மியான்மாரில் தொடரும் துயரம்!
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
கடந்த மார்ச் மாதம் 28-ஆம் நாளன்று, மியான்மாரில் ஏற்பட்ட கொடிய நிலநடுக்கத்தால் ஏறக்குறைய 400 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்றும், அங்குள்ள மக்களின் துயரம் தொடர்கிறது என்றும் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, வீடற்றவர்களாக மாறிய ஏறத்தாழ 2,000 பேரில் ஹ்னினும் ஒருவர் என்றும், இவர் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தனது நான்காவது குழந்தையைப் தனது 32-ஆம் வயதில் பெற்றெடுத்தபோது இந்தக் கடினமான சோகம் ஏற்பட்டது என்றும் கூறியதாக இச்செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
மேலும் “எங்களுக்கு வேலை இல்லை, வருமானம் இல்லை, உயிர்வாழ்வதற்கு உதவிகளை நம்பியிருக்கிறோம் என்றும், வாழ்க்கையில் இவ்வளவு கடுமையான சூழ்நிலையை அனுபவிப்போம் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் ஹ்னின் குறிப்பிட்டதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது இச்செய்தி நிறுவனம்.
அத்துடன், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 36 வயது நிரம்பிய சபாய் பியூ மற்றும், ஸ்வே என்னும் இரண்டு பெண்களும் நிலநடுக்கத்தால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், தாங்கள் அனுவித்து வரும் அன்றாடத் துயரங்கள் குறித்தும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதாவும் உரைக்கிறது இச்செய்தி நிறுவனம்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தது 5,09,400 பேருக்கு உணவு, உடல்நலம் மற்றும் வாழ்வாதார ஆதரவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (UNOCHA).
மண்டலே-சாகிங் மற்றும் தேசிய தலைநகரமான நே பி டாவில் ஏற்பட்ட வலிமைவாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மதக் கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அனைத்தையும் தரைமட்டமாகின. இதில் குறைந்தது 3,800 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்