MAP

அன்னை மரியா திரு உருவம் அன்னை மரியா திரு உருவம்  (Musei Vaticani)

அன்னை ஓர் அதிசயம் – திருவெளிப்பாடு அன்னைமரியா, உரோம்

திருத்தந்தையைக் கொல்வதற்கு புருனோ சபதம் எடுத்தார். இதை எண்பிப்பதாக இஸ்பெயினில் ஒரு பட்டாக்கத்தியை வாங்கி, அதன்மீது, “திருத்தந்தைக்கு மரணம்” என்ற வார்த்தைகளை எழுதி வைத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சமூகத்தில் அதர்மங்களும் தீமைகளும் சீர்கேடுகளும் புரையோடி, மனிதர்களிடம் ஒரு முழுமையான சீர்திருத்தமும், மாற்றமும் தேவைப்படும்போது இறைவன் தம்மை எந்த வடிவத்திலாவது காண்பித்து மகத்தான மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறார். அவரது காட்சிகளால் தனிமனிதர் மற்றும் சமூகத்தின் மனப்போக்கும், வாழ்க்கைமுறையும் அடியோடு மாறி மறுமலர்ச்சி ஏற்படுவதை வரலாற்று ஏடுகள் பதிவு செய்து வருகின்றன. இயேசுவின் தாய் அன்னைமரியாவும் உலகின் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மக்களுக்கு காட்சி கொடுத்து மக்களின் வாழ்வில் நல்மாற்றம் ஏற்படச் செய்துள்ளார். இப்படி அன்னைமரியாவின் காட்சியால் மனமாறியவர் உரோம் நகரின் புருனோ கொர்னாக்கியோலா (Bruno Cornacchiola).

1913ம் ஆண்டு மே 9ம் தேதி ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த புருனோ கொர்னாக்கியோலா கத்தோலிக்க மறைக்கல்வியை மிகச் சிறிதளவே பெற்றிருந்தார். அவரது பெற்றோரும் நல்ல கத்தோலிக்கராக வாழவில்லை. இத்தாலிய அரசின் சட்டப்படி இராணுவச் சேவையை முடித்த பின்னர் தனது 23வது வயதில் Iolanda Lo Gatto என்ற பெண்ணை மணந்தார். நிறையப் பணம் சேர்க்க வேண்டுமென்ற ஆசையில் இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையில் தேசியவாதிகளின் பக்கம் சேர்ந்து போரிட ஆசைப்பட்டார். எனவே திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை விட்டுவிட்டு இஸ்பெயின் சென்று போரில் ஈடுபட்டார். அங்கு கத்தோலிக்க விசுவாசத்தை முழுவதும் இழந்து Seventh Day Adventist பிரிந்த கிறிஸ்தவ சபையில் சேர்ந்தார். அச்சபையைச் சார்ந்த ஜெர்மானியர் ஒருவர், உலகின் அனைத்துத் தீமைகளுக்கும் திருத்தந்தையர் ஆட்சிதான் காரணம் என்ற தீய எண்ணத்தை புருனோவின் மனத்தில் ஆழமாக விதைத்தார். இதைக் கேட்ட புருனோவுக்குத் திருஅவைமீது கடும் வெறுப்பு ஏற்பட்டது. திருத்தந்தையைக் கொல்வதற்கும் அவர் சபதம் எடுத்தார். இது ஒரு முட்டாள்தனமான அச்சுறுத்தல் இல்லை என்பதை எண்பிப்பதற்காக இஸ்பெயினில் ஒரு பட்டாக்கத்தியையும் வாங்கினார். அதன்மீது, “திருத்தந்தைக்கு மரணம்” என்ற வார்த்தைகளை எழுதி வைத்தார்.

1939ம் ஆண்டில் உரோம் திரும்பினார் புருனோ. ஆனால் புருனோவின் மனைவி Iolanda, நல்ல கத்தோலிக்கராக வாழ்ந்து வந்தார். அதனைச் சகித்துக்கொள்ள முடியாத புருனோ, கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் மனைவியை அடிக்கடி அடிப்பார். பிள்ளைகளை ஆலயத்துக்கு அழைத்துச் செல்வதைத் தடுத்தார். தனது கடைசி மகனுக்குத் திருமுழுக்கு கொடுக்கவும் மறுத்தார். மனைவியை அடிக்கடி அடித்து வதைப்பதோடு கெட்ட வார்த்தைகளையும் பேசுவார். வேறுபலப் பெண்களோடும் தொடர்பு வைத்திருந்தார்.  அதோடு வீட்டிலிருந்த கத்தோலிக்கம் சார்ந்த அனைத்துப் பொருள்களையும் படங்களையும் அழித்தார். பின்னர் உரோமிலுள்ள Protestant Adventist சபையில் சேருவதற்கு முடிவு செய்து அவரது மனைவியையும் அச்சபையில் சேருமாறு வற்புறுத்தினார். இவரது இம்சை தாங்க முடியாத Iolanda அதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். புருனோ முதலில் 9 மாதங்களுக்கு, இயேசுவின் திருஇதயத்துக்கு முதல் வெள்ளிக்கிழமை பக்திமுயற்சியைச் செய்ய வேண்டும் என்பதே அது. அதில் புருனோவை கடவுள் மனம் மாற்றிவிடுவார் என்று ஆழமாக நம்பினார் Iolanda. ஆனால் அந்தப் பக்திமுயற்சியின் 9வது மாதத்தின் முடிவில் புருனோ Adventists கிறிஸ்தவ சபையில் சேருவதில் உறுதியாக இருந்தார். அவரது மனைவி அம்முடிவை ஏற்கவில்லை.

புருனோ, 1939ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டுவரை உரோமில் பொது போக்குவரத்து வாகனத்தில் பயணச்சீட்டுக் கண்காணிப்பாளராக வேலை செய்தார். புருனோ தம்பதியருக்கு 10 வயதில் Isola என்ற மகளும், 7 வயதில் Carlo, 4 வயதில் Gianfranco என இரண்டு மகன்களும் இருந்தனர். புருனோ தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்தது 3 பிள்ளைகளையும் மிகவும் பாதித்தது. திருஅவைமீது புருனோவுக்கு இருந்த வெறுப்பில், 1947ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி அப்போதைய திருத்தந்தை 12ம் பத்திநாதரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினார். 1947ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி சனிக்கிழமை. அந்த நாள் அவ்வாண்டு கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்துவரும் சனிக்கிழமை. அன்று Tre Fontaneயிலுள்ள டிராபிஸ்ட் துறவிகள் செய்யும் இனிப்பை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதற்காக அவர்களை அழைத்து வந்தார். இந்த இடத்தில்தான் புனித பவுல் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டார். அன்று மாலை 4 மணி இருக்கும். Tre Fontane பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் பிள்ளைகளை விளையாடச் சொல்லிவிட்டு, கத்தோலிக்கத்துக்கு எதிரான, அன்னைமரியாவுக்கு எதிரான உரைகள் ஆற்றுவதற்குச் சிந்தித்துக் கொண்டிருந்தார் புருனோ.

புருனோவின் கார்லோ என்ற 7 வயது மகன், புருனோவிடம், அப்பா எனது பந்து தொலைந்துவிட்டது, எடுத்துக் கொடுங்கள் என்று கேட்க, அவரும் கார்லோவோடு சேர்ந்து பந்தைத் தேடிச் சென்றார். அப்போது ஓர் இருண்ட குகையின் முகப்பில் அவரது இளைய மகனான 4 வயது ஜான்ஃபிராங்கோ முழங்காலிட்டு கைகளைக் கூப்பியபடி, ஏதோ உயிருள்ள ஒருவரிடம் பேசுவது போன்று, "அழகான பெண்!, அழகான பெண்!" என்று உச்சரித்துக் கொண்டிருந்தான். அவன் வேறு ஓர் உலகத்தில் இருப்பது போன்று காணப்பட்டான். புருனோவுக்கு ஒரே வியப்பு. பயம் அவரைக் கவ்வியது. தனது மற்ற இரண்டு பிள்ளைகளான இசோலா மற்றும் கார்லோவிடம் இதற்கு விளக்கம் கேட்டார். ஒருசில நிமிடங்களில் அவ்விருவரும் முழங்காலிட்டு கைகளைக் கூப்பினர். அதே காட்சியால் அவர்களும் சூழப்பட்டனர். புருனோ வாயடைத்து நின்றார். மூன்று சிறாரும் ஒருமித்த குரலில் "அழகான பெண்!" என்று கத்தினர். புருனோ அப்பிள்ளைகளை அவ்விடத்திலிருந்து தூக்க முயற்சித்தார். ஆனால் பிசினால் தரையோடு ஒட்டப்பட்டவர்கள் போன்று அவர்களைத் தூக்க முடியவில்லை. பயத்தால் மிரண்டு நின்ற புருனோவும் அந்த விண்ணகக் காட்சியால் ஆட்கொள்ளப்பட்டார்.

புருனோவின் கண்கள் ஒளியால் சூழப்பட்டிருந்தன. அவரது ஆவி உடலைவிட்டுப் பிரிந்தது போன்று அவரது உடல் இலேசாக இருப்பதை உணர்ந்தார். சிறிதுநேரம் கண்பார்வையை இழந்திருந்து மீண்டும் பார்வை பெற்று பார்த்தபோது அக்குகைக்குள் வார்த்தையால் விவரிக்க முடியாத அழகுடன் ஒளிமிக்க பெண் ஒருவரைப் பார்த்தார் புருனோ. அப்பெண்ணின் தலை பளிச்சிடும் பொன்னிற ஒளியால் நிறைந்திருந்தது. தலைமுடி கறுப்பாகவும், அங்கி ஒளிரும் வெண்மை நிறத்திலும் இருந்தன. இடைக்கச்சை இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. பச்சைநிற மேலாடையையும் அப்பெண் அணிந்திருந்தார். காலணி அணியாத பாதங்கள் ஒரு கறுப்புத் துணிமேல் இருந்தன. அத்துணியில் சிதைத்து நொறுக்கப்பட்ட சிலுவையும் இருந்தது. வெண்மை, இளஞ்சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களும் புருனோவுக்கு ஒரு முக்கியத்துவத்தை எடுத்துரைத்தன. அப்பெண்ணின் முகம் தாய்க்குரிய கனிவுடன் இருந்தாலும் அவ்வப்போது கவலையாகவும் தெரிந்தது. அவரது வலக்கை, ஒரு சாம்பல் நிற நூலை நெஞ்சில் வைத்துப் பிடித்திருந்தது. ஒரு கட்டத்தில் அங்கு கீழே கிடந்த சிலுவையை நோக்கி கைகள் காட்டிய பின்னர் மீண்டும் அவை குவிந்து கொண்டன. அந்தப் பெண்ணாகிய அன்னை மரியா புருனோவிடம் மெதுவாக ஏறக்குறைய ஒரு மணி, 20 நிமிட நேரம் பேசினார்...

“நானே திருவெளிப்பாட்டின் கன்னிமரியா. நான் மூவொரு இறைவனோடு தொடர்பு கொண்டவர். நீ என்னை வெறித்தனமாய்த் துன்புறுத்தினாய். அதை நிறுத்துவதற்கான நேரம் இது. இப்பூமியில் விண்ணகத்தின் அடையாளமாக இருக்கும் திருஅவையில் வந்து சேர். கடவுளின் வாக்குறுதி, மாறாமல் அப்படியே என்றும் இருக்கும். உனது மனைவியின் தூண்டுதலில் இயேசுவின் திருஇதயத்துக்கு 9 மாதங்கள் நீ செய்த பக்திமுயற்சி உன்னைக் காப்பாற்றியுள்ளது. இறைக்கோட்பாடுகளின்படி வாழ். கிறிஸ்தவத்தை நடைமுறைப்படுத்து. விசுவாசத்தை வாழ். நீ நம்பிக்கை மற்றும் அன்போடு சொல்லும் அருள்நிறை மரியே என்ற செபங்கள், தங்க ஈட்டிகள் போன்று இயேசுவின் திருஇதயத்துக்கு நேரடியாகச் செல்லும். அதிகமாகச் செபி. பாவிகள், நம்பிக்கையற்றவர்கள் மற்றும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்காகச் செபமாலை சொல். இக்குகை இருக்கும் பாவம் நிறைந்த இடத்தில் பாவிகள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் மனம் மாறுவதற்குப் புதுமைகளைச் செய்வேன். நீ திருத்தந்தையிடம் சென்று நான் கூறியவற்றைச் சொல்” என்று அன்னை மரியா புருனோவிடம் பேசிய பின்னர் அவர்களைப் பார்த்து புன்முறுவலுடன் சுவர் பக்கமாகத் திரும்பி மறைந்தார். இக்குகை இருக்கும் இடம் அக்காலத்தில் ஒழுக்கநெறிச் சீர்குலைவுகள் இடம்பெறும் இடமாக இருந்தது. புருனோவும் அவரின் பிள்ளைகளும் அக்காட்சியில் ஆழ்ந்தவர்களாய், பக்கத்திலிருந்த Trappist ஆலயம் சென்று இறைவனுக்கு நன்றி சொன்னார்கள். வீட்டுக்குச் செல்லுமுன்னர் அக்குகையிலிருந்து வந்த நறுமணத்தை நுகர மீண்டும் சென்றனர். அவ்விடம் பாழடைந்த புழுதித் தரை. அவ்விடத்தில் புருனோ தனது வீட்டுச் சாவியால் எழுதி வைத்தார். “1947ம் ஆண்டு ஏப்ரல் 12, இக்குகையில் திருவெளிப்பாடு அன்னைமரியா பிரிந்த கிறிஸ்தவ சபையின் Bruno Cornacchiolaக்குத் தோன்றினார்” என்பதாக அது இருந்தது.

வீட்டுக்குச் சென்றதும் அவர்களிடமிருந்து நறுமணம் வந்ததை அவர்களின் தாய் உணர்ந்தார். அப்பிள்ளைகள் அங்கு நடந்ததை அனைவருக்கும் அறிவித்தனர். புருனோவும் இரவில் தனது மனைவியிடம் மன்னிப்புக் கேட்டார். ஓர் அருள்பணியாளரின் ஆலோசனையின்படி அவர் கத்தோலிக்கரானார். அச்செய்தி எங்கும் பரவியது. மக்களும் அவ்விடத்துக்கு திருப்பயணம் வரத் தொடங்கினர். 1947ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி திருவெளிப்பாடு அன்னைமரியாவின் திருவுருவத்தைத் திருத்தந்தை 12ம் பத்திநாதர் ஆசீர்வதித்தார். வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திலிருந்து Tre Fontane வரை மக்கள் பவனியாக எடுத்துச் சென்றனர். இது நடந்து ஈராண்டுகள் கழித்து, 1950ம் ஆண்டில் புனித ஆண்டு தொடங்குவதன் ஒரு பகுதியாக, 1949ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி திருத்தந்தையின் சிற்றாலயத்தில் செபமாலை சொல்வதற்காக புருனோவை அழைத்தார் திருத்தந்தை 12ம் பத்திநாதர். 1986ம் ஆண்டுவரை அன்னைமரியா புருனோவுக்கு 28 தடவைகள் காட்சி கொடுத்ததாக அவரே சொல்லியிருக்கிறார். திருத்தந்தையைக் கொல்வதற்காக வைத்திருந்த பட்டாக்கத்தியையும் திருத்தந்தையிடம் அவர் கொடுத்து விட்டார்.

புனித பவுலின் தலை வெட்டப்பட்ட வேளையில் அத்தலை மூன்று முறை துள்ளிக் குதித்ததாகவும் அந்த மூன்று இடங்களிலும் நீரூற்று வந்ததாகவும் பாரம்பரியம் கூறுகிறது. அந்த மூன்று நீரூற்று இடம்(Tre Fontane) சாலைக்கு ஒரு பக்கத்திலும், திருவெளிப்பாடு மாதா திருத்தலம் சாலைக்கு மறுபக்கத்திலும் உள்ளன. உரோம் திருவெளிப்பாடு அன்னைமரியா திருத்தலத்துக்குத் தினமும் பல்வேறு மக்கள் மத, நாடு வேறுபாடின்றி செல்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 மே 2025, 13:54