இலங்கையில் நிலவும் நம்பிக்கை உணர்வு!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கையில் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பழைய அதிகார அமைப்பு மாற்றப்பட்டு புதிய அரசுத் தலைவர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அரசியல் வழியாக நம்பிக்கையின் புதிய காற்று வீசுவதாக Fides எனப்படும் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
எதிர்நோக்கின் யூபிலி ஆண்டினைக் கொண்டாடும் இவ்வேளையில் இலங்கையில் நிலவும் இந்த நம்பிக்கையின் உணர்வை எதிர்நோக்கு என்னும் வார்த்தையால் குறிப்பிடுவது மட்டுமே சிறந்ததாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ள கர்தினால், தங்களின் எண்ணங்கள் வார்த்தைகள் என அனைத்தும் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் ஆன்மிக வளர்ச்சிகளுடன் நம்பிக்கையின் வழியாக ஒத்துப்போகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட நேர்மையான மற்றும் மக்களின் நலனில் அர்ப்பணிப்புடன் செயல்படும் புதிய அரசு வந்துவிட்டது என்றும், வறுமையை எதிர்த்துப் போராடவும், கடந்த காலத்தில் அநீதிக்கு ஆளானவர்களுக்கும், உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி வழங்கவும் புதிய அரசு செயல்பட்டு வருகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் கர்தினால் இரஞ்சித்.
மேலும் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையில் புதிய அரசு குறிப்பிடத்தக்க அளவில் கவனம் செலுத்தி வருவது தங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் இரஞ்சித்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல்-21, உயிர்ப்பு ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக வெளிப்படைத் தன்மை மற்றும் உண்மையைக் வெளிக்கொணரும் விதமாக அரசுத் தலைவர் அனுர குமார திஸநாயக்க புதிய விசாரணையை அறிவித்துள்ளது மேலும் நம்பிக்கையைத் அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காகக் காத்திருப்பதாகவும் உரைத்துள்ளார் கர்தினால் இரஞ்சித்.
இந்தக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 167 கத்தோலிக்கர்களையும் புனிதர் பட்ட படிநிலைகளுக்கென ஏற்க முடிவு செய்ததற்காக திருப்பீடத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் கர்தினால் இரஞ்சித்.
தற்போதைய புதிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அவரது மறைப்பணி அனுபவத்தின் வழியாக, திருஅவையின் எதார்த்தங்களை கவனத்தில் கொள்ளும் ஒருவராக, அவரைத் கண்டுணர்வதாகவும், பணிவும் ஞானமும் நிறைந்த அவரதுத் தலைமையை தான் நம்புவதாகவும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் இரஞ்சித்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்