MAP

இறைவேண்டல் செய்யும் தாவீது இறைவேண்டல் செய்யும் தாவீது   (https://inspiredscripture.com/psalm-6/media/image3.jpg)

விவிலியத் தேடல் : திருப்பாடல் 69-2, மதிகேடுகள் மன்னிக்கப்படட்டும்!

நமது மதிகேடுகளால் கடவுளின் உள்ளத்தைக் காயப்படுத்தாது பக்குவமான மனதுடன் நடந்துகொண்டு அவரது உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துவோம்.
விவிலியத் தேடல் : திருப்பாடல் 69-2, மதிகேடுகள் மன்னிக்கப்படட்டும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கடவுளின் கருணைக்காகக் காத்திருப்போம்!’ என்ற தலைப்பில் 69-வது திருப்பாடலில், முதல் 4 இறைவசனங்கள் குறித்து நாம் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்துவரும் 5 முதல் 8 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துச் சிந்திப்போம். இப்போது அவ்வார்த்தைகளை அமைதி நிறைந்த மனங்களுடன் வாசிப்போம். "கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்; என் குற்றங்கள் உமக்கு மறைவானவை அல்ல. ஆண்டவரே! படைகளின் தலைவரே! உமக்காகக் காத்திருப்போர்  என்னால் வெட்கமுறாதபடி செய்யும்; இஸ்ரயேலின் கடவுளே! உம்மை நாடித் தேடுகிறவர்கள் என்பொருட்டு மானக்கேடு அடையாதபடி செய்யும். ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்" (வச. 5-8).

முதலில், "கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்; என் குற்றங்கள் உமக்கு மறைவானவை அல்ல” என்று தாவீது கூறும் இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். முதலில் ஒரு கதையுடன் நமது சிந்தனைகளைத் தொடங்குவோம். ஒருநாள் ஜென் துறவுமடத் தலைவரைப் பார்க்க பார்வையற்ற ஒருவர் வந்தார். அது மாலை நேரம். அவர் பேசிமுடித்துவிட்டு புறப்படும் நேரம் இருள்சூழ தொடங்கிவிட்டது. அதனால் அவர் புறப்படும்போது அவரிடம் விளக்கு ஒன்றைக் கொடுத்த அத்துறவுமடத்தின் தலைவர், “ஐயா! இந்த விளக்கை கையில் எடுத்துச் செல்லுங்கள்! இரவாகிவிட்டது!” என்கிறார். பார்வையற்ற நபரோ, “நானே பார்வையற்றவன்! எனக்குப் பகல், இரவு எல்லாம் ஒன்றுதான். ஆகவே எனக்கு விளக்கு வேண்டாம்” என்றார். ஆனால் தலைவர் மீண்டும் அவரிடம், “இது உமக்கு பாதை காட்ட அல்ல. யாராவது உம்மேல் மோதிவிடாமல் இருக்கத்தான் இதை உனக்குத் தருகிறேன். ஆகவே, மறுக்காமல் எடுத்துச் செல்லும்!” என்று கூறி  விளக்கை கொடுத்து அனுப்பிவைத்தார். விளக்கை வாங்கிக்கொண்டு சற்று தூரம் சென்றபோது, அவர்மேல் ஒருவர் வந்து மோதிவிட்டார். உடனே மோதியவரைப் பார்த்து, “மூடனே! உனக்குக் கண் தெரியாதா? என் கையில் விளக்கிருந்தும் என்மேல் மோதுகிறாயே?' என்று கோபப்பட்டார் அந்தப் பார்வையற்றவர். அதற்கு அவர்மீது மோதியவர், “உன் கையில் விளக்கு இருப்பது உண்மைதான். ஆனால், அது எரியவில்லை, அணைந்து கிடக்கிறது' என்றார் சாந்தமாக. ஞானம் பெற்றார் பார்வையற்ற நபர். தாவீதின் வாழ்விலும் இதுதான் நடந்தது. அதாவது அவர் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் பாவம்புரிந்த பிறகு அதைப்பற்றி உணராதவராகத்தான் இருந்தார் தாவீது. ஆனால் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்து ஆட்டுக்குட்டி கதையொன்றைக் கூறி, “நீயே அம்மனிதன்" என்று அவரது பாவத்தை எடுத்துக்காட்டியபோது, தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொல்லி  மனம்வெதும்பி அழுதார் (காண்க. 2 சாமு 12:5,13). உடனே புதிய பார்வை பெற்றார்.

இங்கே தாவீது ‘மதிகேடு’ என்று குறிப்பிடுவது அவர் பத்சேபாவுடன் புரிந்த பாவத்தைத்தான் என்பது நமக்குத் தெளிவாகிறது. இந்நிலையில் அவர் 51-வது திருப்பாடலை எழுதுகிறார் என்று பார்க்கின்றோம். இத்திருப்பாடலின் தொடக்கத்தில் அவர் கூறும் வார்த்தைகள் நம் உள்ளங்களையும் வருடுகின்றன. இப்போது அவ்வார்த்தைகளைக் கேட்போம். “கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்” (திபா 51:1-4). தாவீதின் இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும்போது, லூக்கா நற்செய்தியில் இயேசு கூறும் காணாமற்போன மகன் உவமையில், "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்" (காண்க லூக் 15:21) என்று இளைய மகன் கூறும் வார்த்தைகளும் நமது நினைவில் நிழலாடுகின்றன. அவ்வாறே, பரிசேயரும் வரிதண்டுவோரும் பற்றிய உவமையில், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ (18:13) என்று கூறும் வார்த்தைகளும் நம் உள்ளங்களை உருக்குகின்றன. பாவம் செய்தபிறகு உள்ளம் குத்துண்டால்தான் உண்மையான பாவ அறிக்கை வெளிப்படும் என்பதும் திண்ணம். இப்பாவச் செயலைதான் ‘மதிகேடு’ என்று குறிப்பிடுகின்றார் தாவீது. மேலும் 38-வது திருப்பாடலிலும் கூட, ‘மதிகேடு’ என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். இங்கே தனது துயரத்தை வெளிப்படுத்தி இறைவேண்டல் செய்யும் தாவீது, "என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன. என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன; என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம்" (காண்க திபா 38:4-5) என்று உரைக்கின்றார். இவ்விடத்தில், மதிகேடு என்பது அறிவற்றதனம், பொறுப்பற்றத்தனம், சிறுபிள்ளைத்தனம் ஆகியவற்றையும் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

அடுத்து, "ஆண்டவரே! படைகளின் தலைவரே! உமக்காகக் காத்திருப்போர் என்னால் வெட்கமுறாதபடி செய்யும்; இஸ்ரயேலின் கடவுளே! உம்மை நாடித் தேடுகிறவர்கள் என்பொருட்டு மானக்கேடு அடையாதபடி செய்யும்" என்ற தாவீதின் வார்த்தைகளில், அவரது உளப்பாங்கு வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். அதாவது, தனது பாவத்தால், கடவுளுக்காகக் காத்திருக்கும் நல்லவர்கள் வெட்கமுறக்கூடாது என்றும் அவரைத் தேடும் அவரது பக்தர்கள் மானக்கேடு அடைந்துவிடக்கூடாது என்றும் கூறுகின்றார். மேலும் தான் செய்த பாவத்தின் விளைவாக தன்மீது வெளிப்பட்டுள்ள கடவுளின் கோபக்கனல் அநியாயமாக அப்பாவி மக்களைப் பாதித்து, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அவரது அருள்கொடைகளும், உதவிகளும் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும் இவ்வாறு உரைக்கின்றார் தாவீது. "நான் செய்த பாவம்தான் என் குடும்பத்தில் உள்ள எல்லாரையும் வாட்டி எடுக்குது. நான் பாவம் செய்தேன், அனுபவிக்கிறேன்... அதற்கு என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள். கடவுள் அவர்களையும் சேர்த்து வதைக்கிறாரே" என்று பல வேளைகளில் சிலர் சொல்ல நாம் கேள்விபட்டிருப்போம் அல்லவா? அந்த மனநிலைதான் தாவீடத்திலும் வெளிப்படுகிறது.

இறுதியாக, “ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்" என்கின்றார் தாவீது. இங்கே, "உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்" என்கின்றார் அவர். இதன்பொருள் என்ன? அதாவது, தாவீது தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருந்த கடவுளைப் பழிப்பதாகவும், அவரைக் குற்றம் சுமத்துவதாகவும் நாம் நினைக்கலாம். ஆனால் அதுவல்ல உண்மை. கடவுளுக்கு எதிராகத் தான் புரிந்த பாவத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது வேறுவிதத்தில் அவர்கள் துன்ப துயரங்களை அனுபவித்திருக்கலாம். மேலும் மக்களுக்கோ அல்லது அவரது நெருங்கிய உறவுகளுக்கோ, அல்லது தனது அரசவையில் உள்ளவர்களுக்கோ ஏதோவொன்று நிகழ்ந்து அவருக்கு நெருக்கடிநிலை ஏற்பட்டிருக்கலாம் அல்லது அவரைத் திட்டித்தீர்த்திருக்கலாம். ஆக, தனது மதிகேட்டினால் விளைந்த பாவம்தானே இந்நிலைக்குக் காரணம் என்றெண்ணி, உரிமையுடன் அவர் கடவுளை கடிந்துகொள்ளும் விதமாகவே,  "உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்" என்று மொழிகின்றார் என்பதையும் நாம் புரிந்துகொள்வோம். மேலும் "வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்" என்று தாவீது கூறும் வார்த்தைகள்,  "உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்" என்று கடவுளை செல்லமாகக் கடிந்துகொள்ளும் காரணத்திற்கான விடையாகவும் அமைகின்றன.

ஒரு முனிவர் மாமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து வந்தார்.  மரம் பழுத்து பழங்களால் நிரம்பிய போது, அந்த வழியாகச் சென்ற இருவர் பழங்களுக்காக மரத்தின் மீது கற்களை விட்டெறிந்தார்கள்.  ஆகவே சில பழங்கள் கீழே வீழ்ந்தன. சில கற்கள் முனிவர் மீது விழுந்து  அவரைக் காயப்படுத்தின.  அந்த நாட்டு அரசன் முனிவர் மீது பெரிதும் பக்தி கொண்டவன். அவன் நாள்தோறும் முனிவரின் இருப்பிடத்திற்குச் சென்று அவரைத் தரிசிப்பது வழக்கம்.  அன்றைய தினம் அரசன் தரிசனத்திற்கு வந்தபோது, முனிவரின் உடலிலிருந்த காயங்களைக் கண்டு திடுக்கிட்டான்.  அவன் பணிவோடு வணங்கி, “காயத்திற்கான காரணம் என்ன?” என்று விசாரித்தான்.  முனிவரும் நடந்ததை அரசனிடம் தெரிவித்தார். முனிவரிடம் விடைபெற்று புறப்பட்ட அரசன் வழியில் காவலாளிகளை அழைத்து, "முனிவருக்குத் தீங்கிழைத்தவர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடையுங்கள்!" என்று உத்தரவிட்டான். அவ்விதமே காவலாளிகள் அந்த இரண்டு பேரைக் கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர். 'இந்தச் செய்தியைக் கேட்டு முனிவர் மகிழ்ச்சியடைவார்!' என்று நினைத்து அரசன், முனிவரிடம் சென்று விடயத்தைச் சொன்னான். ஆனால் முனிவர், "இந்த மரங்கள் தன் மீது கற்கள் வீசிய மனிதர்களிடம் கோபித்துக்கொண்டு அவர்களுக்குப் பழங்கள் தராமல் இருந்ததில்லை. மரங்களே இப்படி இருக்கின்றன. அவற்றைவிட அறிவிலும், குணங்களிலும் உயர்ந்த நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அந்த இருவரையும் உடனே விடுதலை செய்யுங்கள், இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்' என்று அறிவுரை கூறி அவர்களை அனுப்பி விடுங்கள்” என்று அரசனிடம் கூறினார்.

மனிதர் தங்களின் மதிகேடுகளால் பாவங்கள் இழைத்து கடவுளின் கருணைமிகு மற்றும் கனிவுமிகு உள்ளதைக் காயப்படுத்தும்போது கடவுள் இப்படித்தான் பெருந்தன்மையுடன் சிறுகுழந்தைகளை மன்னித்து ஏற்பதுபோல் நம்மையும் மன்னித்து ஏற்கிறார். ஆகவே, நமது மதிகேடுகளால் கடவுளின் உள்ளத்தைக் காயப்படுத்தாது பக்குவமான மனதுடன் நடந்துகொண்டு அவரது உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மே 2025, 12:18