கத்தோலிக்கர் குறித்த பார்வையை மாற்றிய திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரவேற்பு அணுகுமுறையால் இந்தியாவில் கத்தோலிக்கர்கள் குறித்த பார்வை நன்முறையானதாக மாறியுள்ளதாக தெரிவித்தார் இந்தோர் ஆயர் தாமஸ் மேத்யு குட்டிமாக்கல்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை உரையாடலின், வரவேற்பின், கருணையின் மனிதனாக நோக்கும் இஸ்லாமியர், இந்துக்கள், சீக்கியர் என கிறிஸ்தவர் அல்லாதோர் பெருமெண்ணிக்கையில் திருத்தந்தையின் மரணத்தையொட்டி அனுதாபங்களையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்க வந்ததைக் காணமுடிந்தது என்ற மத்திய பிரதேசத்தின் இந்தோர் ஆயர் குட்டிமாக்கல் அவர்கள், மதங்களிடையேயான இணக்கவாழ்வுக்கு திருத்தந்தையின் அணுகுமுறை பெரிய அளவில் உதவியுள்ளது என்றார்.
இந்திய அளவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.3 விழுக்காடாக இருந்தாலும் மத்திய பிரதேச மாநிலத்தில் அது 0.3 விழுக்காடாகவே உள்ளது என்ற நிலையிலும், திருத்தந்தையின் வார்த்தைகளும் செயல்பாடுகளும் பலரின் இதயங்களைத் தொட்டு கிறிஸ்தவர்கள் குறித்த அணுகுமுறையை மாற்ற உதவியுள்ளது என்றார் இந்தோர் ஆயர்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற தீவிரவாத மத அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பதட்டநிலைகள் இடம்பெற்றுவரும் மத்தியப் பிரதேசத்தில், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறத்தண்டனை வழங்கும் சட்டம் 2021ஆம் ஆண்டு முதல் அமலில் இருக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்