நேர்காணல் - திருஅவை வளர்ச்சியில் பதின்பருவத்தினர்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இளைஞர்களே! அனைத்து மனச்சோர்வுகளையும் சலிப்பையும் வெற்றிகொள்ளும் நம்பிக்கையில் நடைபோடுங்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளுக்கேற்ப இளைஞர்கள் அனைவரும் நம்பிக்கையோடு நடைபோட அழைப்பு விடுக்கும் காலமே இந்த யூபிலி ஆண்டுக் காலம். நல்லதொரு இலக்கை வகுத்துக் கொண்டு அதனை நோக்கி நாம் நடைபோடும்போது, நம் கனவுகளும், திட்டங்களும், அதன் வெற்றிகளும் ஒரு நாளும் இழக்கப்படாது. திருஅவையின் முதுகெலும்பாக இருப்பவர்கள் இளையோர். இத்தகைய இளையோரின் இதயங்கள் விரிவடையவும், எண்ணங்கள் உயர்வடையவும், அச்சங்கள் அகலவும் இதனால் திருஅவையில் வளர்ச்சிகள் பல மேம்படவும் உலகளவில் பல்வேறு இளையோர் இயக்கங்கள் மற்றும் அமைப்புக்கள் உதவி வருகின்றன. அவ்வகையில் திருஅவை வளர்ச்சியில் பதின்பருவத்தினர் என்ற தலைப்பில் இன்றைய நம் நேர்காணலில் தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி. நா. பார்த்தசாரதி
இயேசுசபை சென்னை மறைமாநில அருள்பணியாளரான தந்தை அவர்கள், அய்க்கஃப், சென்னை இளைஞர் கூட்டமைப்பு மற்றும் மாஜிஸ் டிஜிட்டல் ஹோம் போன்ற இளைஞர் பணிகளுக்கு இயக்குநராக இருந்து வருகின்றார். சமூகத் தொழில் முனைவோர் என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டிருக்கின்றார். 5 புத்தகங்களையும், 200க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரைகளையும் எழுதி தனது படைப்பாற்றலை மெருகேற்றியுள்ளார். தலைமைத்துவம், வீதி நாடகம் மற்றும் அரசியல் சாசனம் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளித்துக்கொண்டிருக்கும் தந்தை அவர்களை திருஅவை வளர்ச்சியில் பதின்பருவத்தினர் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
திருஅவையின் எதிர்கால நம்பிக்கைகளாய் வலம் வருபவர்கள் இளையோர். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய், திருஅவையின் எதிர்கால தூண்களாய்த் திகழும் இளையோர் மீது அவர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடே இளையோர் பற்றி எடுத்துரைக்கும் "கிறிஸ்து வாழ்கின்றார்" என்ற திருத்தூது அறிவுரை மடல். கரடு முரடான பாதையில் பயணிக்கும் இளம் தலைமுறையினரை மென்மையான பாதையில், மிருதுவான பாதையில் வழிநடத்தும் பொறுப்பு திருஅவைக்கு உள்ளது என்பதைத் தெளிவாய் உணர்த்தியவர்.
உலக இன்பங்களுக்கும், போலியான, எதிர்மறையான பல்வேறு சூழல்களுக்கும் அடிமையாகி இன்று தங்களுடைய வாழ்வையே இழக்கும் நிலைக்கு இளையோர் பலர் மாறிவிட்டனர். சமயம் சார்ந்த சிக்கல்களிலும், மதம் சார்ந்த பிரச்சனைகளிலும், நுகர்வுக் கலாச்சாரத்தாலும், அலைபேசியின் தவறான போக்குகளினாலும், உறவுச் சிக்கல்களினாலும், ஆணவக்கொலைகள், சாதிய வன்முறைகள், தவறான கருத்தியல்கள், சிற்றின்ப ஆசைகள் போன்றவற்றிற்கு அடிமையாகின்றனர். ஆண்டவரின் அழைப்பினை நிராகரிக்கும் மக்களாக, கடவுளின் வார்த்தையை உதாசீனப்படுத்தும் மனிதராக சில இளையோர் உருவாக்கப்பட்டுவிட்டனர். இத்தகைய அடிமைநிலை நீக்கப்பட்டு, முழுமன சுதந்திரத்தோடும், இறைவன் மீது கொள்ளும் ஆழமான நம்பிக்கையினாலும் வளர இளையோர்க்காக சிறப்பாக செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்