MAP

உரோம் நகரின் மேரி மேஜர் பெருங்கோவில் உரோம் நகரின் மேரி மேஜர் பெருங்கோவில்  (ANSA)

அன்னை ஓர் அதிசயம் – உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்கா

இறைவனின் தாயாம் அன்னை மரியாவைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கொண்டாடும்போது பிற கிறிஸ்தவ சபையினரும், பிறமதத்தவரும்கூட அந்தத் தாயைப் போற்றுவதை உலகின் அன்னைமரியா திருத்தலங்களில் காணலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நேயர்களே, அம்மா என்ற சொல்லுக்கு இணையான வேறு சொல் இவ்வுலகின் எந்த மொழிகளிலும் கிடையாது. ஆண்டவர் இயேசுவின் அன்னையான மரியா, ஒரு வரலாற்று மனிதர், ஒரு காவிய நாயகி. இயேசு என்னும் மகா காவியத்தை ஈன்றெடுத்தார் என்பதால் அவரும் காவியமாகவேத் திகழ்கிறார். இந்த அன்னை, விசுவாசத்தின் தாய். இறைவனது வார்த்தையை நம்பியதால் பேறுபெற்றவர் எனப் போற்றப்பட்டவர். இறைவனால் ஆகாதது எதுவுமே இல்லை என்பதை முழுமையாக நம்பியவர். இறைவனின் தாயாம் அன்னை மரியாவைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கொண்டாடும்போது பிற கிறிஸ்தவ சபையினரும், பிறமதத்தவரும்கூட  அந்தத் தாயைப் போற்றுகின்றனர். இதற்கு உலகெங்கிலும் இருக்கின்ற அன்னைமரியா திருத்தலங்களே சான்று.

உலகின் 4 பெருங்கோவில்களில் ஒன்றாக இருந்து, விசுவாசிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்து வந்த உரோம் நகரின் மேரி மேஜர் என்ற அன்னை மரியா திருத்தலம் இன்று பெரிய அளவில் மக்களைக் கவர்ந்து வருகிறது என்றால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது ஒரு காரணம். அண்மைக்கால திருத்தந்தையர்கள் வழக்கமாக புனித பேதுரு பெருங்கோவிலிலேயே அடக்கம் செய்யப்பட்டிருக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா மீது அளவற்ற பக்தி கொண்டவராக இருந்ததால் அந்த பெருங்கோவிலில் உள்ள Salus Populi Romani என்ற அன்னை மரியா திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் சிற்றாலயத்திற்கு அருகில் அவர் விருப்பப்படியே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த பெருங்கோவில் குறித்து இன்றைய நம் நிகழ்ச்சியில் நோக்குவோம்.

அன்னைமரியா திருத்தலங்களுக்கு எல்லாம் தலைமையாய் விளங்குகிறது உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவில். மேரி மேஜர் என்ற பெயரிலேயே இந்தப் பெருங்கோவிலுடைய பெருமைகள் தெரியவரும். இது உரோமையிலுள்ள நான்கு தொன்மைமிக்க பெருங்கோவில்களுள் ஒன்று. உரோம் எஸ்குலின் குன்றின்மீது அமைந்துள்ள இந்தப் பசிலிக்கா, நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆயினும், இதற்கு முன்னதாகவே இந்த இடத்தில் மரியாவுக்கென முதலில் ஆலயம் கட்டப்பட்டதாக 13ம் நூற்றாண்டில் பர்த்தோலோமே தெ த்ரெந்தோ என்ற துறவி கூறியிருக்கிறார்.

துருக்கி நாட்டிலுள்ள எபேசு நகரில் கி.பி.431ம் ஆண்டில் கூடிய பொதுச் சங்கம், புனித கன்னிமரியை, இறைவனின் தாயாக அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டது. “Theotokos” அதாவது மரியா, இறைவனின் தாய் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் புனித கன்னிமரியா பக்தியும் பரவலாகப் பரவியது. இதனால் உரோமைப் பேரரசில் மரியாவுக்கென பல இடங்களில் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. திருத்தந்தை 3ம் சிக்ஸ்துசும்(கி.பி.432-440), புனித கன்னிமரிக்கென எஸ்குலின் குன்றின்மீது ஆலயம் கட்ட விரும்பினார்.

அதற்கு முந்தைய வரலாற்றைப் பார்த்தோமானால், குழந்தைப்பேறு இல்லாத பக்தியுள்ள ஜொவான்னி பத்ரிசியோவும் அவரது மனைவியும் தங்களது சொத்துக்களையும் பொருள்களையும் திருஅவைக்கு நன்கொடையாக அளிக்கத் திட்டமிட்டனர்.  கி.பி.358ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதிக்கும் 5ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் புனித கன்னிமரியா ஜொவான்னிக்கும், திருத்தந்தை லிபேரியோவுக்கும் கனவில் தோன்றி அன்றிரவு பனி பெய்திருக்கும் இடத்தில் தனக்கென ஆலயம் எழுப்புமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில் ஆகஸ்ட் உரோமைக்கு கடுமையான கோடைகாலம். அக்காலத்தில் பனி பெய்வது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆயினும் அன்று காலையில் அவ்விடம் குறித்து அறிந்து இவ்விருவரும் சென்றுப் பார்த்தபோது பனி பெய்திருந்தது. எனவே அந்த இடத்தில் மரியாவுக்கென முதல் ஆலயம் எழுப்பப்பட்டதாக த்ரெந்தோ துறவி சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஆலயம் பனிமய மாதா ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் உள்ளும் புறமும் சீரமைக்கப்பட்டுத் தற்போதைய பெருங்கோவிலாகக் கம்பீரமாய்க் கவினுறக் காட்சி அளிக்கிறது. இந்தப் புனித மேரி மேஜர் பசிலிக்கா, அக்காலத்தைப் போன்று இக்காலத்திலும் மக்கள் விரும்பிச் செல்லும் புனித இடமாக இருக்கின்றது. ஆண்டின் 365 நாள்களும் திருப்பயணிகள் கூட்டம் கூட்டமாக இந்தப் பசிலிக்கா சென்று செபிப்பதைக் காண முடிகின்றது. இங்கு ஒரு பீடத்திலுள்ள சகாய மாதா படம், நற்செய்தியாளர் புனித லூக்கா வரைந்த படமெனவும் சொல்லப்படுகிறது. இறைவனின் தாயான மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலும், மிகப் பெரியதும், மிக நீளமானதும், மிக முக்கியமான ஆலயமுமாக மேரி மேஜர் பசிலிக்கா அமைந்திருக்கின்றது. இந்தப் பசிலிக்காவின் உட்புறக்கூரை மரத்தாலானது. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கூரை,  இஸ்பெயினின் கஸ்தில்லா அரசி இசபெல்லா வழங்கிய தங்கத்தினால் அழகுபடுத்தப்பட்டது எனவும் வரலாறு கூறுகிறது.

மேலும், இங்கு தலைமைப் பலிபீடத்துக்குக் கீழ் இயேசு பிறந்த மாட்டுத்தொட்டிலின் சில மரத்துண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்தப் பசிலிக்கா, மாட்டுத்தொட்டிலின் புனித மரியா என்றே முன்னர் அழைக்கப்பட்டது. 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி மரியா, பாவமின்றி பிறந்தார் என அறிக்கையிட்ட திருத்தந்தை 9ம் பத்திநாதர், இந்தச் சிறு புனித மரக்கட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தைப் புதுப்பிக்குமாறு கட்டளையிட்டார். இந்தப் புனித மரக்கட்டைகள் 642ம் ஆண்டில் திருத்தந்தை முதலாம் தெயோதோர் காலத்தில் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்த பெருங்கோவிலில்தான் மிகவும் புகழ்வாய்ந்த, மற்றும் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மிக நெருக்கமான "Salus Populi Romani" அன்னை மரியா திருஉருவப்படம் உள்ளது. 590ஆம் ஆண்டு, உரோம் நகரில் கொள்ளை நோய் பரவியிருந்த வேளையில், திருத்தந்தை பெரிய கிரகரி அவர்கள், "Salus Populi Romani" என்ற இந்த திருஉருவப்படத்தை நகரெங்கும் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். அன்று முதல் இந்த உருவப்படம், 'உரோம் நகரின் மீட்பாக' விளங்குகிறது.

கோவிட் பெருந்தொற்று, இத்தாலியையும் உலகையும் வெகுவாக வதைத்துவந்த 2020ஆம் ஆண்டில், மார்ச் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள "Salus Populi Romani" திருஉருவத்திற்கு முன்னும், San Marcello ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள, அறையப்பட்ட கிறிஸ்துவின் சிலுவைக்கு முன்னும் செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவண்ணம், 2020 மார்ச் 27ஆம் தேதி, ஆள் நடமாட்டம் ஏதுமற்ற புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், கோவிட்  பெருந்தொற்று தீரவேண்டுமென திருத்தந்தை மேற்கொண்ட சிறப்பு Urbi et Orbi வழிபாட்டில், "Salus Populi Romani" திருஉருவப்படமும், அறையப்பட்ட கிறிஸ்துவின் சிலுவையும் வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த பெருங்கோவிலின்மீது தனிப்பட அன்பு கொண்டிருந்தார். தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாள் காலையிலேயே, அதாவது 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதியே புனித மேரி மேஜர் பேராலயத்திற்கு பயணம் செய்து அன்னை மரியா திரு உருவத்தின் முன் செபித்து தன் பணிகளைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதுபோல் “எனது மண்ணக வாழ்வின் இறுதிப் பயணம் பழம்பெருமை வாய்ந்த இந்த மரியன்னை பெருங்கோவிலில் முடிவடைய வேண்டுமென நான் விரும்புகின்றேன்” என்றும் எழுதி வைத்துள்ளார். “எனது ஒவ்வொரு வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் இறைவேண்டல் செய்ய நான் இங்கே வருகிறேன்” என்றும், “நம்பிக்கையுடன் எனது உள்ளத்தின் நோக்கங்களை தூய்மைமிகு அன்னை மரியாவிடம் ஒப்படைத்து அவருடைய இளகிய மற்றும் தாய்வழி கவனிப்புக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றும் உருக்கமாக தன் இறுதி விருப்ப ஆவணத்தில் கூறியுள்ளார்.

உடல் சுகவீனமுற்று 38 நாட்கள் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பும் வழியிலும், நேரடியாக வத்திக்கானுக்கு வராமல், புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, வாசலில் அங்குள்ள தலைமைக்குருவைச் சந்தித்து தன் சார்பாக அன்னைமரியா திருவுருவத்திற்கு மலர்க்கொத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டு மலர்க்கொத்தையும் வழங்கினார். பின்னர், உடல் நலமுற்றிருந்த நிலையிலும், ஏப்ரல் 12ஆம் தேதியன்று சனிக்கிழமை, அதாவது புனித வாரத்தின் முதல் நாளாகிய குருத்து ஞாயிறுக்கு முந்தைய நாள் வத்திக்கானுக்கு ஏறக்குறைய 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேரி மேஜர் பெருங்கோவில் வந்து சக்கர நாற்காலியில் அன்னை மரியா திருவுருவம் முன், அதாவது Salus Populi Romani திருவுருவம் முன் சிறிது நேரம் செபித்தார். தனது தலைமைத்துவப் பணியின் பன்னிரண்டு ஆண்டுகளில் 126 முறைகள் உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் பதவிக்காலத்தின்போது, புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள அன்னை மரியா திரு உருவத்திற்கு 2023ஆம் ஆண்டு தங்க ரோஜா ஒன்றையும் பரிசளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 1551ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் ஜூலியஸ் அவர்களாலும், 1613ல் திருத்தந்தை 5ஆம் பவுல் அவர்களாலும் Salus Populi Romani அன்னை மரியாவுக்கு வழங்கபட்ட தங்க ரோஜாக்கள், நெப்போலியனின் படைகள் திருத்தந்தையின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இடங்களை முற்றுகையிட்டபோது காணாமல் போன நிலையில், 2023ஆம் ஆண்டு  இத்திருவுருவத்திற்கு தங்க ரோஜா ஒன்றை பரிசளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி மேஜர் பெருங்கோவிலுக்கு உள்ளேயுள்ள, "Salus Populi Romani", அதாவது, "உரோம் மக்களின் மீட்பு" என்ற பெயருடன் அமைந்துள்ள அன்னை மரியாவின் திருஉருவப் படத்தைத் தாங்கியிருக்கும் சிற்றாலயத்திற்கு அருகில் திருத்தந்தையின் கல்லறை அமைந்துள்ளது. திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக தொடர்ந்து செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மே 2025, 12:52