MAP

திருத்தந்தை 14-ஆம் லியோ திருத்தந்தை 14-ஆம் லியோ  

சமூக நீதியில் கவனம் செலுத்துபவர் திருத்தந்தை 14-ஆம் லியோ

வேகமாக மாறிவரும் சமூகத்தில், இந்தோனேசிய கத்தோலிக்க தலத்திருஅவையானது அதன் பணியைப் புரிந்துகொண்டு விரிவுபடுத்த வேண்டும். சமூக நீதியைப் பிரதிபலிக்க தீவிரமாக செயல்பட வேண்டும். - அருள்பணி Alfonsus.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சமூக நீதி என்பது இந்தோனேசியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிகவும் தேவையான ஒன்று என்றும், திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களின் வழிமுறையைப்பின்பற்றி, புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ சமூக நீதியில் தனது கவனத்தையும் செயல்பாட்டையும் வைத்து செயல்படுகின்றார் என்று கூறினார் அருள்பணி Alfonsus Widhiwiryawan Sx

மே 21, பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் இந்தோனேசியா தலத்திருஅவை, புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் திருப்பீட மறைப்பணி செயல்பாடுகளுக்கான இந்தோனேசியா இயக்குநர் அருள்பணி Alfonsus Widhiwiryawan Sx.

வேகமாக மாறிவரும் சமூகத்தில், இந்தோனேசிய கத்தோலிக்க தலத்திருஅவையானது அதன் பணியைப் புரிந்துகொண்டு விரிவுபடுத்த வேண்டும் என்றும், சமூக நீதியைப் பிரதிபலிக்க தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார் அருள்பணி Alfonsus.

அரசுத்தலைவர்களுக்கான உரையில் அமைதியைப் பின்தொடர்வதற்கு நீதியைப் பின்பற்றுவது அவசியம் என்று திருத்தந்தை 14-ஆம் லியோ கூறிய கருத்துக்களை நினைவு கூர்ந்த அருள்பணியாளர் Alfonsus அவர்கள், மிகவும் மாறுபட்ட நிலப்பரப்புக்கள், கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் சூழல்களைக் கொண்ட ஒரு நாடான இந்தோனேசியாவில் சமூக நீதியின் தேவை அதிகமாக உணரப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற நமது தேசிய குறிக்கோளை, நாம் ஒவ்வொரு நாளும் திருஅவையில் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம் என்று வலியுறுத்திய அருள்பணியாளர் Alfonsus அவர்கள், இந்தோனேசியாவின் பஞ்சசீலக் கொள்கையில் மிக முக்கியமான ஒன்று சமூக நீதி என்றும் தெரிவித்தார்.

சமூக நீதியை அடைவதற்கான உண்மையான மற்றும் எதிர்நோக்குடைய அர்ப்பணிப்பை 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது இந்தோனேசிய திருத்தூதுப்பயணத்தின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதிகமாக வலியுறுத்தினார் என்றும் கூறினார் அருள்பணியாளர் Alfonsus. (FIDES)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 மே 2025, 14:42