MAP

துயருறும் காசா மக்கள் துயருறும் காசா மக்கள்   (AFP or licensors)

காசாவுக்காக இறைவேண்டல் செய்ய அயர்லாந்து ஆயர்கள் அழைப்பு!

பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இடைவிடாத குண்டுவீச்சு, பட்டினியால் வாடும் மக்களுக்கு வேண்டுமென்றே உணவு வழங்கப்படாமல் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது : அயர்லாந்து ஆயர்பேரவை

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

மே 26, இத்திங்கள்கிழமையன்று,  "மனிதகுலம் அதன் இதயத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது"  என்று அயர்லாந்து  கத்தோலிக்க ஆயர் பேரவை கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது ICN எனப்படும் செய்தி நிறுவனம்.

முக்கியமாக  காசாவில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவைப் பற்றி மேனூத்தில் கூடிய அயர்லாந்து ஆயர்பேரவையில் விவாதிக்கப்பட்டது என்றும், முன்னதாக அவர்கள்  புனித பூமியிலும், உக்ரைன், சூடான் மற்றும் உலகின் பிற பிரச்சனைக்குரிய பகுதிகளின் அமைதிக்காகவும் இறைவேண்டல் செய்தனர் என்றும் அதன் செய்தியில் கூறப்பட்டுள்ளது.  

காசாவில் மரணம் மற்றும் சமூக அழிவின் படங்களைக் கண்டு அயர்லாந்து முழுவதிலுமுள்ள பங்கு மக்கள்  தங்கள் அச்சம்  மற்றும் அவர்களின்  இயலாமையை வெளிப்படுத்தினர் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காசாவின் அன்னையர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலையில் , அவர்களின்  குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர் என்றும், அதேவேளையில் உணவுப்பொருட்களை ஏற்றிச்செல்லும்  வாகனங்கள், காசா  பகுதிக்குள்  நுழைய மறுக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ள அதன் ஆயர்கள், ஜூன் மாதம் இயேசுவின் திருஇருதய மாதம்  என்பதால், இதயமற்ற உலகில் கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்காக அம்மாதம் முழுவதும் அயர்லாந்து மக்கள் அனைவரும் இறைவேண்டலில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பு எடுத்துக்காட்டுகிறது.

பொதுமக்கள் வாழும்  பகுதிகளில் இடைவிடாத குண்டுவீச்சு, பட்டினியால் வாடும் மக்களுக்கு வேண்டுமென்றே உணவு வழங்கப்படாமல் இருப்பது, பிணையக்கைதிககளை இரக்கமின்றி பிடித்து வைத்திருப்பது போன்றவற்றைப் பார்க்கும்போது, மனிதகுலம் அதன் இதயத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது என்றும் ஆயர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

 "காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கவும், விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டு வரவும் வேண்டும்'  மேலும் அங்கு நிகழும் போருக்கான விலையை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் செலுத்துகிறார்கள்.'' என்று கூறியுள்ள நமது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின்  பிரதிபலிப்பாக நாங்கள் இருக்கிறோம்  எனவும் தெரிவித்துள்ளனர் அயர்லாந்து ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2025, 12:26