MAP

கடவுளின் கருணையை நாடும் மனிதர் கடவுளின் கருணையை நாடும் மனிதர்   (©paul - stock.adobe.com)

விவிலியத் தேடல்:திருப்பாடல் 69-1, கடவுளின் கருணைக்காகக் காத்திருப்போம்!

நமது வாழ்வில் நெருக்கடியான சூழல்கள் ஏற்படும்போதெல்லாம் தாவீதைப் போன்று கடவுளிடம் சரணடைந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம்.
திருப்பாடல் 69-1, கடவுளின் கருணைக்காகக் காத்திருப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் '‘வலிமையும் ஊக்கமும் தரும் ஆண்டவர்! என்ற தலைப்பில் 68-வது திருப்பாடலில்  28 முதல் 35 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 69-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். "உதவிக்காக வேண்டல்" என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 36 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இது 'பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்’ என்ற மெட்டு; தாவீதுக்கு உரியது' என்றும் துணைத்தலைப்பிடப்பட்டுள்ளது. இங்கே லீலிமலர் என்பது, பாலஸ்தீனத்தின் பள்ளத்தாக்குகளில் காணப்படும் ஒருவகையான மிகவும் அழகான வெள்ளைநிற மலரைக் குறிக்கின்றது. மேலும் லீலிமலர் மெட்டுக்கொண்டு இத்திருப்பாடலை தாவீது பாடியிருக்கிறார் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே மெட்டு என்பது, இசை, பண், சந்தம், ஒத்திசை, இசைக்குறிப்புகள் என்ற வார்த்தைகளாலும் அர்த்தப்படுத்தப்படுகிறது.

தாவீது துன்பச் சூழலில் இருந்தபோது இத்திருப்பாடலை எழுதியிருக்க வேண்டும். ஆனால் அவர் எப்போது இதனை எழுதினார் என்பது தெரியவில்லை. சில  விவிலிய மாணவர்கள் இறைவாக்கினர் எரேமியா இதை எழுதினார் என்றும்  கருதுகின்றனர். காரணம், தாவீது அரசரைப் போன்றே எரேமியாவிற்கும் எதிரிகள் பலர் இருந்தனர். எரேமியா, தாவீது வாழ்ந்த 400 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்த ஓர் இறைவாக்கினர். மக்களுக்கு கடவுள் எதைக் கூற விரும்பினாரோ அதனை அப்படியே சொன்னார் எரேமியா. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் எரேமியாவைக் காயப்படுத்தினார்கள், ஆனால் அவரை காயப்படுத்த எந்தக்  காரணமும் இல்லை. ஏனென்றால் அவர் கடவுளின் வார்த்தைகளைத்தான் மக்களிடம் தெரிவித்தார். இப்படி இருப்பினும், இந்தத் திருப்பாடலை தாவீதுதான் எழுதினார் என்று பெரும்பாலான விவிலியப் பேராசிரியர்கள் கருதுகின்றனர். மேலும் இந்தத் திருப்பாடலில் உள்ள பல்வேறு பகுதிகள் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புபடுத்தப்படுகிறது (வச. 4, 9, 21), குறிப்பாக, வசனம் 22 கிறிஸ்துவின் எதிரிகளைக் குறிப்பிடுவதாக இங்கே எடுத்துக்காட்டப்படுகின்றது. எனவே, 22-வது திருப்பாடலைப் போலவே, இதுவும் துயரத்தில் தொடங்கி நம்பிக்கையில் நிறைவடைகிறது. மேலும் தாவீதைத்  துன்புறுத்தியதற்காக அவரது எதிரிகள் பெரும் அழிவைத் தேடிக்கொண்டதுபோல, கிறிஸ்துவுக்குத் துயரங்களையும் கொடும் மரணத்தையும் கொடுத்ததற்காக யூதர்கள் பெற்ற அழிவையும் இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்க்க உதவுகிறது.

இந்தத் திருப்பாடல் மூன்று முக்கிப் பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியில் தான் அனுபவித்த மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் குறித்துக் கடவுளிடம் முறையிட்டு, தன்னை விடுவித்து ஆதரிக்கும்படி அவரிடம் மனம் ஒன்றித்து இறைஞ்சுகிறார் தாவீது அரசர் (வச. 1-21). இரண்டாம் பகுதியில், தன்னைத் துன்புறுத்துபவர்கள் மீது கடவுளின் நீதியான தீர்ப்புகள் வெளிப்படும் என்று தனது எதிரிகளை சாபமிடுகிறார் தாவீது (வசனம் 22-29). மூன்றாம் பகுதியில், கடவுள் தனக்கு உதவி செய்து, தன்னைக் காப்பாற்றுவார் என்று உறுதியளிக்கும் மகிழ்ச்சி மற்றும் புகழ்ச்சியின் குரலுடன் இத்திருப்பாடலை நிறைவுசெய்கின்றார் தாவீது (வச. 30-36). இப்போது இத்திருப்பாடலின் முதல் 4 இறைவசனங்கள் குறித்து நாம் தியானிப்போம். முதலில் அவ்வார்த்தைகளை அமைதி நிறைந்த மனதுடன் வாசிப்போம். “கடவுளே! என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது. ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை; நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது. கத்திக் கத்திக் களைத்துப்போனேன்; தொண்டையும் வறண்டுபோயிற்று; என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின; காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியைவிட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க்குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?” (வச 1-4).

முதலாவதாக, “கடவுளே! என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது" என்கின்றார் தாவீது. தான் அனுபவிக்கும் பெருந்துயரங்கள் மத்தியில், தனக்கு உதவி செய்வதற்கான ஒரே ஆதாரம் தனது படைப்பாளரான கடவுள் மட்டுமே என்பதை அறிந்திருக்கிறார் தாவீது. அதனால்தான், "கடவுளே, என்னைக் காப்பாற்றும்" என்று அவரைநோக்கி அபயக்குரல் எழுப்புகிறார். தாவீதின்  அவலநிலை அவர் ஒரு பெருவெள்ளத்தில் சிக்கித்தவிப்பது போலவும், அவரது ஆன்மாவை நோக்கி தண்ணீர் பாய்ந்து செல்வது போலவும் இங்கே விவரிக்கப்படுகிறது. மேலும் அவருடைய உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவர் புதைமணலில் சிக்குண்டு மூழ்குவது போல் உணர்கிறார். உண்மையில், அது அழிவைத் தரும் ஆழமான நீரில் மிதப்பது போன்றது. இங்கே ‘புதைமணல்’ என்பது சேறு நிறைந்த குழியைக் குறிப்பிடுகின்றது. இதில் சிக்கிக்கொள்பவர் மெதுவாக உள்ளிழுக்கப்பட்டு மூழ்கிவிடுவார்.

அடுத்து, "ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை; நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது" என்கின்றார் தாவீது. இத்திருவசனங்களில் அவரது மன வேதனை, கையறுநிலை, மரணபயம் ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது.  மேலும் தாவீதின் இந்தத் துயரங்கள் இயேசு கெத்சமணி தோட்டத்தில் அனுபவித்த துயரங்களுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கன. “தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்ற வார்த்தைகளில் இயேசுவின் துயர நிலை வெளிப்படுகிறது. மேலும் 'அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது' என்று நாம் வாசிக்கின்றோம் (காண்க. லூக்கா 22:42-46).

இரண்டாவதாக, "கத்திக் கத்திக் களைத்துப்போனேன்; தொண்டையும் வறண்டுபோயிற்று; என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின" என்கின்றார் தாவீது. கடவுள் தனக்கு அருளவிருக்கும் விடுதலைக்காகக் காத்திருக்கும்போது அவரது தொண்டை வறண்டு, பார்வை மங்கிவிடுகிறது என்பதையும்,  அதேவேளையில், சூழ்நிலைகள் மிகவும் மோசமாகத் தோன்றினாலும், படைப்பாளர் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து தன்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் காத்திருப்பதையும் இந்த இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

மன்றாவதாக, "காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியைவிட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க்குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?” என்று உரைக்கின்றார் தாவீது. இங்கே தலைமுடியை எப்படி நாம் எண்ணிவிட முடியாதோ, அந்த அளவிற்குத் தனது எதிரிகள் பெருகிவிட்டதாக சுட்டிக்காட்டுகின்றார் தாவீது. தன்மீது காழ்ப்புணர்வு கொண்டு தன்னைத் தாக்கத் தேடிய மன்னர் சவுலையும் அவரது ஆள்கள் மற்றும் படைவீரரை அவர் இங்கே குறிப்பிடவில்லை, மாறாக, தன்னையும் தனது மக்களையும் தாக்கி அழிக்க விரும்பிய தனது எதிரி நாட்டு மன்னர்களைக் குறிப்பிடுவதாகவே நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. அத்துடன் தன்னை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதற்காக அவர்கள் தன்மீது பொய்க்குற்றம் சுமத்துகின்றனர் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். இந்த வார்த்தைகள் மெசியாவாகிய கிறிஸ்துவின் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கன. "என்னை வெறுப்போர் என் தந்தையையும் வெறுக்கின்றனர். "வேறு யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யவில்லையென்றால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால், இப்போது அவர்கள் என்னையும் என் தந்தையையும் கண்டும் வெறுத்தார்கள்" என்று இயேசு கூறுவதாகக் குறிப்பிடும் யோவான் நற்செய்தியாளர், ‘காரணமின்றி என்னை வெறுத்தார்கள்’ என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது இவ்வாறு நிறைவேறிற்று (காண்க யோவா 15:23-25) என்று இயேசு சுட்டுவதையும்  எடுத்துக்காட்டுகின்றார். மேலும் "வஞ்சகரான என் எதிரிகள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்; காரணமின்றி என்னை வெறுப்போர் கண்சாடை காட்டி இகழவிடாதீர்" (காண்க.  திபா 35: 19) என்று இதே அர்த்தத்தில் 35-வது திருப்பாடலிலும் கூறுகின்றார் தாவீது.

அடுத்து, "நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?” என்ற வார்த்தைகளில், தான் செய்யாத குற்றங்களுக்காக, ‘குற்றவாளி’ என்று எப்படி பொறுப்பேற்க முடியும் என்றும், தான் குற்றமேதும் செய்யாதபோது, ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி, தாவீது தனது மாசற்றதனத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்கின்றோம். ஆகவே, நமது அன்றாட வாழ்வில் நெருக்கடியான சூழல்கள் ஏற்படும்போதெல்லாம் தாவீதைப் போன்று கடவுளிடம் சரணடைந்து நம்மையும் நமது ஆன்மாவையும் காப்பாற்றிக்கொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவேண்டல் செய்வோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மே 2025, 10:27