பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு : அன்பே அமைதியின் ஆணிவேர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. திப 15: 1-2, 22-29 II. திவெ 21: 10-14, 22-23 III. யோவா 14: 23-29)
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இயேசுவின் வழியில் அன்பை விதைத்து அமைதியை அறுவடை செய்ய நமக்கு அழைப்பு விடுக்கின்றன. இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி, அவர்களுக்குப் புதிய கட்டளை ஒன்றைக் கொடுப்பது குறித்து கடந்தவார ஞாயிறன்று சிந்தித்தோம். இவ்வார நற்செய்தி அவர் தனது சீடர்களுக்கு வழங்கும் பிரியாவிடை செய்தி குறித்துப் பேசுகின்றது. இதில், தன்னைக் காட்டிக்கொடுக்கவிருக்கும் யூதாசு குறித்தும், தன்னை மறுதலிக்கவிருக்கும் பேதுரு குறித்தும், குறிப்பாக தனக்கு நிகழவிருக்கும் கொடிய மரணம் குறித்தும் பேசுகின்றார். இதன் காரணமாக அவரது சீடர்கள் சோகத்தின் உச்சிக்கே செல்லும் நிலையில் அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிக்கும் விதமாக “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்." (வச.1) என்ற வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுகின்றார் இயேசு..
இன்றைய நற்செய்திப் பகுதியில் மூன்று முக்கிய காரியங்களை முன்னிருத்துகின்றார் இயேசு. முதலாவதாக, “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை" (வச.23-24) என்கின்றார். அதாவது, அவர்மீது உண்மையான அன்புகொள்வோர் இறைத்தந்தையின் அன்புக்குச் சொந்தமாவர் என்றும், அவ்வாறு கடைப்பிடிக்காதோர் அத்தகையதொரு உன்னதமான நிலையை இழந்துவிடுவர் என்றும் எடுத்துக்காட்டுகின்றார். இரண்டாவதாக, தன்மீதும் தனது தந்தையின்மீதும் அன்புகொள்வோருக்குத் துணையாளராம் தூய ஆவியார் கொடையாக வழங்கப்படுவார் என்பதன் அடையாளமாக, "என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்" (வச. 26) என்று மொழிகின்றார். இயேசுவின் புதிய கட்டளையைக் கடைப்பிடித்து அவர் பயணித்த பாதையில் அர்ப்பணமுடன் வாழும்போது வரும் சவால்களையும், சங்கடங்களையும் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து தூய ஆவியார் நமக்குக் கற்பிப்பார் என்ற அர்த்தத்தில்தான் இவ்வாறு கூறுகின்றார் என்பதைப் புரிந்துகொள்வோம். இயேசு விண்ணேற்றம் அடைந்த பிறகு அவரது உயிர்ப்பின் நற்செய்தியை அவரது சீடர்கள் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சென்றபோது அவர்களை முன்னின்று முழுமையாக வழிநடத்தியது துணையாளராம் தூய ஆவியார்தான் என்பதை திருத்தூதர் பணிகள் நூலில் பார்க்கின்றோம். குறிப்பாக, அவர்களின் நற்செய்தி அறிவிப்புப் பணிகளில், எங்கே, எப்படிப் பயணிப்பது, யாருடன் பயணிப்பது, எதனைத் தெளிந்து தேர்ந்துகொள்வது, எதனை விட்டுவிடுவது, நெருக்கடியான வேளைகளில் யூதச் சங்கங்களில் எப்படிப் பதிலளிப்பது என்பதையெல்லாம் தூய ஆவியார் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதனை இயேசுவே முன்னதாக தனது சீடர்களிடம் சொல்லியிருக்கின்றார். "என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்" (காண்க. மத் 10:18-20).
மன்றாவதாக, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்" (வச.27) என்கின்றார். இயேசு தனது சீடரை விட்டுப் பிரிவதற்கு முன்பு, திருநற்கருணை, அன்புக் கட்டளை, தூய ஆவியார், அமைதி, அன்னை மரியா ஆகிய ஐந்து முக்கியமான கொடைகளை அவர்களுக்குக் கொடுக்கின்றார். தனது உருவிலும் சாயலிலும் மானிடரைப் படைக்கும் கடவுள் அவர்களுக்கு எப்போதும் அமைதி நிறைந்த வாழ்வையே வழங்க விரும்பினார். மானிடர் தனது பாவமிகு செயல்களால் அவரைவிட்டுப் பிரிந்த வேளைகளில் கூட அவர்களை மீண்டும் அழைத்து அவர்களுக்கு அமைதி நிறைந்த வாழ்வை அளிக்கின்றார். தனது இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய மூன்று முறைகள் குறித்து மோசே வழியாக ஆரோன் மற்றும் அவர் புதல்வர்களிடம் குறிப்பிடும் கடவுள், "ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (காண்க. எண் 6:26) என்று அவர்களுக்கு ஆசீர் வழங்கக் கட்டளையிடுகின்றார். மேலும் இறைத்தந்தையின் ஒரே திருமகனான இயேசுவின் திருவருகையைக் குறித்துக் குறிப்பிடும் இறைவாக்கினர் எசாயா, அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ (காண்க. எசா 9:6) என்று அழைக்கப்படும் என்று எடுத்துக்காட்டுகின்றார். அமைதி என்னும் இப்பெரும் கொடையை அனைத்து மக்களுக்கும் வழங்கும் விதமாகவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்று கூறும் திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா, “இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது” (காண்க லூக் 1:78-79) என்று உரைக்கின்றார். மேலும் இயேசுவின் பிறப்பை இடையர்களுக்கு வானதூதர் அறிவிக்கும் வேளை, “விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (காண்க. லூக் 2:13-14) என்று கடவுளைப் புகழ்ந்தது என்பதைப் பார்க்கின்றோம். இயேசுவும் தொடர்ந்து தனது பணிவாழ்வு முழுவதும் அமைதி குறித்துப் பேசுகின்றார். இறுதியாக, தான் உயிர்த்தெழுந்த பின்பு தனது சீடர்களைச் சந்தித்தபோதெல்லாம், "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" (காண்க. லூக் 24:36, யோவா 20:19) என்று அவர்களை வாழ்த்துகின்றார். அமைதி என்பது எப்போதும் கடவுளுடன் ஒன்றித்தே பயணிப்பது. ஆகவே, இயேசுவின் நீட்சிகளாகிய அவரது சீடர்களின் வழியில் நாமும் அமைதியின் கருவிகளாக செயல்பட அழைக்கப்படுகிறோம்.
உலகம் தரமுடியாத அமைதி
அமைதியை அவரது சீடர்களுக்கு வழங்குவதாகக் கூறும் இயேசு, “நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” என்கின்றார். உலகம் தரும் அமைதி என்பது போர்களாலும், ஆயுதங்களாலும், அடக்குமுறைகளாலும், அடிமைத்தனங்களாலும் விளையும் அமைதி. இது நீடித்து நிலைக்ககூடியது அல்ல. ஆனால் உயிர்த்த ஆண்டவர் தரும் அமைதி என்பது, அன்பும், உண்மையும், நேர்மையும், சமத்துவமும், சகோதரத்துவமும் கொண்ட சமுதாயத்தை படைப்பதற்கான அமைதி. இது எப்போதும் நீடித்து நிலைத்திருக்கக் கூடியது. அதேவேளையில், இந்த அமைதியை நாம் வெறுமனே அடைந்துவிட முடியாது. இந்த அமைதியைப் பெறுவதற்கும் அதனைப் பிறருக்கு வழங்குவதற்கும் இயேசுவின் வழியில் வேள்வித்தீயில் நாம் பல தியாகங்களை ஏற்கவேண்டியிருக்கும். இதனைத்தான், "பர்னபா, பவுல் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்" (வச.26) என்று இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் சான்றளிப்பதைப் பார்க்கின்றோம். மேலும் இரண்டாம் வாசகத்தில், இயேசுவின் திருத்தூதர்கள் பன்னிருவரும் இத்தகைய அமைதியை வழங்குவதற்காகத் தங்கள் வாழ்வையே முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டதால் அவர்களின் பெயர்கள், விண்ணகத்தைவிட்டு இறங்கிவரும் புதிய எருசலேம் திருநகரில் அமையும் கோவிலின் அடிக்கற்களில் எழுதப்பட்டுள்ளதாக காட்சி காண்கிறார் புனித யோவான். குறிப்பாக, எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும், ஆட்டுக் குட்டியும் (இயேசுவும்) அதன் கோவில் என்றும் எடுத்துக்காட்டுகின்றார். ஆக, நாமும் இத்தகைய அமைதியை வழங்குவதற்காக நமது வாழ்வையே கையளிக்கும்போது, நமது பெயர்களும் புதிய எருசலேம் கோவிலாக விளங்கும் விண்ணகத்தில் எழுதப்படும் என்று உறுதியாக நம்பலாம் அன்றோ?
எது உண்மையான அமைதி?
ஒரு குருகுலத்தில் பல மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். ஒரு நாள் குரு தனது மாணவர்களுக்குப் போட்டி ஒன்றை அறிவித்தார். “மாணவர்களே நாளை உங்களுக்கு ஓவியப்போட்டி ஒன்றினை நடத்தப் போகிறேன். நீங்கள் என்னிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நீங்கள் வரையும் ஓவியத்தின் வழியாக அறிந்து கொள்வேன்” என்று கூறினார். மேலும் “ஓவியப் போட்டிக்கான தலைப்பானது நாளை உங்களுக்குப் போட்டியின்போது அறிவிக்கப்படும். நீங்கள் நாளைக் காலையில் ஓவியம் வரைவதற்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார் குரு. மாணவர்கள் அனைவரும் மறுநாள் காலையில் ஓவியம் வரைவதற்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு குருகுலத்திற்கு வந்தனர். அப்போது குரு தனது மாணவர்களிடம், ‘அமைதி’ பற்றிய உங்கள் சிந்தனையை ஓவியமாக வரையுங்கள்” என்றார். எல்லோரும் ஓவியத்தினை வரைந்தனர். போட்டியின் இறுதியில் குரு ஒவ்வொரு மாணவரின் ஓவியத்தையும் பார்வையிட்டார். ஒரு மாணவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. ஏரியில் மலையின் பிம்பம் அழகாக இருந்தது. மற்றொருவர் பூக்களை வரைந்திருந்தார். ஓவியத்தில் இருந்த பூக்களானது அவற்றைப் பறிக்கத் தூண்டியது. இன்னொருவர் அழகான புறாக்களை வரைந்திருந்தார். அவற்றின் அழகு அனைவரையும் கவர்ந்திழுத்தது. இவ்வாறாக எல்லோரும் ஓவியங்களை நன்றாகவும், அழகாகவும் வரைந்திருந்தனர். கடைசியாக இருந்த மாணவரின் ஓவியத்தைப் பார்த்த குரு அவரைக் கட்டியணைத்துக் கொண்டார்.
அவர் வரைந்த ஓவியத்தில், கடலில் வானம் கறுத்த மேகங்களுடன் காணப்படுகின்றது, இடி மின்னலுடன் மழைப் பொழிகிறது, காற்றும் பலமாக வீசுகிறது, பறவைகள் பயத்துடன் பறக்கின்றன, இவற்றிற்கிடையே கடலில் ஒரு கப்பலானது பிரச்சனைகளைச் சமாளித்து அமைதியாகச் செல்கிறது. இவ்வோவியம் மாணவர்கள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அமைதி என்ற தலைப்பிற்கும் ஓவியத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே! என்று அவர்கள் எண்ணினர். அவர்களின் எண்ணத்தை அறிந்த குரு, “மாணவர்களே இந்த ஓவியம் அழகாக தத்ரூபமாக இருக்கிறது. இந்த ஓவியத்தில் கறுத்த மேகங்கள் கொண்ட கடல், இடிமின்னலுடன் கூடிய மழை, அமைதியான கப்பல், ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது? என்று தானே எண்ணுகிறீர்கள்” எனக் கேட்டார். பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பதல்ல அமைதி. மாறாக, இவைகளின் மத்தியில் இருந்துகொண்டு, எதற்கும் கலங்காமல், எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி. எனவே நிதானமாக உள்ள கப்பல் பரிபூரணமான அமைதியில் இருக்கிறது. இந்த ஓவியத்தை வரைந்த மாணவனே என்னிடமிருந்து பாடங்களை நன்றாக கற்றிருக்கிறான்” என்று அவனைப் பாராட்டினார் குரு.
அனைத்து வசதிகளும் அமையப் பெற்று எந்தவிதப் பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பங்களுக்கும், போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் நடுவிலும் நிச்சயம் ஒரு நாள் விடியும்| என்று விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் தினமும் உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பதுதான் அமைதி. எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், யார் என்ன தொல்லைகள் தந்தாலும், தனக்கு நேரும் அவமானங்களைவிட தான் எட்ட வேண்டிய இலக்கே தனக்குப் பெரியது என்று எதையும் பொருட்படுத்தாது கடந்து சென்றுகொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளதுதான் அமைதி. சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவதுதான் அமைதி. இந்த அமைதியைத்தான் இன்றைய நற்செய்தியில் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார் இயேசு.
அமைதியைக் குலைக்கும் செயல்கள்
போருக்கான காரணங்கள் யாவும் மனித உள்ளங்களில் தோன்றுவதால், அங்குதான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப்பெறல் வேண்டும் என்பது யுனெஸ்கோ'வின் முகப்பு வாசகமாக அமைந்துள்ளது. இதிகாச காலம்தொட்டு இன்றுவரை தனிமனித ஒழுக்கத்தவறுகளே அமைதியின்மைக்கான அடிப்படை காரணங்களாக அமைகின்றன. மண், பெண், பொன் என்ற மூவகை ஆசைகளும், தன்னை யார் என்று காட்ட வேண்டும் என்ற ஆணவமுமே போர்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றன. அதனால்தான் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், “படைகொண்டு அமைதியை ஏற்படுத்த இயலாது. நல்லுணர்வால்தான் அதைப் பெற இயலும்” என்கிறார். “அவர்கள் வேல்கள் கொண்டு வந்தார்கள். நாங்கள் துப்பாக்கிகளால் அவர்களை வென்று விட்டோம். அவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள், நாங்கள் பீரங்கிகள் கொண்டு அவர்களை வென்றுவிட்டோம். அவர்கள் பீரங்கிகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள், நாங்கள் வெடிகுண்டுகளால் அவர்களைச் சிதறடித்தோம். இறுதியாக, அவர்கள் மகாத்மா காந்தியின் துணையோடு அகிம்சையை கொண்டு எங்களை எதிர்த்தார்கள், ஆனால் அகிம்சையை வெல்ல எங்களிடம் ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் நாங்கள் விலகிவிட்டோம்” என்று ஆங்கிலேய அதிகாரி ஒருவர் கூறியதாக ஒரு தகவல் உண்டு.
இயேசு தந்த அமைதியை வழங்குவோம்
இன்று உலகில் எங்கு நோக்கினும் அமைதியற்றச் சூழல் நிலவுவதைப் பார்க்கிறோம். உள்ளத்திலும் அமைதி இல்லை, உலகிலும் அமைதி இல்லை. தன்னலம், ஆணவம், சாதி, மத, மொழி, இன பாகுபாடுகள், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற மாறுபாடுகள், நாடுகளுக்கிடையே நிலவும் வேற்றுமைகள், செல்வத்தின்மீதான மிதமிஞ்சிய பற்று, அதிகார வெறி இதனால் விளையும் தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை இன்றைய உலகில் அமைதியற்றச் சூழலை உருவாக்கி வருகின்றன. ஒரு மனிதரிடம் உலக ஆசைகள் இருக்கும்போது, அதை அடைவதற்கான எல்லா தீய செயல்களையும் அவர் செய்கிறார். அதன் விளைவாக கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் மற்றும் அமைதியின்மையால் அவர் பெரும் அவதிக்குள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். எவ்வளவு விரைவாக ஒருவர் தன் ஆசைகளை விட்டொழிக்கின்றாரோ, அவ்வளவு சீக்கிரம் அவரது பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அவர் மனம் அமைதியடைகிறது. இத்தகைய அமைதியை அவர் பிறருக்கும் அளித்து அமைதி நிறைத்த சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆகவே, நாம் உயிர்த்த ஆண்டவர்மீது உண்மையாக அன்புகொள்ளும்போது, இவ்வுலகம் தரமுடியாத, ஆனால் இயேசு மட்டுமே தரக்கூடிய அமைதியைப் பெற்றுகொள்ளவும், அதனைப் பிறருக்கு வழங்கிடவும் முடியும். இந்த அமைதியை வழங்குவதே இறையாட்சிப் பணியின் அடிப்படைக்கூறு. இத்தகையப் பணிக்கே இயேசுவின் சீடர்களாக நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்