ஹெய்ட்டி குழந்தைகளுக்கு உணவு வழங்கி வரும் சலேசிய மறைப்பணியாளர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஹெய்ட்டியில் நிலவிவரும் தொடர்ச்சியான மனிதாபிமான நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, சலேசிய சபையைச் சேர்ந்த மறைப்பணியாளர்கள் ஏறத்தாழ 2,300-க்கும் மேற்பட்ட அதன் குழந்தைகளுக்கு வழக்கமான உணவை வழங்கி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது ஃபீதேஸ் எனப்படும் செய்தி நிறுவனம்.
மே 30, வெள்ளிக்கிழமை, இந்தத் தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், சலேசிய மறைப்பணியாளர்கள் பசிக்கு எதிரான எழுச்சி என்ற அமைப்புடன் இணைந்து தொன் போஸ்கோ டெக்னிக், லக்கே தொன் போஸ்கோ மற்றும் வின்சென்ட் பிறரன்பு அமைப்பு ஆகிய மூன்று மையங்களில் ஏறத்தாழ 2,300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாள்தோறும் ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கி வருகின்றனர் என்றும் கூறியுள்ளது.
வறுமை மிகுந்த பகுதிகளில் அமைந்துள்ள இந்த மையங்கள், பாதுகாப்பான இடங்கள், கல்வி மற்றும் சமூக ஆதரவை வழங்குகின்றன என்றும், உணவு வழங்கி பசியைப் போக்குவது மட்டுமன்றி, கற்றலையும் மேம்படுத்தி வருகிறது என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
சலேசிய சபையைச் சேர்ந்த மறைப்பணியாளர்கள் கடந்த 1935-ஆம் ஆண்டு முதல் ஹெய்ட்டியில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர் என்றும், தற்போது 11 முக்கிய நிறுவனங்களையும் 200-க்கும் மேற்பட்ட சிறிய கல்வி மையங்களையும் நடத்தி வருகின்றனர் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிடுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்