ஆண்டவரின் விண்ணேற்றம் : உயிர்த்த ஆண்டவரின் நீட்சிகள் நாம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. திப 1: 1-11 II. எபி 9: 24-28; 10: 19-23 III. லூக் 24: 46-53)
கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார் என்பதற்காகப் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோ குலேக்சப் என்ற மறைப்பணியாளர் 1985-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மிகக் கடுமையாகத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட அவர், எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்தவர், “கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தேன் என்பதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமையாக வதைக்கப்பட்டேன். நான் சிறை கம்பிகளுக்குள் அடைபட்டிருந்தபோதும் கூட நற்செய்தியை அறிவிக்கத் தவறியதில்லை. சிறைக்குள் இருந்த அனைத்துக் கைதிகளுக்கும் நான் நற்செய்தியை அறிவித்து வந்தேன். சிறைக்கு வெளிய நான் நற்செய்தி அறிவித்திருந்தால் எத்தனை பேர் கிறிஸ்துவின்மீது நம்பிக்கைக் கொண்டிருந்திருப்பார்களோ, அதைவிட அதிகாகமாகவே சிறைக்குள் பலரை அவர்மீது நம்பிக்கைக்கு கொள்ளச் செய்திருக்கிறேன்” என்றார். பல்வேறு துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் அவமானங்களுக்கும் மத்தியில் கிறிஸ்துவை இன்முகத்தோடு அறிவித்த நற்செய்தி பணியாளர் கிறிஸ்டோ குலேக்சப் அவர்கள் உயிர்த்த ஆண்டவரின் நீட்சியாக வாழ்ந்திருக்கின்றார்.
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இயேசுவின் நீட்சிகளாய் அவரது நற்செய்தியை அறிவிக்க நாம் அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகமும் இதனையே மையக் கருத்தாகத் தாங்கி வருகின்றது. உயிர்த்தெழுந்த இயேசு வெளிப்படையாக சீடர்கள்காண விண்ணேற்றம் அடைந்த செய்தியை நற்செய்தியாளர் லூக்கா, தனது நற்செய்தியிலும், திருத்தூதர்ப் பணிகள் நூலிலும் பதிவு செய்திருக்கின்றார். தனது விண்ணேற்றத்திற்குப் பின்பு சீடர்கள் அவரது நீட்சிகளாகவும் சாட்சிகளாகவும் வாழ்ந்திட என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடக் கூறுகின்றார் இயேசு. முதலாவதாக, “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. "இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று கூறுகின்றார். உயிர்பெற்று எழுந்த இயேசு எம்மாவு வழியில் சீடர் இருவரைச் சந்திக்கும்போது, அவரது உயிர்த்தெழுதலின் உண்மை அர்த்தத்தைப் புரிந்துகொள்ள இயலாத அவர்களின் மனநிலையைக் கண்டதும், அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!” என்கின்றார். மேலும், மோசே முதல் இறைவாக்கினர் வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார் என்றும் பார்க்கின்றோம் (வச. 25-27). அப்படியென்றால், இவ்வார்த்தைகள் உணர்த்தும் அர்த்தங்கள் எவை என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.
வலிகளையும் துன்பங்களையும் ஏற்காத வாழ்க்கை உண்மையான வெற்றியின் அடையாளமாய் இருக்க முடியாது. இலட்சியத்தை வென்றுகாட்ட வேண்டும் என்றால் கூடவே வலிகளையும் சுமந்தே ஆக வேண்டும். வலிகளைச் சுமந்தால்தான் வழிகள் பிறக்கும். நாம் தொடக்கத்தில் பார்த்த நிகழ்வில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதில் அவரின் நீட்சியாக விளங்கிய கிறிஸ்டோ குலேக்சப் எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டார். இதனைத்தான், "பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது" (காண்க. யோவா 16:20-21) என்கின்றார். பழைய ஏற்பாட்டு நூல்களில் வரும் பெரிய மற்றும் சிறிய இறைவாக்கினர்கள் அனைவரும் யாவே இறைவனின் நீட்சிகளாக, இறைவார்த்தை அறிவிப்புப் பணியில் சந்தித்த எதிர்ப்புகளையும் சவால்களையும், துயரங்களையும், மரணங்களையும் நாம் அறிவோம். அதிலும் குறிப்பாக இறைவாக்கினர் எரேமியா இயேசுவின் வழியில் துன்புறும் ஊழியனாகவே மாறுகின்றார் (காண்க. எரே 20:7-12). அவ்வாறே இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு அவரின் நீட்சிகளாக, அனைத்து சீடர்களும் நற்செய்தி அறிவிப்புப் பணியில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர். ஆனால் அதேவேளையில் இந்தத் துயரங்கள்தாம் உயர்த்த ஆண்டவர் குறித்த அவர்தம் நற்செய்திப் பணிக்கு உரமாகவும் ஊக்கமாகவும் அமைந்தன. நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது. (2 கொரி 4:8-12), என்று புனித பவுலடியார் நற்செய்தி பணியில் ஏற்பட்ட துயரங்களைப் பற்றி பட்டியலிடும் அதேவேளையில், அப்படிப்பட்ட துயரநிலையிலும் கூட தங்களின் நம்பிக்கையை இழக்காத சூழல் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.
இரண்டாவதாக, இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்” என்கின்றார். இங்கே விண்ணேற்றத்திற்குப் பின்பு தனது நீட்சிகளாகப் பணியைத் தொடரும் சீடர்களுக்குத் தூய ஆவியாரின் துணை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தவராக இவ்வாறு உரைக்கின்றார். மேலும் ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட பிறகு புதுப்பொலிவுடனும், உத்வேகத்துடனும் உலகின் எட்டுத்திக்கும் நற்செய்திப் பணியைத் தொடரலாம் என்பதன் அடையாளமாகத்தான் அவர்களை எருசலேம் திருநகரிலேயோ தங்கியிருக்கும்படி அறிவுறுத்துகின்றார்.
மூன்றாவதாக, இயேசுவின் விண்ணேற்றம் இடம்பெறுகிறது. ‘இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்’ என்று வாசிக்கின்றோம். புதிய ஏற்பாட்டில் பெத்தானியா என்ற பெயர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது, மேலும் இயேசுவின் வாழ்க்கையில் பல நிகழ்வுகளுக்கு இது ஒரு பின்னணியாகவும் அமைந்திருந்தது. இயேசுவின் நண்பர்களான இலாசர் மற்றும் அவரது சகோதரிகள் மரியா மற்றும் மார்த்தா ஆகியோரின் சொந்த ஊராக இந்த நகரம் சிறப்பாக அறியப்படுகிறது. அதுமட்டுமன்றி, பெத்தானியா இயேசுவுக்கு மிகவும் பிடித்தமான தங்கி ஓய்வெடுக்கும் ஓர் இடமாகவும் அமைந்திருந்தது. மிகவும் குறிப்பாக, இறந்த இலாசரை உயிர்பெற்று எழச் செய்ததும் இங்குதான். இவை எல்லாவற்றிக்கும் மேலாக, பெத்தானியாவுக்கு அருகில் இருந்த ஒலிவ மலையில்தான் இயேசுவின் விண்ணேற்றம் இடம்பெற்றதாகவும் அன்னையாம் திருஅவை காலம் காலமாக நம்பி வருகிறது. இப்பகுதியில்தான் அவரதுத் தூய்மைமிகு பாடுகளும் மரணமும் நிகழ்ந்தன. ஆக, தான் கடந்து சென்ற பாதையின் வழியாக மீண்டும் தனது சீடர்களுடன் பயணித்து விண்ணேற்றம் அடைகின்றார் இயேசு. மேலும் பாடுகளின் பாதைதான் விண்ணக மாட்சிக்குரிய பாதை என்பதை தனது சீடர்களுக்கும் நமக்கும் எண்பிக்கும் விதமாகவே இயேசுவின் இந்த விண்ணகப் பிறப்புவிழா பெத்தானியாவில் இடம்பெறுகிறது என்பதை உணர்ந்துகொள்வோம்.
கடலில் பயணம் செய்துகொண்டிருந்த பெரிய கப்பல் ஒன்று, திடீரென்று வீசிய பெரும்புயலில் சிக்கிச் சின்னாபின்னமானது. இதனால் கப்பலில் பயணம் செய்த பலர் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தார்கள். அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து அருகிலிருந்த தீவில் ஒதுங்கினார். தீவில் இருந்தவர்களோ பூர்வகுடி மக்கள். ஆனாலும் அவர்கள் அவரை நல்லமுறையில் வரவேற்று உபசரித்தனர். பின்னர் அவர் அவர்களோடு பேசும்பொழுதுதான் அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதை அறிந்துகொண்டார். இது தெரிந்ததும் அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினீர்கள். மதம் என்பது போதை என்பதும், மூட நம்பிக்கைகளின் மொத்த வடிவம் என்பதும், அது உங்களைச் சோம்பேறிகளாக்கிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?” என்று சீறினார். அதற்கு அந்தப் பூர்வகுடி மக்களின் தலைவர் அவரிடம், “ஐயா! நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. ஒருகாலத்தில் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்களாக இருந்த எங்களுக்கு, இங்கு வந்த அருள்பணியாளர் ஒருவர் தம் உயிரைப் பணயம் வைத்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து எங்களை நல்லவராக்கினார். ஒருவேளை அவர் மட்டும் இங்கு வராமலும், நற்செய்தி அறிவிக்காமலும் இருந்திருந்தால், நாங்கள் இந்நாள்வரை மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்களாகவே இருந்திருப்போம். நீங்களும் இந்நேரம் வரைக்கும் இங்கு உயிரோடு இருந்திருக்க முடியாது” என்றார்.
‘’அனைவருக்கும் மீட்பின் அருளடையாளமாய்’’ விளங்க கடவுளால் மக்களினத்தார்க்கு அனுப்பப்பட்ட திருஅவை தன் இயல்பான பொதுமைத் தன்மையின் உள்ளார்ந்த கோரிக்கைகளுக்கு ஏற்பவும், தன்னை நிறுவியவரின் கட்டளைக்குப் பணிந்தும் எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியை பறைசாற்ற முயல்கிறது. இத்திருஅவை திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. திருத்தூதர்களோ கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ‘’உண்மையின் செய்தியைப் பறைசாற்றிச் சபைகளைத் தோற்றுவித்தனர். இன்றைய வரலாற்றுச் சூழமைவு மனித குலத்தைப் புதியதொரு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. இப்பின்னணியில், மண்ணுலகிற்கு உப்பும், ஒளியுமான திருஅவை எல்லாப் படைப்புகளையும் மீட்டுப் புதுப்பிக்க உடனடியாக அழைக்கப்படுகிறது. இதனால் அனைத்தும் கிறிஸ்துவில் புத்துயிர் பெற்று அவரில் எல்லா மனிதரும் ஒரே குடும்பமும் கடவுளின் ஒரே மக்களினமுமாக அமைவர்” என்று நற்செய்தி அறிவிப்புப் பணி பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் எடுத்துரைக்கின்றன.
நற்செய்தி அறிவிப்புப் பணி ஒரு தொடர் ஒட்டம்
இறுதியாக, நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது ஒரு தொடர் ஒட்டம் என்பதைப் புரிந்துகொள்வோம். நாம் பள்ளிகளில் படித்த காலங்களில் தொடர் ஓட்டம் என்ற ஒரு விளையாட்டைப் பார்த்திருப்போம். இது மிகவும் விறுவிறுப்பான ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டில் ஒரு அணிக்கு 4 பேர் வீதம் மூன்று அணியிலிருந்தும் 12 பேர் பங்குபெறுவர். முதலில் 4 பேர் கையில் கோலுடன் வரிசையாக நிற்பர். அதிலிருந்து சற்று தூரத்தில் அடுத்த நான்கு பேர் நிற்பர். இறுதியாக அதிலிருந்து சற்று தொலைவில் இன்னும் 4 பேர் வரிசையாக நிற்பர். விசில் சப்தம் கேட்டதும் தொடக்க வரிசையில் இருப்பவர் ஒவ்வொருவரும் ஓடிப்போய் இரண்டாவது வரிசையில் நிற்கும் அவர் அணியைச் சேர்ந்தவரிடம் அந்தக் கோலைக் கொடுக்க வேண்டும். கோலைப் பெற்றுக்கொண்ட அவர்கள், ஓடிப்போய் கடைசி வரிசையில் நிற்கும் அவரவர் அணியினரிடம் அதனைக் கொடுக்க வேண்டும். அவர்களில் யார் முதலாவதாக ஓடிவந்து எல்லைக்கோட்டில் உள்ளவர்களிடம் அந்தக் கோலை சேர்ப்பிக்கின்றாரோ அந்த அணியைச் சேர்ந்தவர்களே போட்டியில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவர். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், அந்தக் கோலை கையில் எடுத்துக்கொண்டு ஓடும்போது அதனைக் கீழே போட்டுவிடவும் கூடாது, இடையில் நின்றுவிடவும் கூடாது. அத்துடன் அதனை சரியான நேரத்தில் சரியான நபரிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அதேவேளையில், எதிர்திசையில் இருக்கும் அந்தந்த அணியைச் சேர்ந்தவர்கள், மிகக் கவனமாக, அந்தக் கோலை பெற்றுக்கொண்டு இலக்கு நோக்கி ஓடுவதற்குத் தயாராக இருக்கவேண்டும்.
இந்த விளையாட்டில் கொடுக்கப்படும் கோலை போன்றதுதான் நற்செய்தி அறிவிப்புப் பணியும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு அவர் கொடுத்த ‘நற்செய்தி’ என்ற கோல் அவருடைய சீடர்கள் தொடங்கி பல தலைமுறையினரைக் கடந்து, இன்று நமது ஒவ்வொருவரின் கரங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நாம் நமது பிள்ளைகளிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டு, அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனப் பல்வேறு சந்ததிகள் தாண்டியும் அது தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆகவே, நமது கரங்களில் இருக்கும் நற்செய்தி என்னும் இந்தக் கோலை விழிப்புடனும், பொறுப்புடனும், நம்பிக்கையுடனும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நாம் கொண்டு செல்வோம். நற்செய்தி அறிவிப்பு என்னும் இந்தத் தொடர் ஓட்டத்தில் துன்பங்கள், வேதனைகள், அவமானங்கள், இடர்பாடுகள், இன்னல்கள், துன்புறுத்தல்கள், உயிர்த்தியாகங்கள் என அடுக்கடுக்காய்த் தொடர்ந்தாலும் அத்தனை சவால்களையும் இறைநம்பிக்கையுடனும், துணிவுடனும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். இறைத்தந்தையின் நீட்சியாக இயேசு விளங்கினார். இயேசுவின் நீட்சியாக தூய ஆவியார் செயல்பட்டார். தூய ஆவியாரின் நீட்சிகளாக இயேசுவின் சீடர்கள் செயல்பட்டனர். சீடர்களின் நீட்சிகளாக நம் முன்னவர்கள் செயல்பட்டனர். அப்படியென்றால், நம் முன்னவரின் நீட்சிகளாக நாம் செயலாற்ற அழைக்கப்படுகிறோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில், "இயேசு இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்" என்கின்றார் புனித பவுலடியார். இந்த நம்பிக்கைக்குரியவரின் நீட்சிகளாக மாறி நாமும் நற்செய்தி அறிவித்து அதற்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்