கர்தினால் கூட்ஸ்: சகோதரத்துவம் மீண்டும் தட்டியெழுப்பப்பட
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இந்தியா பாகிஸ்தானிடையே பதட்டநிலைகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில் இரு நாட்டு மக்களும் தங்கள் மூல வேர்களை அறிந்து, மகாத்மா காந்தி கூறியதுபோல் இரு நாட்டு மக்களும் ஒரே தாயின் குழந்தைகள் என்பதை உணர்ந்தவர்களாய் அமைதிக்காக ஜெபிக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ்.
திருத்தந்தைக்கான தேர்தலில் கலந்துகொண்டு, திருத்தந்தையின் பொறுப்பேற்பு திருப்பலியிலும் பங்குபெற்ற கர்தினால் கூட்ஸ் அவர்கள், ஆசிய பகுதியின் பதட்ட நிலைகள் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திற்கு நேர்முகம் வழங்கியபோது, இன்றைய சூழலில் இந்தியா பாகிஸ்தானிடையே உண்மையான அமைதிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற அவசரத் தேவை உள்ளது என்றார்.
அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் குடிமக்கள் மற்றும் மத சமூகம் என்ற வகையில் கிறிஸ்தவர்கள் இரு நாடுகளிடையே பகையை நீக்கவும், இதயங்களில் ஆயுதக் களைவை மேற்கொள்ளவும், மன்னிப்பு குறித்து இரு நாட்டு மக்களுக்கும் கற்பிக்கவும் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் கர்தினால் கூட்ஸ்.
பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரத்திற்காக ஒன்றிணைந்து உழைத்த இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் சகோதரத்துவ உணர்வுநிலை மீண்டும் தட்டியெழுப்பப்பட வேண்டும், ஏனெனில் அதுவே வருங்காலத்திற்கான நீதியான நிரந்தர அமைதியை கட்டியெழுப்புவதற்கான வழி என மேலும் உரைத்தார் கராச்சியின் முன்னாள் பேராயர் கர்தினால் கூட்ஸ்.
இரு சகோதர நாடுகளாக அருகருகே வாழும் நோக்கத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னாவினால் உருவாக்கப்பட்ட விருப்பத்திற்கு நாம் திரும்பச் சென்று, நமக்கு அடுத்திருப்போருடன் அமைதியில் வாழ்வோம் என இரு நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுத்தார் கர்தினால் கூட்ஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்