோலிக்க பள்ளிகள் மக்களுக்கு ஆன்மீக ஆதரவையும் வழங்குகின்றன என்றும், இயற்கை பேரழிவுகளின் விளைவாக பொருள் சேதத்தினால் ஏற்பட்ட அழிவுகள் மட்டுமன்றி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து, வாழ்நாள் முழுவதும் மக்கள் அனுபவிக்கும் துன்பத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் பேராயர் Balestrero.
கத்தோலிக்க பள்ளிகள் இரக்கத்தின் பள்ளிகளாக ஒவ்வொரு குழந்தையும் தங்களது மாண்பு, மீள்தன்மை மற்றும் நம்பிக்கையில் செழித்து வளரக்கக்கூடிய வகையில் பாதுகாப்பான பள்ளிகளாக இருக்க திருஅவை உறுதிபூண்டுள்ளது என்றும் கூறினார் பேராயர் Balestrero.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்