உலகளாவிய கடன் நெருக்கடியை எதிர்த்துப் போராட அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்த வாரம், உலகளாவிய நம்பிக்கையின் ஒளி ஏற்றும் நிகழ்வின் ஒரு பகுதியாக, மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்க, இங்கிலாந்து கருவூலம், அமெரிக்க காங்கிரஸ் மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய அரசியல் அடையாளங்களில் பிரச்சாரகர்கள் ஒன்று கூடியதாக ICN எனப்படும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 நாடுகளில் ஐந்து நாள் நடைபெறும் இந்த நிகழ்வு, இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் வைத்திருக்கும் கடன் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மே 27, இச்செவ்வாய்க்கிழமையன்று, இலண்டனில் உள்ள பிரித்தானிய கருவூலத்திற்கு வெளியே பல்மதக் குழு ஒன்று ஒன்றிணைந்து வந்து, உலகளாவிய அழைப்பின் பேரில் நம்பிக்கை சார்ந்த மற்றும் குடிமைச் சமூகக் குழுக்களுடனும், உலகெங்கிலும் உள்ள திருச்சபை சமூகங்களுடனும் இணைந்து இந்த முயற்சியில் பங்கேற்றது என்றும் உரைத்துள்ளது அச்செய்தி நிறுவனம்.
இன்று, 330 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நாடுகளில், உடல்நலம் அல்லது கல்வியை விட கடன் செலுத்துதலுக்கு அரசு அதிகமாக செலவிடுகிறது என்றும் அச்செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த நம்பிக்கை ஒளியேற்றும் நிகழ்வில் பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கை பின்னணிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
"தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள நாடுகளுக்கான" கடன் ரத்து செய்ய வேண்டும் என்ற அழைப்புடன், 2025-ஆம் யூபிலி ஆண்டை மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
"மக்களையும் பூமியையும் வறுமையில் ஆழ்த்தும்" பொருளாதாரத்திற்கு மறுப்புத் தெரிவிக்க பல்மத நம்பிக்கையாளர்களை வலியுறுத்தி, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பைத் தொடர தனது விருப்பத்தயும் தெரிவித்துள்ளார் தற்போதைய திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்