MAP

திவின் அமோரே அன்னை மரியா திருத்தலம், உரோம், இத்தாலி திவின் அமோரே அன்னை மரியா திருத்தலம், உரோம், இத்தாலி   (Armando Iozzi)

அன்னை ஓர் அதிசயம் – திவின் அமோரே அன்னை மரியா திருத்தலம், உரோம், இத்தாலி

1944ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியன்று திருத்தந்தை 12ம் பத்திநாதர் திவின் அமோரே திருத்தலத்திற்குச் சென்று மக்களோடு சேர்ந்து செபித்தார். அன்னைமரியா உரோம் நகரப் பாதுகாவலி என்றும் அறிவித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலியில் நூற்றுக்கணக்கான அன்னைமரியா திருத்தலங்கள் உள்ளன. 1,500 திருத்தலங்கள் இருப்பதாக ஒரு குறிப்புச் சொல்லுகின்றது. திருத்தலம் என்று சொல்லும்போது அது அன்னைமரியாவின் காட்சியோடு அல்லது புதுமையோடு தொடர்புடையதாக இருக்கின்றது அல்லது அன்னைமரியா பக்தி, காலங்காலமாய் இடம்பெற்றுவரும் இடமாகவும் இருக்கின்றது. இந்தத் திருத்தலங்கள், மக்கள் அடிக்கடி விரும்பித் திருப்பயணம் மேற்கொள்ளும் இடங்களாகவும் அமைந்துள்ளன. உலகில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்னைமரியா திருத்தலங்களின் வரலாற்றைப் பார்த்தோமென்றால், அவ்விடங்களில் இளஞ்சிறாருக்கு அல்லது ஏழை எளிய மக்களுக்கு அன்னைமரியா காட்சி கொடுத்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, 1531ம் ஆண்டில் மெக்சிகோ நாட்டு குவதலூப்பேயில் (Guadalupe) ஹூவான் தியேகோவுக்கும், 1858ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு லூர்து நகரில் பெர்னதெத் சுபிரியோவுக்கும் (Bernadette Soubirous), தமிழகத்தின் வேளாங்கண்ணியில் 16ம் நூற்றாண்டில் பால்காரச் சிறுவனுக்கும் அன்னைமரியா காட்சி கொடுத்த நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஜெர்மனியின் Altötting அருளின் அன்னை சிற்றாலயத்திலுள்ள கறுப்பு அன்னைமரி திருவுருவத்தை ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தரிசித்து வருகின்றனர். உரோமையிலுள்ள திவினோ அமோரே என்ற இறையன்பு அன்னைமரித் திருத்தலத்தையும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்தத் திவின் அமோரே அன்னைமரித் திருத்தல வரலாறு 13ம் நூற்றாண்டோடு தொடர்புடையது.

உரோமைக்கு ஏறக்குறைய 15 கிலோ மீட்டரில் இருக்கின்ற திவினோ அமோரே என்ற அன்னைமரியாத் திருத்தலம் அமைந்துள்ள இடம் அக்காலத்தில் விவசாய நிலமாகவும், புல்பூண்டுகள் நிறைந்த காட்டுப் பகுதியாகவும் இருந்தது. அவ்விடத்தில் சவெல்லி-ஓர்சினி(Savelli-Orsini) குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு கோட்டை(fortress) இருந்தது. அந்தக் கோட்டைக்கு லேவா (Leva) கோட்டை என்று பெயர். அந்தக் கோட்டையின் ஒரு கோபுரத்தில் அன்னைமரியாவின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அன்னைமரி அரியணையில் அமர்ந்திருப்பது போலவும், அவரது கரங்களில் குழந்தை இயேசுவைத் தாங்கி இருப்பது போலவும், தூய ஆவியின் அடையாளமாக, ஒரு மாடப்புறா அன்னைமரியா மீது இறங்குவது போலவும் அந்தப் படம் வரையப்பட்டிருந்தது. இந்தப் படம் அந்தப் பகுதி இடையர்களால் அதிகம் வணங்கப்பட்டு வந்தது. 1740ம் ஆண்டின் வசந்த காலத்தில் அவ்வழியாக உரோமைக்குச் சென்ற வழிப்போக்கர் ஒருவர் அவ்விடத்தில் ஓநாய்கள் கூட்டத்தால் கடுமையாய்த் தாக்கப்பட்டார். அவை அந்த ஆளைக் கொன்று போடும் அளவுக்குத் தாக்கின. ஆதரவின்றித் தனியாய்த் தவித்த அந்த வழிப்போக்கர் அவ்விடத்தில் அன்னைமரியாவின் திருவுருவப் படத்தை ஏறெடுத்துப் பார்த்தார். இறைவனின் தாயே எனக்கு உதவி செய்யும் என அழுது மன்றாடினார். உடனடியாக அந்த ஓநாய்கள் அமைதியாகி காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டன. இந்த அற்புத நிகழ்வுக்குப் பின்னர், அவ்வாண்டு செப்டம்பர் 5ம் தேதியன்று அப்படம் அந்தக் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்டு, அதற்கு அருகிலிருந்த “லா ஃபல்கோனியானா”  (La Falconiana) என்ற பெரிய தோட்டத்திலிருந்த அன்னைமரியா சிற்றாலயத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர், ஐந்து ஆண்டுகள் கழித்து, அதாவது 1745ம் ஆண்டு ஏப்ரலில் அந்தத் திருவுருவப் படம் முன்பு இருந்த இடத்துக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டது. அவ்விடத்தில் ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டது. அதனை, கர்தினால் கார்லோ ரெட்சோனிக்கோ(Carlo Rezzonico) திருநிலைப்படுத்தினார். இவர்தான் பிற்காலத்தில் திருத்தந்தை 13ம் கிளமெண்ட்டாக, திருஅவையை வழிநடத்தினார்.

இதற்குப் பின்னர் திவின் அமோரே அன்னைமரியாத் திருத்தலத்துக்கு மக்கள் திருப்பயணமாகச் செல்லத் தொடங்கினர். இது இன்றுவரைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் புனித சனிக்கிழமை தொடங்கி அக்டோபர்வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் இரவில் உரோமையிலிருந்து ஏறக்குறைய 15 கிலோ மீட்டர் தூரம் எரியும் மெழுகுதிரிகளுடன் செபங்களைச் செபித்துக்கொண்டு திருயாத்திரையாக நடந்தே அத்திருத்தலம் செல்கின்றனர். நிறம், இனம், மொழி, நாடு, மதம், என்ற வேறுபாடின்றி எல்லா மக்களும் இதில் பங்கெடுக்கின்றனர். இந்த திவின் அமோரே அன்னைமரியாவின் திருவுருவப் படத்திற்கு 1883ம் ஆண்டு மே 13ம் தேதி வத்திக்கான் கிரீடம் சூட்டியது. 1932ம் ஆண்டு இந்தத் திருத்தலம் பங்குத்தளமானது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஒரு புதுமையும் இடம்பெற்றுள்ளது. 1944ம் ஆண்டு சனவரி 24ம் தேதியன்று உரோம் அழியக்கூடிய கடும் ஆபத்தை எதிர்நோக்கியது. அச்சமயத்தில் திவின் அமோரே அன்னைமரியாத் திருவுருவப் படத்தை உரோமைக்குக் கொண்டு வந்து பல பங்கு ஆலயங்களுக்கு எடுத்துச் சென்றனர். இந்த ஆலயங்களில் கடைசியாக, இயேசு சபையினரின் புனித இஞ்ஞாசியார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது 1944ம் ஆண்டு ஜூன் 4ம் தேதியாகும். தங்கள் வாழ்வைப் பதுப்பிப்பதாகவும், புதிய திருத்தலம் ஒன்றைக் கட்டுவதாகவும், பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதாகவும் அன்று உரோம் மக்கள் அன்னைமரியாவுக்கு ஓர் உறுதிமொழி கொடுத்தனர். உரோமையும் அற்புதமாகக் காப்பாற்றப்பட்டது. 1944ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியன்று திருத்தந்தை 12ம் பத்திநாதர் இந்தத் திருத்தலத்திற்குச் சென்று மக்களோடு சேர்ந்து செபித்தார். திவின் அமோரே அன்னைமரியா உரோம் நகரப் பாதுகாவலி என்றும் அறிவித்தார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இத்திருத்தலத்தின் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டன. பிறரன்புப் பணிகளும் நடந்தன. 1979ம் ஆண்டு மே முதல் தேதி முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் இத்திருத்தலம் சென்று, அதனை உரோமின் அன்னைமரியா திருத்தலம் என்று அறிவித்தார். மரியா ஆண்டு தொடக்கத்தையொட்டி 1987ம் ஆண்டு ஜூன் 7ம் தேதியன்று மீண்டும் திருத்தந்தை 2ம் ஜான்பால் இத்திருத்தலம் சென்றார். 1999ம் ஆண்டில் புதிய திருத்தலம் கட்டப்பட்டது. திவின் அமோரே அன்னைமரியாத் திருத்தலத்தில் பக்தர்கள் நன்றியாக செலுத்திய காணிக்கைப் பொருள்களைப் பார்த்தாலே இந்தத் தாயின் அருமை பெருமை நமக்குப் புரியும் இந்த திருத்தலத்தின் பழமை வாய்ந்த கோவிலை ஒட்டிய அறையில் நன்றி காணிக்கைப் பொருட்கள் சுவரில் பதிக்கபட்டு மக்கள் பெற்ற அருள்களின் சாட்சியாக உள்ளன. இந்த கொவில் இருக்கும் குன்றின் அடிவாரத்தில் புதிய நவீன கோவில் நான்கு பக்கமும் கண்ணாடியால் அமைக்கப்பட்டு உள்ளது.

அன்னையின் அருள் வேண்டி செபிப்போம். இறைவனின் தாயாம் மரியாவிடம் நம்பிக்கையோடு அண்டிச் சென்றவர்கள் யாரும் வெறுங்கையோடு திரும்பியதில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 மே 2025, 09:22