MAP

உயிர்த்த இயேசுவும் பேதுருவும் உயிர்த்த இயேசுவும் பேதுருவும் 

ஞாயிறு சிந்தனை : நிலைவாழ்வு தரும் புதுவாழ்வுக்குப் பிறப்போம்!

இயேசுவின் புனிதமிகு பாடுகளும், இறப்பும், உயிர்ப்பும், பேதுருவின் நற்செய்தி பணிக்கு உரமாக அமைந்தன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. திப 5:27b-32 40b-41 II. திவெ 5:11-14  III. யோவா 21:1-19)

பாஸ்கா காலம் 3-ஆம் ஞாயிறு தரும் சிந்தனை

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். பழைய வாழ்வுக்குரியவற்றைக் களைந்துவிட்டு புதிய வாழ்வுக்குரியவற்றை அணிந்துகொள்ள இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. ஒரு சிறிய கதையுடன் இன்றைய நாள் மறையுறைச் சிந்தனைகளை நாம் தொடங்குவோம். ஒருமுறை புத்தரிடம் சீடராகச் சேர்ந்து ஆசி பெறுவதற்காக தேவதத்தர் என்ற ஒருவர் வந்தார். அவரிடம் புத்தர், “நான் உன்னை என்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு உனக்கு ஆசிவழங்க வேண்டும் என்றால், நீ நாளை அதிகாலை 4 மணிக்குத் தனியாக வரவேண்டும்” என்றார். அதன்படி அவர் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு புத்தரின் குடிசைக்குத் தனியாக வந்தார். அவரைக் கூர்ந்து நோக்கிய புத்தர், “நான் உன்னைத் தனியாகத்தானே வரச்சொன்னேன். எதற்காக இப்படி இரண்டு மூன்று ஆட்களை உன்னோடு கூட்டிவந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அப்போது அவர், தனக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா? என்று திரும்பிப் பார்த்தார். அதற்கு புத்தர், “நான் வெளியே உள்ள ஆட்களைச் சொல்லவில்லை, உனக்கு உள்ளே இருக்கும் ஆட்களைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார். உடனே தேவதத்தர் தனக்குள் கவனித்தார். அப்போதுதான், தனக்குள் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வம், புகழ் எல்லாம் இருக்கிறது என்ற உண்மை அவருக்குப் புரிந்தது. உடனே அவர் புத்தரிடம், “எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் நான் என்னையே தகுதிப்படுத்திக்கொண்டு, மீண்டுமாக வந்து உங்களுடைய சீடராகச் சேர்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். ஓராண்டு காலம் முடிந்த பிறகு அவர் மீண்டும் புத்தரிடம் வந்தார். இப்போது அவரைப் பார்த்த புத்தர், அவர் மிகவும் பக்குவமடைந்து தனி ஆளாக வந்திருப்பதை அறிந்து, அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஆசி வழங்கினார்.

இயேசுவின் உயிர்ப்புக்கு முன்பு பேதுருவின் வாழ்வு

பேதுருவின் வாழ்வை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது மேற்கண்ட கதைதான் நம் நினைவுக்கு வருகின்றது. கிறிஸ்துவுக்கு முன் (கிமு) கிறிஸ்துவுக்குப் பின் (கிபி) என்று நாம் வரலாற்றை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பது போன்று, கிறிஸ்து உயிர்ப்பதற்கு முன் கிறிஸ்து உயிர்த்த பின் என்று பேதுருவின் வரலாற்றை நாம் இரண்டு பகுதிகளாகக் காணலாம். உயிர்த்த கிறிஸ்துவைக் காண்பதற்கு முன்பு வரை பேதுரு இவ்வுலகுக்குரிய காரியங்களில் மூழ்கிப்போய்க் கிடந்தார் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். காரணம், இயேசுவுடன் இணைந்த நிலையில் பெயரும், புகழும், செல்வாக்கும் பெற்று இவ்வுலகுக்குரிய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று பேதுரு தப்புக்கணக்குப் போட்டிருந்தார். குறிப்பாக, இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தபோது, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” (காண்க. மத்  16:22) என்று கூறி அவரைத் தடுத்ததையும்,   “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” (காண்க. மத் 19:27) என்று இயேசுவைப் பார்த்து கேள்வி எழுப்பியதையும், “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” (காண்க, லூக் 9:33) என்று இயேசுவின் உருமாற்ற நிகழ்வின்போது பரவசமான நிலையில் கூறியதையும், இறுதியாக, இயேசு கைது செய்யப்பட்டபோது மால்கு (யோவா 18:10) என்ற படைவீரனின் காதை வெட்டியதையும் பேதுருவின் உலகப்போக்கிற்கான செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். அதாவது, பேதுருவைப் பொறுத்தளவில் இயேசு என்ற மெசியா தாவீதைப் போன்று வாளேந்திப் போரிட்டு எதிரிகளை வென்று, அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யப் போகிறவர் என்றும், அவரது ஆட்சியில் தனக்கும் நிச்சயம் பங்குண்டு என்றும் நினைத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. அவரது கனவுகள் அனைத்தும் கானல் நீராய் கரைந்து போயின.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்பு பேதுருவின் வாழ்வு

இயேசுவின் பாடுகளும் மரணமும் பேதுருவுக்கு அவநம்பிக்கையைத் தந்திருந்ததால்தான், தனது சகத் தோழர்களிடம், ‘நான் மீன்பிடிக்கப் போகிறேன்’ என்று கூறி உடைந்துபோன உள்ளத்துடன் அவர் தனது பழைய வாழ்வுக்குத் திரும்புவதை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். ஆனால், உயிர்த்த ஆண்டவரின் நேரடிச் சந்திப்பும் உரையாடலும் அவருடைய வாழ்வை முற்றிலுமாக உருமாற்றுகின்றன. இப்பகுதியை லூக்கா நற்செய்தியில் வரும் “முதல் சீடரை அழைத்தல்” (காண்க. லூக் 5:1-11) என்ற நிகழ்வுடன்  ஒப்பிட்டுப் பார்ப்போம். கெனசரேத்து ஏரிக்கரையில், இயேசுவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு வலைவீசி பிடித்த மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்ற பேதுருவை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று இயேசு கூறிய வார்த்தைகள் இங்கே திபேரியக் கடலில் நிறைவேறுவதைப் பார்க்க முடிகின்றது. இயேசு பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? என்றும், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்றும் கேட்டபோது, “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்கிறார். ஆனால், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று மூன்றாம் முறை கேட்டபோது, பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” (யோவா 21:15-17) என்று தனது உள்ளத்தைத் திறப்பதைப் பார்க்கின்றோம். இயேசு கைது செய்யப்பட்டபோது அவரை மும்முறை மறுதலித்த பேதுரு, இப்போது அவர்மீது மும்முறை அன்பு அறிக்கை செய்கிறார். அதேவேளையில், இயேசுவும் மும்முறை தன்னை மறுதலித்த பேதுருவுக்குத் தன்மீது மும்முறை அன்புகூர வாய்ப்பளித்து அவரது குற்றத்தைப் போக்கி அவரைப் பணிவாழ்விற்கு அழைக்கின்றார்.

பேதுருவுக்கான கடமைகள்  

பேதுருவைப் நோக்கி, "என்மீது அன்பு செலுத்துகிறாயா" என்று மும்முறை கேள்வியெழுப்பும் இயேசு, முதலாவதாக, “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்கின்றார். இங்கே "ஆட்டுக்குட்டிகள்" என்பது தொடக்க கால கிறிஸ்தவர்களையும், "பேணி வளர்" என்பது அவர்கள்மீது காட்டவேண்டிய சிறப்பான அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றது. இரண்டாவதாக, “என் ஆடுகளை மேய்” என்கின்றார் இயேசு. இங்கே "ஆடுகள்" என்பது ஆட்டுக்குட்டிகளாகிய இறைமக்கள் மீது பொறுப்பாளர்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆயர்களைக் குறிக்கின்றது. ஆக, இயேசுவின் மக்களைப் பாதுகாக்க வேண்டிய ஆயர்களை நல்வழிப்படுத்தவும், அம்மக்களுக்கு நன்மையான காரியங்களை ஆற்றவும் அவர்களை வழிநடத்தவேண்டிய கடமையை நிறைவேற்றும்படி பணிக்கிறார் இயேசு. மக்களைப் பலிகொடுத்துத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முனையும் தலைவர்கள் மத்தியில், தன்னை இழந்து மக்களைக் காப்பாற்றும் நல்ல தலைவனாக மிளிர்ந்திட பேதுருவுக்கு அழைப்பு விடுக்கின்றார் இயேசு. மூன்றாவதாக, “என் ஆடுகளைப் பேணிவளர்” என்கின்றார் இயேசு. முதலில் தம் மந்தையாகிய ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்க்கும்படி அறிவுறுத்திய இயேசு, அடுத்து தனது ஆயர்களாகிய ஆடுகளைப் பேணிவளர்க்குமாறும் வேண்டுகிறார். அதாவது, மக்கள்மீது காட்டவேண்டிய அதே அக்கறையையும் பொறுப்பையும், மக்கள்மீது பொறுப்பாளர்களாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆயர்கள் மீதும் காட்ட வேண்டும் என்பதற்காக இயேசு இவ்வாறு கூறியிருக்கலாம். ஆக, இன்றைய நம் சூழலில் ஒரு மறைமாவட்டத்தின் ஆயர் என்பவர் தனது அருள்பணியாளர்கள்மீதும், அவர்தம் மந்தையாம் மக்கள்மீதும் கொண்டிருக்க வேண்டிய அன்பையும், அக்கறையையும், கரிசனையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது இப்பகுதி.  

பேதுருவின் தியாக மரணம்

முதலாவதாக, பேதுரு ஏற்கவிருக்கும் தலைமைப் பணி மற்றும் அவரது தலையாயக் கடமைகள் குறித்துக் கூறும் இயேசு, இரண்டாவதாக, பேதுரு ஏற்கவிருக்கும் தியாக மரணம் குறித்தும் அவருக்கு எடுத்துக்காட்டுகின்றார். “நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்ற வார்த்தைகள் வழியாக, பேதுரு எவ்வாறு தனது தியாக மரணத்தின் வழியாகக் கடவுளை மாட்சிப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றார் இயேசு. மேலும் இதைச் சொன்னபின் இயேசு பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்று கூறுவதையும் பார்க்கின்றோம். அப்படியென்றால், அவருக்கான பாதையைக் காட்டிவிட்ட இயேசு, அந்தப் பாதையே தனது பாதை என்றும், அதில் பயணிக்க தன்னைப் பின்தொடர்ந்து வருமாறும் அவருக்கு அழைப்புக் கொடுக்கின்றார். அடுத்து, "நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்" என்ற இயேசுவின் வார்த்தை,  "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்” (காண்க. யோவா 10:11) என்று கூறிய நல்லாயனாம் அவரின்  வழியில், அவரது பிரதிநிதியான பேதுருவும், தனது கரங்களை விரித்துக்கொடுத்து சிலுவைப்பலி ஏற்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறது.

புத்தொளிபெற்ற பேதுரு

உயிர்த்த இயேசுவுடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, உயிர்த்த ஆண்டவரின் தரிசனம் பேதுருவை பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்விற்குக் கடந்துபோகச் செய்கின்றது. ‘இனிமேல் இதுதான் எனது பாதை, இதில்தான் எனது பயணம்’ என்ற தெளிவு பிறக்கிறது. அதன் விளைவாகத் தனது ஒப்புயர்வற்றத் தலைவராம் இயேசுவுக்காக எதையும் இழக்கத் தயாராகிறார் பேதுரு. இயேசுவின் புனிதமிகு பாடுகளும், இறப்பும், உயிர்ப்பும் அவரது நற்செய்தி பணிக்கான உரமாக அமைகின்றன. அதன்பிறகு, முழுத்துணிவுடன் தனது நற்செய்திப் பணியைத் தொடங்கும் பேதுரு, “என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திபா 4:20) என்று கூறும் அளவிற்கு உயிர்த்த ஆண்டவரிடமிருந்து துணிவும் வலிமையும் பெறுகிறார். மேலும் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” என்றும், 'இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்' என்றும் எடுத்துரைக்கும் முதல் வாசகத்தின் இறைவார்த்தைகள் பேதுரு கொண்டிருந்த துணிவையும் பணிவையும் நமக்கு எடுத்தியம்புகின்றன. ஆகவே உயிர்த்த இயேசுவுக்கு நமது வார்த்தையாலும் வாழ்வாலும் சான்றுபகர வேண்டுமெனில் புனித பேதுருவைப் போல நாமும் பற்றுள்ள வாழ்விலிருந்து பற்றற்ற வாழ்விற்குக் கடந்து செல்ல வேண்டும்.

இயேசுவைத் துறக்கும் துறவியர்

இன்றையச் சூழலில், எல்லாவற்றையும் இயேசுவுக்காகத் துறந்துவிட்டோம் என்றுகூறி துறவற வாழ்விற்குள் நுழைந்த துறவியரில் பெரும்பாலோர், இயேசுவைத் துறந்துவிட்டு மற்ற எல்லாவற்றையும் பற்றிக்கொண்டுள்ளனர். தங்களின் பதவிக்காலம் முடிந்தும்கூட அந்தப் பதவியைத் துறக்கத் தயாராக இல்லை, தனக்கான சாதியப் பற்றைத் துறக்கத் தயாராக இல்லை, துறவற வாழ்வுக்கு சற்றும் பொருந்தாத ஆணவத்தையும், அகந்தையையும், மேலாதிக்கச் சிந்தனையையும் துறக்கத் தயாராக இல்லை. இப்படி இவற்றையெல்லாம் துறக்காமல் இருந்துவிட்டு, துறவற வாழ்வில் திருப்பொழிவு விழா, வெள்ளி விழா, பொன்விழா போன்ற விழாக்களைக் கொண்டாடும்போது மட்டும், “தாயின் கருவில் உருவாகுமுன்பே ஆண்டவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார், “தூய ஆவியார் என்னை அருள்பொழிவு செய்துள்ளார்” “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது" என்ற இறைவார்த்தைகளைக் கூறி அவர்களின் போலியான வாழ்வை மறைக்க முயற்சி செய்கின்றனர்.   

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்”  (குறள் - 341) என்ற திருக்குறளில், ஒருவர் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவராக இருக்கின்றாரோ, அந்தப் பொருளால் அவர் துன்பம் அடைவதில்லை என்கிறார் வள்ளுவர். ஆக, பற்றுள்ள வாழ்விலிருந்து பற்றற்ற வாழ்வுக்கு நாம் கடந்து செல்ல வேண்டும். இந்தக் கடத்தல் நிலை இல்லாத கிறிஸ்தவர்கள் தாம் பெரும் துன்பங்களையும் துயரங்களையும் தங்களுக்குத் தாங்களே வருவித்துக் கொள்கின்றனர். மாற்றத்தை நோக்கிக் கடந்து செல்லாது ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் நீரும் மனித வாழ்வும் நாற்றமெடுக்கத்தான் செய்யும்.  ஆகவே, பேதுருவைப் போன்று பழைய வாழ்வுக்குரியவற்றைக் களைந்துவிட்டு புதிய வாழ்வுக்குரியவற்றை அணிந்துகொண்டு நற்செய்தி அறிவிப்புப் பணியை நமது வாழ்வின் மையமாக்கிக்கொள்வோம். அதற்கான அருள்வரங்களை உயிர்த்த ஆண்டவர் நம் உள்ளங்களில் பொழிந்திட இறையருள் வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மே 2025, 11:09