MAP

பிலிப்பீன்சில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு முன்பு கிறிஸ்தவர்கள் பிலிப்பீன்சில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு முன்பு கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

பூர்வகுடி மக்களின் கைதுக்கு பிலிப்பீன்ஸ் தலத்திருஅவைக் கண்டனம்!

தனியார் மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரசு அதிகாரி ஒருவர் நுழைவதை எதிர்த்ததாகக் கூறி பூர்வகுடி மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுஜித்தா சுடர்விழி - வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் நாட்டில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பூர்வகுடி மக்களை கைது செய்வதற்கு அதன் தலத்திருஅவை   கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

மே 22, இவ்வியாழனன்று இத்தகவலை வழங்கியுள்ள இச்செய்தி நிறுவனம், தனியார் மேம்பாட்டுத் திட்டங்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆக்கிரமிப்பிலிருந்து தங்கள் மூதாதையர் நிலத்தைப் பாதுகாத்ததற்காக பலவான் பகுதியில்  பத்து பூர்வகுடி மக்கள் அண்மையில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கத்தோலிக்க ஆயர்கள், பூர்வகுடித்  தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுக்கள் இணைந்து  கண்டனம் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

நமது பூர்வகுடி மக்களின் உரிமைகள், அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் அனைத்தும் முக்கியமாக மனிதநேயத்தால் பாதுகாக்கபடுகிறது என்றும், இவையனைத்தும் எல்லா நேரங்களிலும் மதிக்கப்பட வேண்டும், வளர்ச்சி என்ற பெயரில் கனரக வாகனங்களால் அழிக்கப்படக்கூடாது என்றும் இச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ள கிடாபவனைச் சேர்ந்த ஆயரும், பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான ஜோஸ் கோலின் பகாஃபோரோ அவர்கள், பூர்வீகக் குடும்பங்கள் அச்சுறுத்தப்பட்டு, அவர்களின் மூதாதையர் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும்போது நாங்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது" என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் குடியரசுத் அலுவலகம், பழங்குடி மக்கள் மீதான தேசிய ஆணையம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் துறை மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்கள் உடனடியாக தலையிட்டு, இந்த அறிக்கைகளை விசாரித்து, எந்தவொரு சட்டத்திற்கு புறம்பான  நடவடிக்கைகளையும்  நிறுத்துமாறும் பகாஃபோரோ வலியுறுத்தியுள்ளார்.

இத்துடன், தங்கள் நிலத்தையும் உரிமைகளையும் துணிச்சலுடன் பாதுகாக்கும் பாலாபாக் மக்களுடனும், புவேர்ட்டோ பிரின்செசாவின் தலத்திருஅவைகளுடனும் நாங்கள் உறுதியாக உடன் இருக்கின்றோம் என்றும் கூறியுள்ளார் பகாஃபோரோ

பலவானில் உள்ள பலாபாக் நகரில் உள்ள பக்சுக் தீவு கிராமத்தைச் சேர்ந்த பத்து பேர் மே 15-ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டனர். தனியார் மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரசு அதிகாரி ஒருவர் நுழைவதை எதிர்த்ததாகக் கூறி அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2025, 14:25