மோதல்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடன் வாழும் மியான்மார் மக்கள்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
மியான்மார் பிளவுபட்டு, மோதல்கள்கள் காரணமாக பல கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடரும் நிலையிலும், நாட்டின் மத்திய பகுதியின் பெருநகரங்களில் அமைதி நிலவுவதாகவும், மக்கள் விசுவாசத்துடன் வாழ்வதாகவும் மியான்மாரில் உள்ள திருத்தந்தையின் மறைபரப்பு நிறுவனங்களின் தேசிய இயக்குநர் Stephen Chit Thein அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது Fides எனப்படும் செய்தி நிறுவனம்.
மேலும் நாட்டின் எல்லைப் பகுதிகளில் மோதல்கள் தொடர்வதால் பெரும் துன்பம் மற்றும் இடப்பெயர்வு ஏற்படுகிறது என்றும், மோதல்களுக்கு மேலதிகமாக நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள துயரங்களையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும் என்றும் அருள்பணியாளர் Stephen கூறியுள்ளதாக அச்செய்தி நிறுவனம் உரைத்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவிவரும் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் அங்குள்ள மக்கள் மனந்தளராமல் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வதையும், எதிர்நோக்கின் ஒளியை இன்னும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதையும் காண்பது தனக்கு மிகவும் வியப்பை அளிப்பதாகவும் அச்செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Stephen.
மேலும், யூபிலி ஆண்டின் கருப்பொருள் நமக்கு நினைவூட்டுவது போல் நமது எதிர்நோக்கு கிறிஸ்துவில் நிறுவப்பட்டு வேரூன்றியுள்ளது என்றும், அது நம்மை ஏமாற்றுவதில்லை, கைவிடுவதில்லை என்னும் நம்பிக்கை மியான்மாரின் துன்புறும் மக்களிடையே ஆழமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Stephen.
மியான்மாரின் அமைதிக்காக மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் போல, தற்போதைய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும் தொடர்ந்து குரலெழுப்பி வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இச்செயலுக்காகத் தான் நன்றி கூறுவதாகவும் உரைத்துள்ளார் அருள்பணியாளர் Stephen..
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்