ஒடிசாவில் தாக்கப்பட்ட கிறிஸ்த மக்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களை 2000 பேர் கொண்ட ஒரு கும்பல் தாக்கியதில் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும், 20க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜுன் 21, சனிக்கிழமை இந்திய நேரம் காலை 9 மணியளவில் மல்கன்கிரி மாவட்டத்தின் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோடமடேரு கிராமத்தில் நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சியூட்டும் வன்முறை சம்பவமானது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களால் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ளது என்று இது குறித்து உள்ளூர் ஊடகத்தாருக்குத் தெரிவித்துள்ளார் சீர்திருத்தத் தலத்திருஅவையின் ஆயர் பல்லப் லிமா.
ஏறக்குறைய 2000 பேர் கோடமடேரு கிராம கிறிஸ்தவ மக்களைத் தாக்கிய நிலையில் செய்தி அறிந்து காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த முதலுதவி அளித்ததாகவும் செய்திகள் வெளிடப்பட்டுள்ளன.
இந்த வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரைவாகச் செயல்பட்டு விரிவான ஆதரவை வழங்க அதிகாரிகளையும் உதவி அமைப்புகளையும் ஊக்குவிக்குமாறு உள்ளூர் தலத்திருஅவை தலைவர்கள் ஊடகங்களை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில், இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், இது பகுதியில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அவர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலேசான காயமடைந்தவர்கள் தற்போது உள்ளூர் தலத்திருஅவைக் கட்டிடத்தில் தங்குமிடம் தேடுகின்றனர் என்றும், கோடமடேருவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்திற்கு அவசர உதவி தேவை, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட உடனடி நிவாரண முயற்சிகள் இடம்பெயர்ந்தவர்களுக்கும், அடைக்கலம் தேடுபவர்களுக்கும் மிக முக்கியமானவை என்று எடுத்துரைத்துள்ளார் சீர்திருத்தத் தலத்திருஅவையின் ஆயர் பல்லப் லிமா.
காயமடைந்த அனைவருக்கும், குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் முழுமையாக குணமடைவதை உறுதி செய்ய, தொடர்ந்து மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்றும் வலியுறுத்தியுள்ளார் ஆயர் லிமா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்