திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணை மடல் பகுதி 25
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுளின் அன்னையாம் மரியா எதிர்நோக்கின் மிக உயர்ந்த சான்றாகக் காட்சியளிக்கின்றார். வாழ்க்கையின் எதார்த்தத்தில் கடவுளது அருளின் பரிசாக எதிர்நோக்கைப் பெற்றவர் அன்னை மரியா. ஒவ்வொரு தாயையும் போலவே, அவர் தன் மகனைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவருடைய எதிர்காலத்தைப் பற்றி நினைத்தார். இறைவாக்கினர் சிமியோன் எருசலேம் ஆலயத்தில் அவரிடம் எடுத்துரைத்த "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (லூக். 2:34-35) என்ற வார்த்தைகள் அவருடைய இதயத்தில் உறுதியாகப் பதிந்துவிட்டன: சிலுவையின் அடியில், இயேசு துன்பப்பட்டு இறப்பதைக் கண்டபோது, அவரது உள்ளம் மிகவும் துயரத்தை அனுபவித்தாலும், எதிர்நோக்கையும் கடவுள் மீதான நம்பிக்கையையும் இழக்காமல் "ஆகட்டும்" என்ற தனது பதிலை மீண்டும் மீண்டும் உள்ளத்தில் கூறியவர். இதன் வழியாக “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” (மாற்கு 8:31) என்று தனது மகனாகிய இயேசு தனது இறப்பு குறித்து முன்னறிவித்தத்தை நிறைவேற்றுவதற்காக இறைத்திருவுளத்திற்கு ஒத்துழைத்தார்.
அன்பினால் வழங்கப்பட்ட இந்த துன்பத்தை மனமகிழ்வுடன் ஏற்றதால் நம் அனைவரின் தாயாக எதிர்நோக்கின் அன்னையாக மாறினார். நம்பிக்கை நட்சத்திரம் என்று அன்னை மரியாவை நாம் அழைப்பது தற்செயலானது அல்ல. ஏனெனில் புயல் சூழ்ந்த, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாழ்வில் கடவுளின் தாய் மரியா நமக்கு உதவுகின்றார், நம்மைப் பாதுகாக்கின்றார், கடவுளில் நாம் நம்பிக்கைக் கொண்டிருக்கவும், நமது எதிர்நோக்கை தொடர்ந்து பெறவும் அழைப்புவிடுக்கின்றார் என்ற நம்பிக்கையின் அடையாளமாக அன்னை மரியா எப்போதும் திகழ்கின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்